பதிப்புலகில் நூறாண்டுகாலம்
அறிமுகம்
மூன்றாண்டுகளுக்கு முன், 2001ஆம் ஆண்டு தையில் நடந்த 24ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில், நூற்றாண்டு கண்ட முதலாவது தமிழ்ப் பதிப்பகம் எனப் பாராட்டும் விருதை, மயிலாப்பூர் அல்லயன்ல் நிறுவனம் பெற்றுக்கொண்டது. 1896இல் எழுதுபொருள் கடையாகத் தொடங்கி, 1901இல் பதிப்பகமாக மிளிர்ந்த அல்லயன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய திரு. குப்புசாமியின் மகன் திரு. கே. வி. எஸ். மணி விருதைப் பெற்றுக் கொண்டார்.
தமிழ்நூல் பதிப்புத் தொழிலில் ஒரு நூற்றாண்டுக்காலம் தொடர்ச்சியாகப் பணிபுரிவதென்பது மிக எளிதான ஒன்றல்ல. ஒரு புத்தகத்தை வெளியிடுவதே குழந்தையைப் பெறுவது போன்ற கடினமான உழைப்புத் துன்பமும் ஆன்ம உணர்வு இன்பமும் தரும் பணியாக அமைகையில், நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து பற்பல் தமிழ்நூல்களை வெளியிடும் பணி, அதுவும் தந்தை, மகன், பெயரன் என மூன்று தலைமுறையினரின் பணி பாராட்டுக்குரியதே.
அக்கண்காட்சியை நடத்திய காலத்தில் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் (தெபுவிபச) செயலராக இருந்தவர் திரு. சிறீனிவாசன். அவரே அல்லயன்ஸ் பதிப்பகத்தின் ஆட்சியராகவும் இருந்தார். முதன்முறையாக இச்சங்கம் இத்தகைய விருது ஒன்றை அந்த ஆண்டுதான் வழங்கியது. நூற்றாண்டு கண்ட ஒரே தமிழ்ப் பதிப்பகம் என்பதே விருதின் பெயராகும்.
தமிழ்ப் பதிப்பகங்கள், நூறாண்டுக் காலத்துக்குமேல் தொடர்ந்து நீடித்துவருகின்றன என்ற செய்தியை உலகுக்கு எடுத்துக் கூறி உற்சாகத்தை ஊட்டியதுடன், இடையறாது, சலிப்பின்றி உழைத்தால் இத்தகைய சாதனைகளை ஏனைய தமிழ்ப் பதிப்பாளரும் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையையும் இந்நிகழ்வு வளர்த்தது. அந்த வகையில் தெபுவிப சங்கத்தாரைப் பாராட்டவேண்டும்.
ஆனாலும் நூற்றாண்டு கண்ட தமிழ்ப் பதிப்பகம் அல்லயன்ஸ் மட்டும்தானா என்ற வினாவைச் சங்கம் எடுத்து நோக்கியதாகத் தெரியவில்லை. மகன் செயலாளராக இருக்கும் ஒரு அமைப்பு, அவரின் தந்தைக்கு விருதை வழங்குகிறதே! உயர் பொறுப்பில் உள்ளவர் ஒருவர் தன் குருதிவழி உறவினருக்குக் காட்டும் தனிச்சலுகை (nepotism) என்ற கருத்து வந்துவிடுமே! என்ற அச்ச உணர்வுகளும் சங்கத்துக்கு இருந்ததாகத் தெரியவில்லை.
விருது வழங்கிய 2001ஆம் ஆண்டில், நூறாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நூல்களைத் தொடர்ச்சியாகப் பதிப்பித்து வந்த நிறுவனங்கள் நான்குக்கு அதிகமாக இருந்தன. அவற்றை இங்கு குறிப்பிடுவதும், அவை தொடர்பான விவரங்களைத் தருவதும் பயனுள்ளதாகும். தமிழ்ப் பதிப்பு முயற்சி வரலாற்றுக்கு அணிசேர்ப்பதுமாகும்.
பைபிள் சொசைற்றி
கிபி. 1811 இல் கொல்கத்தாவில் தொடங்கிய பைபிள் சொசைற்றி, பைபிளுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியது. 1820இல் சென்னையில் இதற்கு அலுவலகம் அமைத்து, இன்றுவரை பைபிளுக்குப் பல தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுவருகிறது.
கிபி. 1841இல் யாழ்ப்பாணத்திலிருந்து பீற்றர் பேர்சிவல் பாதிரியார் சென்னைக்கு ஆறுமுகநாவலுடன் விவிலியத் திருப்புதலைக் கொணர்ந்தார். சென்னையில் இத்தமிழாக்கம் பரிசீலிக்கப் பெற்று, 1842ஆம் ஆண்டளவில் பைபிள் சொசைற்றியால் பதிப்பிக்கப் பெற்றது.
அண்மையில், 1995ஆம் ஆண்டு வெளிவந்த திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு முயற்சிக்கும் பைபிள் சொசைற்றியே 1968ஆம் ஆண்டு முதலாகக் காரணராக இருந்தததை நோக்கும் பொழுது, தமிழில் நூல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருபவர்களுள் இவர்களையும் அடக்கிவிடலாம். கிபி. 2011இல் இருநூறாண்டுகள் நிறைவுவிழாவை, அதுவும் தமிழ்ப்பதிப்புகளை இருநூறு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகக் வெளியிட்டுவரும் விழாவைக் கொண்டாடுவோம் என்கிறார் அதன் சென்னைப் பொறுப்பாளர், வணக்கத்துக்குரிய முனைவர் எபி சாமுவேல்.
ஷ்ரீலஷ்ரீ ஆறுமுகநாவலர் பதிப்பு
கிபி. 1849இல் சூடாமணி நிகண்டு நூலைப் பத்துத் தொகுதிளாகச் சென்னையிலே பதிப்பித்துத் தன் பதிப்பு முயற்சிகளைத் தொடங்கியவர் ஆறுமுகநாவலர். கிபி. 1851இல் யாழ்ப்பாணத்தில் நிறுவிய ஆறுமுகநாவலர் வித்தியாநுபாலன யந்திரசாலை, அதன் நீட்டமாக கிபி. 1870இல் சென்னை தங்கசாலைத் தெருவில் நிறுவிய ஆறுமுகநாவலர் வித்தியாநுபாலன யந்திரசாலை இன்றும் அதே தெருவில் அதே பெயரில் இருப்பதையும், இன்றுவரை ஷ்ரீலஷ்ரீ ஆறுமுகநாவலர் பதிப்புகளாகத் தமிழ்நூல்களை இடையீடின்றிப் பதிப்பித்து வருவதும் கண்கூடு.
ஆகமொத்தமாக 68 தமிழ் நூல்கள் அப்பதிப்பகம் மூலமாக இதுவரை வெளிவந்துள்ளன. அவற்றுள் பல நூல்கள் முப்பதுக்கும் அதிகமான மறுபதிப்புகளைக் கண்டுள்ளன. முதலாம் சைவவினாவிடை இருநூற்றுக்கும் அதிகமான பதிப்புகளைக் காண, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள பிற பதிப்பகங்களும் உதவின. 1965இல் முதல் பதிப்பைக் கண்ட இலக்கண வினாவிடை 1995இல் தனது 28ஆவது பதிப்பைக் கண்டது. சைவ சமயம், தமிழ் மொழியியல், அகராதி, பூமிசாத்திரம் என அப்பதிப்பகத்தின் பாடவகைப் பரப்பும் விரிந்தது.
154 ஆண்டுகளாகத் தொடர்ந்து நல்ல தமிழ்ப்பதிப்புகளை வெளியிட்ட ஷ்ரீலஷ்ரீ ஆறுமுகநாவலர் பதிப்பு, நுல்களிள் வகைக்கு மட்டுமல்ல, பிழைகளற்ற பதிப்பு, சுத்தத் தமிழ்ப் பதிப்பு என்ற சிறப்புகளுக்கும் உரியதாயும், பின்வந்த பல தமிழ்ப் பதிப்பகங்களுக்கு வழிகாட்டியாயும் இருந்துள்ளது என்கிறார் சிதம்பரம் ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையின் முன்னாள் தலைமையாசிரியரும், குன்றக்குடி அடிகளாருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் ஆறுமுகநாவலர் அறக்கட்டளையின் அறங்காவலராகப் பொறுப்பு வகிப்பவருமான திரு. க. சுவாமிநாதன்.
கிறிஸ்தவ இலக்கியக் கழகம் (சிஎல்எஸ்)
கிபி. 1858இல் தொடங்கிய கிறிஸ்தவ இலக்கியக் கழகம் தொடக்கத்தில் துண்டுவெளியீடுகளையே கொணர்ந்ததாயினும் பின்னர் தமிழ்ப் பதிப்பின் அனைத்துப் பாடவகைகளிலும் நூல்களை வெளியிட்டது. திரு. வி. க. போன்ற சிறந்த பல படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் பதிப்பிப்பதுடன், அண்மைக் காலத்தில் தலை சிறந்த படைப்பாளிகளின் நூல்களை வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறது என்கிறார் அங்கு தமிழ்ப்பதிப்பாசிரியராகப் பணிபுரியும் திருமதி சுவீற்லின் பிரபாகரன்.
145 ஆண்டுகள் தமிழ்ப் பதிப்புலகில் தொடர்ச்சியாக நூல்களை வெளியிட்டுச் சாதனை புரிந்துவரும் கிறிஸ்தவ இலக்கியக் கழகத்தின் பொறுப்பாளராக அண்மைக்காலம் வரை திரு தயானந்தன் பிரான்சில் இருந்தார்.
யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலை
யாழ்ப்பாணத்தில் கிபி. 1881இல் தொடங்கிய சைவப்பிரகாச யந்திரசாலை இன்றுவரை, இடைவிடாது தமிழ்நூல்களைப் பதிப்பித்து வருகிறது. அண்மையில் புதிய தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய மறுதோன்றி அச்சகத்தையும் கணிப்பொறிசார் பக்கமாக்கலையும் தன்னகத்தாக்கியுள்ளது. இந்து சாதனம் என்ற தமிழிதழையும் இந்து ஓர்கன் என்ற ஆங்கில இதழையும் நடத்திவருகிறது. போர்ச்சூழ்நிலை காலத்தையும் தாங்கி, தளராது தமிழ்ப் பதிப்பு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. தமிழ் மொழி, சைவ சமயம், சங்க நூல்கள், அகராதிகள், புனைகதை, கவிதை, புவியியல், அறிவியல், வரலாறு, வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை, மருத்துவம் எனப் பன்முகத் தமிழ்ப் படைப்பாளிகளுக்குப் பதிப்புக் களம் அமைத்துக் கொடுக்கிறது சைவப்பிரகாச யந்திரசாலை.
122 ஆண்டுகளாகத் தமிழ்நூல் பதிப்பு முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் சைவப்பிரகாச யந்திரசாலை, ஈழத்து வாசகர்களை நோக்கியே அமைந்ததால், தமிழகத்தில் உள்ள ஒருசிலரைத் தவிரப் பலரின் கண்களில் படாதமை வியப்பல்ல என்றார், அந்த அமைப்பின் ஆட்சியருள் ஒருவரும் யாழ்ப்பாணம் பெரியபுலம் மாவித்தியாலய அதிபருமான திரு. கனகசிங்கம்.
முடிவுரை
தெற்காசியாவிலேயே முதன்முதல் தமிழ்நூலொன்றுதான் அச்சுவாகனம் ஏறியது. அன்று தொடக்கம் தமிழில் அச்சிட்டுப் பதிப்பிக்கும் வழக்கம் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறது. எனினும் நூற்றாண்டுகாணும் அளவுக்குத் தொடர்ச்சியாக மேற்காணும் ஐந்து நிறுவனங்களையுமே இப்பொழுது அடையாளங்காண முடிகிறது. அந்த வரிசையில் அல்லயன்ஸ் ஐந்தாம் இடத்தையே பெறுகிறது. தெபுவிபச வின் உறுப்பினரிடையே நூற்றாண்டு கண்ட நிறுவனம் என விருதை வழங்கியிருப்தே முறையாகும். எனினும் முறைப்படுத்தக் காலம் கடந்துவிடவில்லை. மற்ற நான்கு நிறுவனங்களுக்கும் இந்தக் கண்காட்சியிலாவது (2004) விருது வழங்கிச் சிறப்பிப்பது தெபுவிபச வின் கடமையாகும்.
0 Comments:
Post a Comment
<< Home