Saturday, September 17, 2005

தமிழ் நூல்களின் தேக்கமும்.... நூலகத் துறை தரும் ஊக்கமும்.....

பல இலட்சம் பெறுமதியான தமிழ் நூல்களைக் கடந்த பல ஆண்டுகளாக இருப்பில் வைத்திருக்கிறோம்; இவற்றை விற்பனை செய்ய முடியாமல் திணறு கிறோம் என்று மூத்த தமிழ்ப் பதிப்பாளர் ஒருவர் அண்மையில் அங்கலாய்ப்புடன் கூறியிருந்தார்.
இவர் மட்டுமல்ல; தமிழ் நாட்டி லுள்ள நூற்றுக்கும் அதிகமான தமிழ் நூல்களைப் பதிப்பதையே தொழிலாகவும் வாழ்வாக வும் கொண்ட பல தமிழ்ப் பதிப்பாளர்கள் இவ்வாறு கூறிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டிலும் தமிழ்கூறும் நல்லுலகி லும் தமிழ்நூல் பதிப்பாளர்களை இருவகை யாகப் பிரிக்கலாம். தாம் எழுதிய நூல் களைத் தாமே அச்சிட்டு, தமது பெயரி லேயோ, இல்லத்தவர் பெயரிலேயோ பதிப்பித்து வெளியிடுபவர் ஒருவகை.
எழுத்தாளர்களிடம் ஆக்கங்களைப் பெற்று அச்சிடுவித்து, பதிப்பிப்பவர் மற் றொரு வகை.
பதிப்பாளர்கள் அனைவருமே விற்பனையாளர்களாக இருந்தாலும் முதல் வகையினர் பலர் இரண்டாவது வகை யினரை நாடி விற்பனை உரிமையை வழங்கி விடுவதால், இரண்டாவது வகையினரே பெரும்பான்மையான தமிழ் நூல்களின் விற்பனையாளர்களாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் தமிழ்நூல்களை விற் பனை செய்வதற்காக மட்டுமுள்ள நிறுவ னங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
ஆனால் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழர் வாழும் நாடுகளிலும் தமிழ் நூல் பதிப்பாளரை விட, தமிழ் நூல்களை விற்பனைக்காக மட்டுமே வைத்திருப்போரின் எண்ணிக்கை மிக அதிகம்.
50 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தறிவு பெற்ற தமிழர்களின் எண்ணிக்கையைப் போன்று 5 மடங்குகள் அதிக எண்ணிக் கையில் இப்பொழுது தமிழர் உளர்.
தமிழகத்தின் மக்கள் தொகையில் 15% எழுத்தறிவு பெற்றிருந்த காலம் போய் இன்று 70% எழுத்தறிவு பெற்றோர் காலமாகியுள்ளது. ஏனைய மாநிலங் களிலும் தமிழர் வாழும் நாடுகளிலும் எழுத்தறிவு பெற்ற தமிழர் 70% ஆக இருந்தவர்கள் இன்று 90% ஆக உயர்ந்துள்ளனர்.
50 ஆண்டுக்கால இவ்வளர்ச்சி அறிவுப் பசியையும் வாசிப்புத் தாகத்தையும் வளர்த்து விட, அதற்கு ஊட்டமாகக் கிடைத்தவை எண்ணிக்கையிலும் விற்ப னையிலும் சில தசாப்தங்களில் பன்மடங்கு பெருகிய நாளிதழ்களும் சஞ்சிகைகளுமே ஆகும்.
இந்தியாவிலேயே அதிக வாசகர்களைக் கொண்டதான நாளிதழும் வார இதழும் தமிழிலேயே வெளிவருவதாகக் கூறுகின் றனர்.
அறிவுப் பசியையும் வாசிப்புத் தாகத் தையும் தகவல் ஊடகங்கள், துணுக்குப் பக்கங்கள், சிறுகதை, நாவல்கள், தமிழ ருக்கு நிறைவு செய்ய முயலும் அளவுக்குத் தமிழ் நூல்கள் நிறைவு செய்யவில்லை.
ஆறு இலட்சம் படிகளை நாளொன் றுக்கோ, வாரம் ஒன்றுக்கோ விற்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்ற நாளிதழைப் போன்றோ, சஞ்சிகையைப் போன்றோ தமிழ்நூல் எதுவும் விற்பனையில் வளர்ச்சி அடையவில்லை.
மு. வ. வின் திருக்குறள் தெளிவுரை யைப் பல தசாப்தங்கள், பல பதிப்புகள் ஊடாக இருபது இலட்சம் படிகள் வரை மட்டுமே விற்க முடிந்ததை அதன் பதிப்பாளர் கூறி உள்ளார்.
50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழ்நூலுக்கான அச்சாணை 1,000 படிகளாக இருந்தது. இன்றும் ஒரு தமிழ்நூலுக்கான அச்சாணை 1,000 படிகளாகவே உள்ளமை வேதனைக்குரியது.
தமிழகத்தின் மக்கள் தொகையும் பிரான் சின் மக்கள் தொகையும் ஒரே அளவாக இருந்தாலும் பிரான்சில் நாவலாசிரியர் ஒருவரின் நூலுக்குரிய அச்சாணை 25,000க் குக் குறையாது. புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆயின் முதல்பதிப்பின் அச்சாணையே ஒரு இலட்சத்திற்குக் குறையாமல் உள்ளதாம்.
தமிழரைப் போன்று ஒன்றரை மடங்கு மக்கள் தொகை அளவுள்ள ஜெர்மனியரும் இரண்டரை மடங்கு மக்கள் தொகை அளவுள்ள யப்பானியரும் வெளியிடும் பெரும்பான்மையான நூல்களின் அச்சாணை 10,000க்குக் குறைவதில்லை. ஒரே பதிப்பின் அச்சாணை பல இலட்சங்களைத் தாண்டா மலும் இல்லை.
ஆய்வேடுகள், வணிக உள்ளக ஏடுகள், சங்கங்களின் செய்தி மடல்கள், சிற்றிதழ்கள் போன்றவை மட்டுமே நூறு தொடக்கம் சில ஆயிரங்கள் வரை பிரெஞ்சு, ஜெர்மனி, யப்பான் முதலிய மொழிகளில் ஒரு பதிப்பில் அச்சாகின்றன.
அண்மையில் மதுரையில் நடந்த வெளியீட்டு விழாவில் 2,000 பக்கங்கள் வரை கொண்ட தமிழ்நூலொன்றின் 20,000 படிகள் ஒரே நாளில் விற்பனை ஆயின. அதே நூல் அடுத்த 12 மாதங்களுள் சில பதிப்பு களைக் கண்டு 2 இலட்சம் பிரதிகள் வரை விற்பனை ஆகியுள்ளதாம். தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர்கள் அவையும் திருவிவிலியச் சங்கமும் இணைந்து வெளியிட்ட திருவிவிலியம் அவ்வாறு விற்பனையாயிற்று. வேறெந்தத் தமிழ் நூலுக்கும் இவ்வளவு விற்பனைச் சிறப்பு கிடைக்குமா என்பது ஐயமே!
ஆண்டொன்றுக்குச் சராசரியாக இரண்டாயிரம் தலைப்புகளில் தமிழ் நூல்கள் வெளிவருகின்றன. இந்த எண்ணிக்கை, கடந்த இரு தசாப்தங்களாக அதிகரிக்கவில்லை. இவ்விரண்டாயிரம் நூல்களும் முதல் பதிப்புகள் அல்ல. இவற்றுள் மூன்றில் ஒரு பங்கு தலைப்புகள் மறுபதிப்பு காண்பவை.
தமிழகத்தில் வெளியாகும் இத்தலைப் புகளின் துறை/பாட விகிதாசாரம் காலத்துக் குக் காலம் மாறி வந்துள்ளது. சிறுவர், நீதி, இலக்கிய, பக்தி நூல்கள் முன்பு அதிக விகிதாசாரத்தில் வெளிவந்தன.
இப்பொழுது சிறுகதை, நாவல், சோதிடம், சிறுவர், தன்னம்பிக்கை, பக்தி நூல்கள் அதிக விகிதாசாரத்தில் வெளிவரு கின்றன. இப்பொழுது விற்பனைக்குள்ள 35,000 வரையான தலைப்புகளுள் 15% அல்லது 20% வரை சிறுகதை, நாவல்களும், சிறுவர், சோதிடம், சமயம் என்பன தலா 10%, தன்னம்பிக்கை, மருத்துவம் என்பன தலா 5% உள்ளன.
50 ஆண்டுகளுக்கு முன்பு 30% இருந்த இலக்கியத் தலைப்புகள் இப்பொழுது 5% அளவு கூடஇல்லை.
விற்பனையின் அளவு பெருகுவதை ஊக்குவிக்காத அளவுக்கு தமிழக நூலகத் துறையின் கொள்வனவு அமைகிறது.
எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் நூலை எழுதும்போதும் தயாரிக்கும் போதும் இந்த நூலைத் தமிழக நூலகத் துறை வாங்குமா? அதற்கு ஏற்றதாகக் கருத்து, அச்சுப் புள்ளியளவு, விலை, அச்சுமுகம், தாள், பக்க எண், அட்டை வடிவமைப்பு என்பன உள்ளதா? என வினவிக் கொள்கிறார்கள். நூலகத் துறை அமைத்துள்ள வரம்புக்குள் நூலின் தன்மை அமைந்துவிட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
நூலகத் துறை தரக்கூடிய விலைக்குள் செலவுகள் அடங்குமா? அடங்க வேண்டும் எனக் கண்காணிக்கிறார்கள். பெரும்பா லான நூல்கள் அந்த ஆண்டுக்குள் நூலகத் துறை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் சில வாரங்களுக்கு முன்பாகத்தான் அச்சாகி முடிகின்றன.
முதலில் ஒரு காலக்கெடுவை வைக்கும் நூலகத் துறை, பதிப்பாளர் வேண்டுகோளை ஏற்றுக் காலக்கெடுவை நீட்டிப்பதும் உண்டு.
தொடக்கத்தில் 200 படிகள், பின்பு 300, பின்பு 400 என அதிகரித்த நூலகப் படிகள், இப்பொழுது 850 படிகள் வரை ஆகியுள்ளது. அச்சாணையிடும் 1,200 படிகளுள் 150 படிகள் நூலாசிரியருக்கு உரிமத்துக்கு ஈடாகவும் 850 படிகள் வரை நூலகத் துறைக்காகவும் ஒதுக்க, எஞ்சிய படிகள் விற்பனைக்கு வருகின்றன. வராமலும் இருந்து விடுவதும் உண்டு.
நூலகத் துறை வாங்குவதற்குத் தெரிவு செய்யாவிட்டால் தனிப் பதிப்பாளர் வீட்டுக்குள்ளேயும், பெரும்பதிப்பாளர் கிடங்குகள் உள்ளேயும் கட்டுக்கட்டாக அட்டிகளில் அவை அடுக்கிக் கிடக்கும்.
விரல்விட்டு எண்ணக்கூடிய பதிப்பாளர் களின் விளம்பரங்கள்தான் வெளிவருகின் றன. எங்கோ வெளியாகும் பிறமொழி நூல்களுக்காக, தமிழகத்தில் செலவாகும் விளம்பரத் தொகையை விட, தமிழ் நூல்களுக்காகச் செலவாகும் விளம்பரத் தொகை மிகக் குறைவு.
ஆங்கில மொழியில் வெளிவரும் இந்திய மற்றும் பிறநாட்டு நூல்களுக்கான விமர்சனங்களுக்காகவும் வருகைப் பதிவு களுக்காகவும் ஆங்கில நாளேடுகள் வாரத்தில் 3, 4 பக்கங்களை ஒதுக்குகின்றன. தமிழ் நூல்களுக்காக ஆகக்கூடியது அரைப் பக்கத்தைத் தான் பல நாளிதழ்கள் ஒதுக்குகின்றன. ஏனைய தமிழ் நாளிதழ் களில் சிறு சிறு பத்திகளில் மதிப்புரை எழுதுகின்றனர் அல்லது புத்தக வரவு குறித்து ஓரிரு வரியில் குறிப்பிடுகின்றனர்.
நூலகத் துறையை நோக்கிய தமிழ்நூல் தயாரிப்பு ஓயும்வரை எழுத்தறிவும் வாசிப்புப் பழக்கமும் அறிவுத் தாகமும் கொண்ட தமிழர்களிடம் நல்ல தமிழ் நூல்கள் போய்ச் சேருவது இடரே!
பதிப்பாளர்கள் தமது நூல்களின் விலைப்பட்டியல்களை ஆண்டுதோறும் அச்சிடுவதுடன் அவற்றுக்கான விளம்பரங் களை நிறுத்திவிடுகின்றனர்.
வாங்கும் சக்தி படிப்படியாக அதிக ரித்துக் கொண்டும் நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை பெருகிக் கொண்டும் வருவ தைப் பயன்படுத்தி நுகர்ச்சிப் பொருள் களைத் தாராளமாகப் பல்வேறு ஊடகங் களில் விளம்பரம் செய்துவரும் இந்நாளில் எங்கு? யாரிடம்? என்ன விலையில் கிடைக் கும்? என்ற விவரங்கள் குதிரைக் கொம்பா கவே உள்ளது.
விரைந்து விற்பனையாகும் ஒரு சில தலைப்புகளை மீண்டும் மீண்டும் பதிப்பித்தும், அரசுடைமை ஆகியுள்ள நூல்களினை பதிப்பித்தும் தமிழ்நூல் விற்பனையின் தேக்கத்தைப் போக்கும் முயற்சியே அதிகம்.
நல்ல, தரமான தமிழ்நூல்கள் அறிவுப் பசியை, வாசிப்புத் தாகத்தை நிறைவு செய்து, தமிழருக்கு வளர்ச்சிக்குப் படிக்கட்டாக அமைவதற்கு உரிய வியூகங்களையும் விற்பனைச் சாதுரியங் களையும் வகுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்ப் பதிப்புலகம் உளது.