Wednesday, September 21, 2005

சிறிய அளவில் புத்தகக்காட்சி

1. அறிமுகம்:
கண்களால் காண்பவர் ஒருபுறம், அவர் கண்களை ஈர்க்கும் பொருள் மறுபுறம் - என்ற பொருள் அண்மைக் காலங்களில் காட்சி என்ற சொல்லுக்கு வந்துள்ளது.
அழகாக இருக்கும் எவையும் கண் களைக் கவர்கின்றன. எனவே,புத்தகக் கண்காட்சியில், நுழைவாயில் தொடக்கம் வெளியேறும் வாயில் வரைக்கும், எங்கும் எதிலும் அலங்காரமும், அழகும், ஒப்பனை யும், ஒழுங்கும் ஓங்கியிருக்க வேண்டும்.
2. அடிப்படைத் தேவைகள்:
காணவரும் மக்களுக்குரிய அடிப் படைத் தேவைகளான குடிநீர், சிற்றுண்டி, கழிவறை, வண்டி ஒதுக்குமிடம், ஓய்விடம், கைப்பை யாவும் காட்சி வளாகத்துள் அமைக்க.
சுத்தமான குடிநீரையும், சிற்றுண்டியை யும் வழங்கக்கூடிய கடைகள் காட்சி வளாகத்துக்கு அருகில் இருந்தால், உள்ளே வசதிகள் தேவையில்லை. அப்படி யில்லா விட்டால் கட்டாய மாகக் குடிநீர், குளிர் பானம், சிற்றுண்டிக்கான விற்பனைக் கூடம் ஒன்று காட்சி வளா கத்துள் அமைக்க.
கழிவறைகள் சுத்தமாக இருக்க வேண்டும். இதற்காகச் சுத்தம் செய்பவர் ஒருவர் போதுமான தண்ணீர் வசதி யுடன் எப்போதும் அங்கே காத்திருப்பாராக.
வண்டி நிறுத்துமிடத்தில் போதிய பாதுகாப்புத் தருக. வண்டிகளை எண்ணிட்டு, அடுக்காக வைத்து, மீள உரியவரிடம் சேர்க்கும் வரை, அவற்றுக்குச் சேதம் எதுவும் ஏற்படாது இருப்பது மிக முக்கியம். இதற்காகச் சிறிய தொகையைப் பெற்றுக் கொள்வதிலும் தவறில்லை.
களைப்புற்றவர், குழந்தைகளோடு வந்த தாய்மார், முதியவர், ஓய்வெடுப்பதற்காகக் காட்சி வளாகத்துள் மரநிழல் உள்ள வெளியில் நாற்காலிகள் பல அமைக்க.
காட்சி முடிந்து செல்வோர் தாம் வாங்கியவனவற்றை எடுத்துச் செல்லக் கைப் பைகளைத் தேடுவர். இவற்றைக் காட்சி வளாகத்தில் விற்பனைக்கு வைக்க.
வண்டி நிறுத்துமிடம், கழிவறை, குடி நீர்க் கூடம், ஓய்விடம் ஆயன செல்வதற் கான அம்புக் கோடிட்ட அறிமுகத் தட்டி களைக் காட்சி வளாகத்தில் முக்கிய இடங் களில் வைக்க.
இந்த அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே காட்சி வளாகத்திற்குள் வருபவர் தன்னம்பிக்கையோடும், பாதுகாப்பு உணர் வுடனும், பழகிய இடம் போன்ற கலகலப்புடனும், காட்சிக்கு வைத்துள்ள பொருள்களைப் பார்வையிடுவர்.
3. காட்சிப் பொருள், காட்சிக் கூடம்:
காட்சிப் பொருள், நூல்களாக இருக் கலாம், குறுந் தகடுகளாக இருக்கலாம், ஒலி-ஒளி நாடாக்களாக இருக்கலாம், ஓவியங்களாக இருக்கலாம், மழலையர் விளையாட்டுப் பொருள்களாகவும் இருக்கலாம். இவையாவும் புத்தகக் காட்சி சார்ந்த பொருள்களே.
கண் மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் மேலேயும் போகாமல் ஒரு மீட்டர் கீழேயும் போகாமல் உள்ளதான அடுக்குத் தட்டு களில் புத்தகங்களை வைப்பது காண்பவ ருக்கு எளிதாக இருக்கும்.
மேசைகளில் புத்தகங்களை அடுக் குவதானால் அந்த மேசைகளருகே நின்று பார்க்கும் ஒருவரின் கண்ணிலிருந்து 45 செமீ.க்குக் கீழே போகாத உயரத்தில் புத்தகங்களை அமைக்க. குனிந்தவாறு பார்த்துக் கொண்டே போகுமாறு வைத்தால் காண்பவரின் களைப்பு அதிகமாக, விரை வில் காட்சி வளாகத்திலிருந்து நீங்கி விடுவார்.
மழலையர் விளையாட்டுப் பொருள் களையும், நூல்களையும் குறைந்த உயரத் திலும், நடுநிலைப்பள்ளி மாணவர் நூல் களை இடைப்பட்ட உயரத்திலும், வளர்ந் தோர்க்கான நூல்களை உயர்ந்த மேசை களிலும் வைப்பதன் மூலம் காட்சிக்கு வரும் அனைத்து வயதினரையும் கவரலாம்.
நடைஓடைகள் குறுகலாக இருக்கக் கூடாது. கூட்டமாக வருவோர் ஒருவரை ஒருவர் அழைத்துப் பொருளைச் சுட்டிக் காட்டி அலசக்கூடியவாறு நடைஓடைகள் இருக்கவேண்டும்.
4. இடம்:
காட்சி வளாகம் பள்ளியாக இருப்பதே பொருத்தம். திருமண மண்டபத்தையோ, நூலகக் கட்டிடத்தையோ, சமூகக் கூடங் களையோ பயன் படுத்தலாம். ஆனாலும் எந்த இடமும் மக்கள் நடந்தே வந்து போகக்கூடிய குறுந் தூரத்தில் இருக்க வேண்டும்.
புத்தகக் காட்சிகளுக்குப் பள்ளிகளே சிறந்த இடங்கள். அங்கே அறைகள் இருக்கும், மேசைகள் இருக்கும், கழிவறை கள் இருக்கும், திறந்த வெளிகள் இருக்கும், கூட்டத்தை ஒழுங்கு செய்யக்கூடிய அமைப்பும் இருக்கும். புத்தகங்களின் அருமை தெரிந்த மாணவர்களும், ஆசிரி யர்களும் அங்கிருப்பர். வாடகை எதுவும் கொடுக்காமல் அவ்விடங்களைப் பெற லாம்.
5. காலம்:
மாதத்தில் முதல் கிழமையின் வியா ழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாள்களுமே புத்தகக் காட்சிக்கு உகந்த காலமாகும்.
மாதச் சம்பளம் வாங்குவோர், ஓய்வு ஊதியம் பெறுவோர் யாவரிடமும் மாதத் தொடக்கத்தில் பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். வணிகரிடமும், தொழிலாளரிடமும் இந்தப் பணப் புழக்கம் நீளும். புத்தகங்களை வாங்குவதற் குரிய ஆர்வ மும் கவர்ச்சியும் இருந்தாலும் பணப் புழக்கம் இருந்தாலே காட்சிக்கு மக்கள் வருவர்.
காட்சி வளாகத்துள் காட் சிப் பொருள்களை அடுக்கும் பணியும், வளாகத்தை அலங் காரம் செய்யும் பணியும், தொண்டர்களையும், பணி யாளர்களையும், காட்சிக் கூட உரிமையாளர்களையும் இணைத்துப் பணிப்புரைகள் வழங்கி அங்கேயே தங்கும் வசதிகள் செய்து கொடுக்கும் பணியும், புதன் மாலையி லிருந்தே செய்ய வேண்டிய தால் அதற்கேற்ப இட அனுமதி முன்கூட் டியே பெறுக.
வியாழனும், வெள்ளியும் மாலை 2 மணி முதல் இரவு 8 மணி அல்லது 9 மணி வரை காட் சிக்கு ஏற்ற நேரங்கள்.
சனியும், ஞாயிறும் காலை 10 மணி முதல் இரவு 8 அல்லது 9 மணி வரை காட்சிக்கு ஏற்ற நேரங்கள்.
திங்கள் காலை 12 மணி வரை காட்சி வளாகம் தேவை. ஏனென்றால் ஞாயிறு இரவுக் காட்சி முடிந்த பின்பு திங்கள் காலை தான் அடுக்குகளைக் குலைத்துப் பொருள் களை வெளியே எடுத்துச் செல்லலாம். அதற்கேற்றவாறு அனுமதி பெறுக.
6. விளம்பரம்:
சுவரொட்டிகள், துண்டு வெளியீடுகள், இதழ்களில் விளம்பரங்கள், பள்ளி விளம் பரப் பலகைகளில் அறிவித்தல்கள், வணிக நிறுவனம் முன்பு தட்டி விளம்பரங்கள், தெருக்களுக்குக் குறுக்கே பதாகைகள், வானில் பறக்கும் பலூன் விளம்பரம், உள்ளூர் வானொலியில், கம்பிவழித் தொலைக்காட்சியில் ஒலி-ஒளி விளம்பரங் கள் போன்ற பன்முக அணுகுமுறையில் காட்சிக்கு வரக்கூடியவர்களை நோக்கி விளம்பரங்களை அமைக்க.
செய்தியாளர்களை அழைத்துப் புத்தகக் காட்சி பற்றிய செய்திகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்க. குழு எடுக்கும் முடிவுக ளுள் முக்கியமானவற்றை அறிக்கையாக்கிச் செய்தியாளரிடம் வாரந் தோறும் வழங்குக.
காட்சி நடக்கும் நாள்களில் அச்சு, ஒலி, ஒளி ஊடகங்களின் செய்தியாளரும், படப் பிடிப்பாளரும் காட்சியின் முக்கிய நிகழ்ச்சி களைக் குறித்துக் கொள்ளுமாறு பார்க்க.
படப்பிடிப்பாளர் ஒருவர் முக்கிய நிகழ்ச்சிகளை படம் எடுக்குமாறும், வெளி யூர்களிலிருந்து வந்து காட்சிக் கூடங்களை அமைத்தவர்களைப் படங்களில் பதிவு செய்யுமாறும் பார்த்துக் கொள்வதுடன் அப்படங்களின் ஒவ்வொரு படி செய்தியாளர்களையும், படங்களில் உள்ளவர்களையும் சென்றடையுமாறு பார்த்துக் கொள்க.
7. நிகழ்ச்சிகள்:
புகழ் பெற்றவர்களையும் வசதி படைத்தவர்களையும் நாள்தொறும் அழைத்துக் காட்சியைத் திறப்பதும், மாலை நிகழ்ச்சிகளுக்கு முன்னிலையாக்குவதும், மக்களைக் கவரும்.
மாலைகளில் மாணவர்கள் பலர் பங்களிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினால் பங்களிக்கும் மாணவர்களு டைய உறவினர், சுற்றத்தினர், நண்பர் யாவரும் கலை நிகழ்ச் சிக்காக வருவர். இவர்கள் புத்தகக் காட்சிக்கும், காட்சிக் கூடத்துக்கும் செல்வராதலால் விற்பனை பெருகும்.
8. பார்வையாளர் கூட்டம்:
காட்சி நடக்கும் நாளொன்றுக்கு ஆகக் குறைந்தது இரண்டாயிரம் பார்வையாளர் களாவது வரவேண்டும்.
பள்ளி முதல்வர்களுடன் பேசி, பள்ளி மாணவர்கள் அனைவரும் வியாழனும், வெள்ளியும் காட்சிக்கு வந்துபோகுமாறு அமைக்க.
அலுவலகங்களில் பணிபுரிவோர் சனி, ஞாயிறும், வணிகர்கள் ஞாயிறன்றும் காட்சிக்கு வந்துபோகுமாறு பார்த்துக் கொள்க.
பார்வையாளர் போதுமான நிதி ஆதாரங் களுடன் வந்தாலே புத்தகங்கள் விற்பனை யாகும். பள்ளி முதல்வரிடமும், ஆசிரி யரிடமும், மாணவரிடமும் இச் செய்தி போகுமாறு பார்த்துக்கொள்க.
9. அமைப்புக் குழு:
ஆகக் குறைந்தது ஐந்துபேர் கொண்ட குழு இப்புத்தகக் காட்சியை நடத்தலாம். இக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைப் பகுத்தெடுத்துச் செய்வதுடன் திட்டமிடலிலும், நெறிப்படுத் துதலிலும் ஒருவொருவருக்கொருவர் உதவியாக இருப்பர்.
காட்சி தொடங்க, நாற்பத்தைந்து நாள்கள் இருக்கையிலேயே, இக்குழு தன் பணிகளைத் தொடங்க வேண்டும்.
1. இடம்,
2. அலங்காரம் - விளம்பரம்,
3. சுத்தம் - பாதுகாப்பு,
4. நிகழ்ச்சியமைப்பு,
5. பொது ஆட்சி
ஆகிய ஐந்து துறைகளையும் ஐந்து பேரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
இடத்துக்குப் பொறுப்பானவர், இடத் தைத் தெரிவு செய்து, கண்காட்சிக்குத் தேவையான அனைத்துத் தன்மைகளும், அடிப்படை வசதிகளும், அடுக்குகளும் அங்கு உள்ளதை உறுதி செய்து, உரிய அனுமதிகள் பெற்று, இடம் திருப்பிக் கொடுக்கும் வரை பொறுப்பாக இருப்பர்.
அலங்காரம்-விளம்பரத்திற்குப் பொறுப்பானவர், முகப்பு அலங்காரம், புத்தக அடுக்கு - அழகு, கூடங்களில் போது மான அளவு வெளிச்சம், ஓடைகள் அகலம் போன்ற அனைத்துக்கும் பொறுப்பாக இருப்பதோடு, பள்ளிகள், வணிக நிறுவ னங்கள், அரசு நிறுவனங்கள், உயர்கல்வி நிலையங்கள் மற்றும் சமூகக் கூடங்களில் உள்ளவர் யாவரும் புத்தகக் கண்காட்சி நிகழ்வுப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு விளம்பரமும், செய்தியாளர்களை அடிக்கடிக் கூட்டி அறிவித்தலும் செய்வர்.
சுத்தம்-பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருப்பவர் முகப்பு, கூடங்கள், திறந்த வெளிகள், வண்டி நிறுத்தும் இடங்கள், கழிவறைகள், முகப்புக்கு எதிராக உள்ள தெருவோரங்கள் யாவும் எப்பொழுதும் சுத்தமாக இருக்குமாறு ஒழுங்குகள் செய்வதுடன், புத்தகக் காட்சித் தொடக்கத் துக்கு முதல் நாளிலிருந்து முடிவுக்கு மறுநாள் வரை களவு, தீ, மின்கசிவு, நீர்க்கசிவு, மழை ஒழுக்கு, கழிவு நீர் வருகை முதலியவற்றிலிருந்து காட்சி வளாகத் திலுள்ள அனைத்துக்கும் பாதுகாப்புக் கொடுப்பதற்காகக் காவல் துறை, தீயணைப் புத்துறை, மின்சார சபை, காப்புறுதி நிறுவனம், வளாகக் காவலர், வளாக மின்சாரி போன்ற யாவருடனும் தொடர்பாக இருந்து புத்தகக் காட்சிக்குப் பாதுகாப்பை வழங்குவர்.
நிகழ்ச்சியமைப்புக்குப் பொறுப்பாக இருப்பவர், காட்சித் தொடக்கநாள் நிகழ்ச்சிகள், நாள்தோறும் மாலையில் பள்ளி மாணவர்களைக் கொண்டு நடத்தும் கலை நிகழ்ச்சிகள், வினாவிடைப் போட்டி, மழலையர்க்கான ஓவியப் போட்டி, புதிய புத்தக வெளியீட்டு விழா, நிறைவு விழா போன்ற அனைத்து நிகழ்ச்சிகளுக் குமான கலைக் குழுக்களை யும், ஆள்களையும், புகழ் பெற்றவர்களையும் பட்டியலிட்டு, குழுவின் ஒப்புதலுடன் அவர்களைத் தொடர்பு கொண்டு, நிகழ்ச்சிகள் உரிய நேரத்தில் தொய்வின்றி நடைபெறுமாறும், உரிய செய்திகள் விளம்பரப் பொறுப்பாள ருக்கு முன்கூட்டியேப் போய்ச்சேருமாறும், நிகழ்ச்சிக்கான ஒலி-ஒளி-மேடை அமைப்புகள் செம்மை யாக இருக்குமாறும் பார்த்துக் கொள்வர்.
பொது ஆட்சியராகப் பொறுப்பேற்பவர் - பதிப்பாளர்களை அழைத்தலையும், அவர்களுக்கு உரிய கூடங்களை ஒதுக்குதலையும், அனைத்து அலுவலகப் பணிகளையும், கணக்கு வழக்குகளையும், கடிதத் தொடர்புகளையும் பார்த்துக் கொள்வதுடன் காசு, வங்கி, செலவைத் திட்டமிடுதல், செலவைக் கட்டுக்குள் வைத்திருத்தல், வருவாயை ஈட்டுதல், ஏனைய நான்கு துறையினரையும் தொடர்பு கொண்டு இணைத்தல் போன்ற பணிகளுக்குப் பொறுப்பாக இருப்பர்.
10. முடிவுரை:
மேலே கூறியவை பொதுக் கருத்து களே. அந்தந்த இடத்துக்கும் சூழலுக்கும் காலத்துக்கும் ஏற்றவாறு சிறிய அளவில் தமிழ்நூல் புத்தகக் காட்சியை அமைக்க.
தமிழ்நூல் விற்பனையைப் பெருக்கு வதற்கான பல வழிகளுள் புத்தகக் காட்சி யும் ஒன்று. அண்மைக் காலங்களில் புத்தகக் காட்சிகளை நோக்கிப் பெருந் தொகையில் கூடும் ஆர்வலருக்குத் தீனி தேவை. எழுக.

0 Comments:

Post a Comment

<< Home