Wednesday, September 21, 2005

பட்டய மெய்ப்பாளர் பயிற்சி

1.1 படைப்பாளி எழுதியது மூல ஏடு. அதை அப்படியே படியெடுக்கக் கொடுத்தபோழ்து, படியெடுத்த எழுத்தர், பாடபேதங்களையும் இடைச் செருகல்களையும் சேர்த்தார். எழுதினவர் ஏட்டைக் கெடுத்தார் என்ற பழமொழியும் எழுந்தது. ஏடுகளை நம்பியிருந்த காலத்தில் எழுத்தரே பதிப்பாசிரியருமானார்!
1.2 அச்சும் தாளும் வந்தது; அச்சிடமுன் மூலத்துடன் ஒப்புநோக்கும் வசதி வந்தது. படைப்பாளியின் மூலம் கெடாமல் அப்படியே அச்சிடக் கூடிய வசதி வந்தது.
1.3 எழுத்துப் படைப்பாளிக்கு மொழியே வாகனம். மொழி அறிவு இல்லாதவர் எழுத்துப் படைப்பாளியாக முடியாது. ஒரு துறையில் வல்லுநராயுள்ளவர் மொழியிலும் வல்லுநராயிருப்பது எளிதல்ல. எனவே எழுத்துப் படைப்பாளிக்கு மொழியியல் வல்லுநரின் உதவி கட்டாயத் தேவை. தான் எழுதியதை மொழியியல் வல்லுநரின் பார்வைக்கு அனுப்புவதால் சொல்ல வந்த பொருளை, மயக்கமின்றியும் வழுவின்றியும் சுருக்கமாக வும் எவராலும் வாசருக்குக் கொடுக்கமுடியும். தன் துறைசார்ந்த பிறிதொருவரின் பார்வைக்கு அனுப்புவதன் மூலமும் அப் பொருளில் உள்ள பொருட் குற்றங்களையும் குறைகளையும் போக்க முடியும்.
1.4 பொருட் குற்றங்களை நீக்கி, பனுவலை ஒழுங்கமைத்து, சுருக்கவேண்டியதைச் சுருக்கி, நீட்டவேண்டியதை நீட்டி, மாற்றவேண்டியதை மாற்றி, நிறுத்தக் குறிகளையும் குறியீடு களையும் ஏற்ற இடங்களில் அமைத்து, தலைப்பிட்டு, துணைத் தலைப்பிட்டு, பந்தி பிரித்து, வரை படங்கள் மற்றும் புகைப் படங்களை உரிய இடங்களில் அமைத்து, அடிக்குறிப்புகளைச் செம்மையாக்கித் தொடர்பாக்கி, மேற்கோள் பட்டியல், உசாத் துணைப் பட்டியல், சுட்டி போன்றவற்றைத் தயாரித்து, படைப்பாளியின் கருத்து எளிதாக வாசகர் உள்ளத்தில் பதியுமாறு அமைப்பவர் பதிப்பாசிரியர். ஒவ்வொரு நிலை யிலும் படைப்பாளியைக் கலந்தே பதிப்பாசிரியரின் பணி அமையும்.
1.5 படைப்பாளி உருவாக்க, துறை சார்ந்தோர் பொருட் குற்றம் நீக்க, பதிப்பாசிரியர் பனுவலைச் செம்மையாக்க, தட்டச்சாளர் கணினியில் தட்டச்சுச் செய்து பக்கமாக்கி, அச்சுப் படி ஒன்றைத் தர, மெய்ப்பாளர் பணி தொடங்குகிறது. மொழியியல் வல்லுநரே மெய்ப்பாளராகிறார்.
1.6 அச்சுத் தொழில், மொழியியல், மெய்ப்புக் குறியீடுகள் என்பனவற்றில் அறிவு, செம்யைான கையெழுத்து, பனுவற் பொருளில் பயிற்சி, இவை உடையோரே சிறந்த மெய்ப்பா ளராவர்.
1.7 எழுத்தறிவும் படிப்பறிவும் முன்னெப்பொழுதுமில்லாத அளவு தமிழரிடைப் பெருகி உள்ளது. இதனால் படைப்பாளிகள் பெருகியுளர், வாசகரும் பெருகி உளர். அச்சகங்களின் எண்ணிக்கை பெருக, பதிப்பாளர் எண்ணிக்கை பெருக, விற்பனையாளர் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. தாளில் அச்சாவதை விற்பனையாக்கும் தொழில் தமிழர் வாழ்வின் இன்றியமையததாகியுளது.
1.8 அச்சுத் தொழிலுக்குப் பயிற்சி நிலையங்கள் உள. அச்சுக்கு இறுதி வடிவம் வருமுன் சரி-பிழை பார்த்துக் கொடுக்கும் மெய்ப்பாளர் தொழிலுக்குப் பயிற்சி நிலையங்கள் மிகக் குறைவு. சென்னையில் இரண்டொரு இடங்களில் ஆங்கில மொழி மெய்ப்பாளர் கற்கை உண்டு. தமிழ் மொழி மெய்ப்பாளர் கற்கை வசதிகள் இல்லை என்றே கூறலாம்.
1.9 ஊடகங்கள், விளம்பரங்கள், அலுவலக ஏடுகள், நூல்கள், பிறவெளியீடுகள் யாவும் தவறுகளின்றி வெளிவர, ஒவ்வொரு இடத்திலும் மெய்ப்பாளர் பணி இன்றியமையாதது. சொல்திருத்தி, இலக்கண அமைதி போன்ற கணினி மென்பொருள்கள் தமிழுக்கு வந்துளவாயினும், அச்சுப் படியைத் திருத்தும் பணிக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு மேல் மெய்ப்பாளர் பணி தேவைப்படும்.
எனவே தமிழ் மொழியில் சிறந்த மெய்ப்பாள வல்லுநர்களைத் தயாரிக்க வேண்டிய தேவை உண்டு. அச்சகமும் ஒலி/ஒளி ஊடகங்களும் உள்ள இடங்களில் தொழில்முறை மெய்ப் பாளருக்கு வேலைவாய்ப்பு உண்டு. தவறற்ற தமிழ்ப் பனுவல் வெளிவருதல்; அதற்ககுத் தேவையாள மெய்ப்பாளர் பணி வாய்ப்புகைளைப் பெருக்குதல்; இதுவே இச்செயற்றிட்டத்தின் நோக்கம்.

ஏற்ற பாடத்திட்டம், தகுதி வாய்ந்த மாணவர், தக்க ஆசிரியர், தகுந்த பயிற்றுக் கூடம், களப் பயிற்சி, முழுப் பயிற்சியும் முடித்துத் தேர்வில் வெற்றிபெற்றோருக்குப் பட்டய மெய்ப் பாளர் சான்றிதழ், அச்சகங்களும் ஊடகங்களும் பதிப்பகங் களும் இச்சான்றிதழை ஏற்று வேலைவாய்ப்புக் கொடுக்கும் ஒழுங்கு.

2.1.1 அச்சுத் தொழில் - வரலாறு, ஈய அச்சு, எந்திரம், கணினி அச்சு, மறுதோன்றி எந்திரம், பிற எந்திர வகைகள், வண்ண அச்சு, எண்ணச்சு, தாள் அளவுகள், கட்டாளர் முறைகள். (கணினியகம், அச்சகம், கட்டாளரகம் யாவிலும் களப் பயிற்சி)
2.1.2 நூலாக்க முறைகள் - பக்க அளவுகள், பக்க வகைகள், பக்க ஒழுங்குகள், பக்க எண், பக்கத் தலைப்பு வகைகள், அச்சு எழுத்துரு வகைககள், புள்ளி அளவுகள், நிமிர்வு-சாய்வு- விரிவு வகைகள், பனுவல் தொகுப்பு - இட வல நடு ஈரக அடைவுகள், நூல் தலைப்பு, பகுதித் தலைப்பு, பந்தி, பா, படம், அடிக்குறிப்பு, சொல்லடைவு, சுட்டி, உசாத்துணை அமைப்பு, மேற்கோள் பட்டியலமைப்பு, வட ஒலி, பிறமொழி ஒலிகள், பிற மொழிச் சொற்கள்-தொடர்கள், மேற்கோள், நிறுத்தக் குறிகள், கோர்வைக் கட்டுக்காக, நடுக்கட்டுக்காக, அட்டை அமைப்பு, பின் அட்டையில் குறிப்பு, உலகத் தர நூல் எண், அரங்கநாதன் தர எண், பத்தாக்க எண் முறை, விலை, அச்சகப் பதிப்பகப் பெயர் தொடர்பான சட்டங்கள், பிற.
2.1.3 செய்தி- விளம்பர முறைகள்: இதழ்களின் அமைப்பு, செய்தி அமைப்பு, கட்டுரை அமைப்பு, பட விளக்கம், அச்சு எழுத்துரு வகைககள், புள்ளி அளவுகள், நிமிர்வு-சாய்வு- விரிவு வகைகள், பனுவல் தொகுப்பு - இட வல நடு ஈரக அடைவுகள், வட ஒலி, பிறமொழி ஒலிகள், பிற மொழிச் சொற்கள்-தொடர்கள், மேற்கோள், நிறுத்தக் குறிகள், விளம்பர வரிகள், விளம்பர வடிவமைப்பு, சுவரொட்டி வரிகள், துண்டு வெளியீட்டு வரிகள், ஒலி/ஒளி ஊடகங்களுக்கான செய்தி மற்றும் பனுவல் அமைப்பு, ஓடும் தலைப்புகள் அமைப்பு, பிற.
2.1.4 சொல்லியல்: பெயர்ச் சொல், வினைச் சொல், பேதச் சொல், கலைச் சொல், வடசொல், ஆங்கில மற்றும் பிறமொழிச் சொற்கள், பிற
2.1.5 சொற்றொடர்: தொகைச் சொல், இணைமொழி, தொடர்ச் சொற்கள், புணர்ச்சி, உவமைத் தொடர், பழமொழிகள், பிற.
2.1.6 வாக்கிய அமைப்பு, வாக்கிய வகைகள், வாக்கிய மரபு வழா நிலை, வாக்கியச் சிறப்பியல்புகள், வழக்குப் பிழை-திருத்தம், பெரு வழக்கு, நிறுத்தக் குறிகள், பிற.
2.1.7 பனுவல்: கட்டுரை, செய்தி, கவிதை, பா, துணுக்கு, நறுக்கு, கதை, நெடுங்கதை, அறிவியல் கட்டுரை, மொழிபெயர்ப்பு, பிற.
2.1.8 அச்சுப் பனுவல்: பகுப் பதம், பகாப் பதம், ஈரெழுத்து மூவெழுத்துச் சொற்கள், வரிமுதலில் மெய் வரா மரபு, பிறமொழிச் சொல் சாய்வுருவாக, தொடர் குறுக்கங்கள், பிறமொழிக் குறுக்கங்கள் தமிழில், பிற.
2.1.9 மெய்ப்புக் குறியீடுகள்.

2.2.1 கல்வி: ஆகக் குறைந்தது 12ஆம் ஆண்டில் தமிழ்ப் பாடத்தில் 60%க்கு மேல் புள்ளி பெற்றவர் அல்லது அதற்குச் சமமான தகுதி.
2.2.2 அகவை: 18 ஆண்டுக்கு மேல் 30 ஆண்டுக்குள்.
2.2.3 மூன்று திங்கள் காலம் தொடர்ந்து பயிலகம் அருகே தங்கிப் படிக்கும் வசதி உடையவர்.
2.2.4 மாணவர் சேர்க்கைக்கான விளம்பரத்தை ஊடகங்களில் வெளியிடுதல்.

2.3.1 அச்சுத் தொழில் வல்லுநர் ஒருவர்.
2.3.2 பதிப்புத் தொழில் வல்லுநர் ஒருவர்
2.3.3 ஊடகத் தொழில் வல்லுநர் ஒருவர்.
2.3.4 தமிழ் மொழி வல்லுநர் நால்வர் (1. சொல் 2. சொற்றொடர் 3. வாக்கியம், 4. கட்டுரை).
2.3.5 மெய்ப்புக் குறியீட்டு வல்லுநர் ஒருவர்.
2.3.6 கற்கை ஒருங்கிணைப்பாளர் - பயிற்சி முதல்வர் ஒருவர்.
2.3.7 முதல்வரையும் ஆசிரியரையும் தேடும் பணி.

2.4.1 முப்பது மாணவர் கற்கும் வசதி, இருக்கை, மேசை, காற்றாடிகள், ஆசிரியருக்கு உரியன, கழிப்பறை.
2.4.2 கரும்பலகை, சிறப்புக் காட்சிகளுக்குத் திரை, ஒலி/ஒளிக் காட்சிக் கருவி, கணினி.

2.5.1 கணினி, தட்டச்சு-பக்கமாக்கல், ஊடுபடி, அச்சுப் படி வசதி; பார்த்தல் பயிலல் ஏழு நாள்கள்.
2.5.2 மறுதோன்றி அச்சகத்தில் இரு நாள்கள்.
2.5.3 கட்டாளரகத்தில் மூன்று நாள்கள்.
2.5.5 பதிப்பகத்தில் இருநாள்கள்
2.5.6 செய்தித் தாள் ஆசிரியர் பகுதியில் இரு நாள்கள்
2.5.7 வானொலிச் செய்திப்பிரிவில் ஒரு நாள்.
2.5.8 தொலைக்காட்சிச் செய்திப் பிரிவில் இருநாள்கள்.
2.5.9 பிற

2.6.1 முதல் வார இறுதியில் அச்சு முறைத் தேர்வு
2.6.2 இரண்டாம் வார இறுதியில் நூலாக்க முறைத் தேர்வு
2.6.3 மூன்றாம் வார இறுதியில் ஊடக முறைகள் தேர்வு
2.6.4 ஐந்தாம் வார இறுதியில் சொல்லியல் தேர்வு
2.6.5 ஆறாம் வார இறுதியில் சொற்றொடர் தேர்வு
2.6.6 ஏழாம் வார இறுதியில் வாக்கியத் தேர்வு
2.6.7 ஒன்பதாம் வார இறுதியில் பனுவல் தேர்வு
2.6.8 பத்தாம் வார இறுதியில் மெய்ப்புக் குறியீடுகள் தேர்வு
2.6.9 பதின்மூன்றாம் வார இறுதியில் பொதுத் தேர்வு.

2.7.1 பட்டமளிப்பு விழாவில் பட்டய மெய்ப்பாளர் சான்றிதழ் வழங்கல்.
2.7.2 முப்பது மாணவர்கள் பயில்வதை அச்சக, பதிப்பக, ஊடக நிறுவனங்களுக்கு அறிவித்து பணிவாய்ப்புத் தேடுதல், ஊதிய அளவை நிறுவுதல்.

3.1 பல்கலைக் கழகம், தன்னாட்சிக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம், இவை போன்றன கற்கை நெறியாக, பட்டயவகுப்பாக நடத்தல்.
3.2 அரசின் சிறுதொழில் இயக்ககம் பயிற்சி வகுப்புகளை நடத்தல்.
3.3 ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு அச்சகமோ பதிப்பகமோ ஆதரவாளராதல்.
3.4 சென்னை மற்றும் சிவகாசியில் உள்ள அச்சக உரிமையாளர் சங்கங்கள், பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் சங்கங்கள் நிதி ஒதுக்கி, கல்வி நிறுவனத்துக்கோ சிறுதொழில் இயக்ககத் துக்கோ ஆதரவு தரல்.
3.5 மாணவரிடம் சிறு தொகையைக் கட்டணமாகப் பெறல்.
3.6 நிலனும் பொழுதும் வேறுபட, வரவும் செலவும் வேறுபடுமாதலால், கணக்குத் திட்டம் இங்கில்லை.
இச் செயற்றிட்ட அறிக்கையில் விடுபட்டன, நீக்கவேண்டியன, திருத்தவேண்டியன, மாற்றவேண்டியன உள. படித்தவர்கள் தத்தம் கருத்தை எழுதி அனுப்புக.

0 Comments:

Post a Comment

<< Home