Saturday, September 24, 2005

தமிழ்ப் பதிப்புத் துறையின் எதிர்காலம்

எழுதுகிறார்கள் என்பதால் வாசிக்கிறார்கள். இந்த எழுத்தாளருக்கும் (1) வாசகருக்கும் (2) பாலமாகப் பதிப்பாளர் (3), விற்பனையாளர் (4), நூலகர் (5) ஆகிய இந்த ஐவருமே தமிழ் நூல் என்ற கூரையைத் தாங்கும் தூண்கள்.
மக்கள் தொகை பெருகப் பெருக, எழுத்தாளர், வாசகர் தொகையும் பெருகும். 1901இல் 1.5கோடி, 1951இல் 3.5 கோடி, 2001இல் 7 கோடி, 2020இல் 9 கோடி, 2050இல் 11 கோடி எனத் தமிழர் தொகை (ஆதாரம் ஐ.நா. உலக வங்கி மற்றும் இந்திய அரசு வெளியீடுகள்) பெருகி வருகிறது.
1901இல் தமிழகம், ஈழம், மலாயா, பர்மா, பிஜி, மொரிசியசு, சீசெல்சு, தென் ஆபிரிக்கா, இறியூனியன், சுரினாம் ஆகிய 10 நாடுகளில் மட்டும் தமிழர் வாழ்ந்தனர். 1951 வரை இந்த நிலை நீடித்தது. அதன் பின்னர் படிப்படியாக, இந்திய மாநிலங்கள், கிழக்கு ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா-பசிபிக் பகுதிகளுக்குத் தமிழர் பரவினர். இன்று தமிழரின் வாழ்விடப் பரப்பு உலகெங்குமுள்ள 40 நாடுகளுக்குச் சற்றே அதிகமாகும்.
தமிழரிடையே எழுத்தறிவு, 1901இல் 5%க்கும் குறைவு. 1951இல் 15%, 2001இல் 73%, 2020இல் 99%, 2050இல் 99% எனப் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது.
தமிழரின் மக்கள் தொகை, வாழ்விடப் பரம்பல், எழுத்தறிவு யாவும் பெருக்க ஏற்றமாக வளர்ந்துள்ளமையால், எழுத்தாளர், வாசகர் தொகையையும் அதே விகிதத்தில் பெருக்கி உள்ளமை கண்கூடு.
பாலமாக அமையும் பதிப்பாளர், விற்பனையாளர், நூலகர் எண்ணிக்கைகள் 1901 - 2000 காலப் பகுதியில் இந்த வேகத்தில் வளரவில்லை என்பதும் கண்கூடு.
1557இல் தம்பிரான் வணக்கம் பதிப்புடன் தொடங்கிய அச்சு, தாள் சார்ந்த பதிப்புத் துறை, சமய, இலக்கிய, புனைகதை நூல்களாக 1901வரை பல தலைப்புகளைக் கண்டது. பல சிறந்த பதிப்பாளர்களையும் கண்டது. சிறந்த அடித்தளமாக இப்பதிப்பாளர் (திருவிவிலியச் சங்கம், ஆறுமுக நாவலர் வித்தியாநுபாலன யந்திரசாலை, கிறித்துவ இலக்கியக் கழகம், யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலை போன்ற அமைப்புகளும் தனியார் பலருமாக) முயற்சிகள் அமைந்தன. 5% எழுத்தறிவுள்ளோர் வாழ்ந்த அந்தக் காலத்திலேயே தலைப்புக்கு 1,000 படிகள் அச்சாகிய வரலாறும் உண்டு. ஒரே தலைப்பு மறுபதிப்புகளைக் கண்ட வரலாறும் உண்டு.
1901 -2000 காலப்பகுதியில் பதிப்பாளர் தொகை வளர்ச்சி கணிசமாகியது. 2,100 பதிப்பாளர் இன்று (மதிப்பீடு காந்தளகம், சென்னை) உலகெங்கும் தமிழ்த் தலைப்புகளைப் பதிப்பிக்கின்றனர். இவர்களுள் 70க்கும் சற்றே அதிகமான எண்ணிக்கையில் (படம் மேலே) முன்னணியில் உள்ளனர்.
தமிழில் பாடநூல் தலைப்புகளை வாங்கி விற்பனை செய்வோர் எண்ணிக்கை தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகம். எழுத்தறிவு பெற்றோர் வளர்ந்த அதே வேகத்தில் பாடநூல் விற்பனையாளரும் வளர்ந்தனர் என்றே சொல்லலாம்.
பாடநூல் அல்லாத தமிழ்த் தலைப்புகளை வாங்கி விற்பனை செய்ய முழுமுயற்சியில் 100 நூறு விற்பனை நிலையங்கள் வரை தமிழகத்தில் இருக்கலாம் என அகிலன் கண்ணன் (பதிப்பும் படிப்பும் (2002), பக். 97) மதிப்பிடுகிறார். அனைத்துத் தமிழ்த் தலைப்புகளையும் ஒரே கூரையின் கீழ் விற்கும் விற்பனையாளர் 1999 வரை எவரும் இருக்கவில்லை. எனினும், யாழ்ப்பாணம், மதுரை, கோயமுத்தூர், திருச்சி, சென்னை, சிங்கப்பூர், கோலாலம்பூர், கொழும்பு, திருவாரூர், கும்பகோணம், சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள சில தமிழ் நூல் விற்பனையாளர் அதிக விற்பனையிலிலுள்ள அனைத்துத் தலைப்புகளையும் காட்சியில் வைத்திருந்தமையே வாசகருக்குப் பெரும் பேறாக இருந்தது.
1901 - 2000 காலப் பகுதியில் தமிழகத்திலும் ஈழத்திலும் நூலகங்கள் அரும்பணி செய்து வந்துள்ளன. சிறப்பாக 1950களுக்குப் பின்னர், தமிழகத்தில் நூலகங்களின் எண்ணிக்கை தாவி வளர்ந்தது. ஈழத்திலும் அதே வேகத்துடன் அவை வளர்ந்தன.
தமிழகத்தில் 2,457 அரசு நூலகங்கள் உள்ளதாக அகிலன் கண்ணன் (பதிப்பும் படிப்பும் (2002), பக். 95) மதிப்பிடுகிறார். 12,400க்கும் அதிக எண்ணிக்கையில் ஊராட்சி அமைப்புகள் உள்ள தமிழகத்தில், 2,457 என்ற எண்ணிக்கை போதுமானதல்ல. இதைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு, 2,000ஆம் ஆண்டில் 12,400 அளவில் திருவள்ளுவர் படிப்பகங்களை, நூலகக் கருக்களாக அமைக்க முயன்றது. ஓரளவே வெற்றி பெற்றது.
1980க்குப் பின்னர், ஈழத்தில், போரால் நூலகங்கள் (யாழ்ப்பாண நூலகம் உள்ளிட்ட) பல அழிந்தன. எனினும், நூலகங்களுக்கான தமிழ்த் தலைப்புகளின் கொள்வனவுக்கு அரசின் நிதி ஒதுக்கீடுகள் குறையவில்லை.
சிங்கப்பூர் நூலகங்கள், தமிழ்த் தலைப்புகளை 1968 தொடக்கம் வாங்கத் தொடங்கின. தமிழ்த் தலைப்புகளை 1985-2000 காலப் பகுதியில் ஐரோப்பிய, வடஅமெரிக்க, ஆஸ்திரேலிய நூலகங்கள் அங்கு புலம் பெயர்ந்த தமிழருக்காக வாங்கத் தொடங்கிவிட்டன.
கல்வி நிலைய நூலகங்கள் தமிழகம், ஈழம், சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு ஆகிய நாடுகளில் தமிழ்த் தலைப்புகளை வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஆங்கில மற்றும் பிறமொழித் தலைப்புகளுக்காக ஒதுக்கும் நிதி அளவே அனைத்துக் கல்வி நிலைய நூலகங்களிலும் அதிகம்.
தமிழ்த் தலைப்புகளை விலைகொடுத்து வாங்குவதில் தமிழ் வாசகர் ஆர்வம் காட்டுவதில்லை என்ற கருத்தைத் தமிழ் நூல் பதிப்பாளரும் விற்பனையாளரும் சொல்வதுண்டு. தமிழ் வாசகருக்கு வாசிப்பு நாட்டமில்லை என்றோ, விலை கொடுத்து வாங்கும் ஆர்வம் இல்லை என்றோ சொல்வது தவறு. 1951க்குப் பின் நிகழ்ந்த தமிழிதழ் விற்பனைச் சாதனைகளும், சிற்றூர்கள் தோறும் ஊடுருவி விற்பனையைப் போட்டி போட்டுப் பெருக்கிய தமிழிதழ் வெளியீட்டாளர்களும், வாங்கித் தமிழிதழ்த் துறையை ஊக்குவித்த உலகெங்கும் வாழ் தமிழரும் இக்கூற்றைப் பொய்யாக்குவர்.
இந்தப் பின்னணியில், தமிழ்ப் பதிப்புத் துறையின் எதிர் காலத்தை நோக்க விழைகின்றேன்.
தமிழ்த் தலைப்புகளை வாங்குவோர் தரும் விலையே தமிழ்ப் பதிப்புத் தொழிலின் பொருண்மிய அடித்தளம். 2001 க்குபின் உலகெங்கும் நுகர்ச்சிப் பொருளாதாரத்தை நோக்கியே திட்டமிடப்படுகிறது. தொழில் நுட்ப உள்ளீட்டையும், பெறுபேறான உற்பத்தி வளர்ச்சியையும் தாங்குவோர் நுகர்வோரே. எனவே நுகர்வோரிடம் வாங்கும் சக்தி இருக்குமாறு பொருண்மிய விற்பன்னர்கள் திட்டமிடுகிறார்கள்.
சஹாராவுக்குத் தெற்கேயுள்ள ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் மட்டும் மந்த கதி வளர்ச்சி இருக்கும். ஏனைய நாடுகள் அனைத்தில் வாழும் மக்கள் இன்னம் 20ஆண்டுகளுள் எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ்வர் என்பதே கணிப்பு. இன்று உலக மக்களுள் 56% மட்டுமே உயர் வருவாய் உள்ளராயுளர். இந்த நிலை மாறி உலகின் 70% மக்கள் 2020இல் எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ்வர் என்பதே கணிப்பு (உலக வங்கி நிலவரை, 2003).
வருவாயைச் சொத்துக்காக(1), சேமிப்புக்காக(2), நுகர்ச்சிக்காக(3) என மக்கள் ஒதுக்குவர். நுகர்ச்சிக்காக ஒதுக்கும் தொகையில், தமிழர் தம் தாய் மொழியில் நூல்களை வாங்க எவ்வளவு ஒதுக்கப் போகிறார்கள் என்பதைக் கொண்டே பாடநூல் தவிர்ந்த தமிழ் நூல் பதிப்புத் தொழிலின் வளர்ச்சியைக் கணிக்கலாம்.
தமிழ்த் தலைப்புகள் நுகர்வோரைத் தேடிப் போகாவிடின், தமிழர் நூல்களை வாங்குகிறார்களில்லையே எனக் குறை கூறமுடியாது. கையில் பணம் இருக்கும் வேளையில் தமிழ்நூல் விற்பனைக்கு இருக்கிறது என்ற கவனம் நுகர்வோருக்கு வரவேண்டும். அவரிடமுள்ள அப்பணத்தைத் தம் வசமாக்கப் போட்டி போடும் பல நுகர்ச்சிப் பொருள்களிடமிருந்து அவரை விடுவித்து, தமிழ்நூல் பால் ஈர்த்து, தமிழ் நூலை அவர் கைகளுள் திணிக்கக் கூடிய விற்பனைத் திறனும் சாதுரியமும் தமிழ் நூல் விற்பனையாளருக்கு இருந்தால்தான் தமிழ்ப் பதிப்புத் துறைக்கு எதிர்காலமேயுண்டு.
தமிழ் நூல் என்ற கூரையைத் தாங்கும் ஐந்து தூண்களுள், வாசகர் தவிர்ந்த நான்கு தூண்களும் எவ்வாறு தத்தம் பங்களிப்பை நல்கலாமெனப் பார்ப்போம்.
படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுமாறு எழுத்தாளர் எழுதுவதே அவரது எழுத்தைப் பெறுமதியுள்ளதாக்கும். சொல்லும் பொருளும் வாசகருக்குப் பயன்(?) தரவேண்டும். வாசகர் கொடுக்கும் விலைக்குப் பெறுமதியாக மட்டுமல்ல அவரை வளமான உறுதியான எதிர்காலத்துக்கு அழைக்கவும் வேண்டும்.
பதிப்பாளர் பங்களிப்பே முக்கியமானது. ஆள் பாதி ஆடை பாதி என்பர். நல்ல எழுத்தை நல்ல பதிப்பாக மாற்றும் தொழில்திறன் பதிப்பாளருக்கு வேண்டும். தாளும் அச்சும், கட்டமைப்பும் புத்தம் புதுத் தொழில்நுட்பங்களைக் குவித்துக் கொண்டு வருகின்றன. இவற்றை உடனுக்குடன் உள்வாங்காவிடின் வாசகரின் விடாய் வேறுபக்கம் திரும்பிவிடும். பதிப்புத் தரமில்லாத தமிழ் நூலுக்கு விற்பனை வாய்ப்பிருக்காது.
தமிழ்த் தலைப்புகளின் மூலங்கள் எழுத்தாளரை விட்டு வெளியெறியதும் பதிப்பாசிரியர் குழுவிடம் போகாவிடில் அந்த நூல் முழுமை பெறாது. தமிழ்ப் பதிப்பகங்கள் தனியாகப் பதிப்பாசிரியரைப் பணிகொள்வதில்லை. இது பெரும் குறையாகும். எழுத்தாளரின் எண்ண ஓட்டங்களை வாசகரின் எண்ண ஓட்டங்களுடன் இணைப்பவரே பதிப்பாசிரியர். பதிப்பாளரே பதிப்பாசிரியரானால் அந்த நூலில் பதிப்புத் தேவைப் பாதிப்புகளேயிருக்குமன்றி வாசகர் தேவைப் பாதிப்புகளிருக்காது.
2011 - 2051 காலப்பகுதியில் தமிழ்ப் பதிப்பாளரின் மொத்த எண்ணிக்கை பெருகவேண்டும். எழுத்தாளர் தனக்கேற்ற பதிப்பாளரைத் தேர்வுசெய்ய இப்பெருக்கம் உதவும். எழுத்தாளரே பதிப்பாளராவதை மாற்றும். எழுத்தாளருக்கு அண்மித்தவராகப் பதிப்பாளர் இருப்பது போல், விற்பனையாளருக்கு அண்மித்தவராகவும் பதிப்பாளர் இருப்பார். இப்பொழுது 2,100 அளவாக இருக்கும் எண்ணிக்கை, மூன்ற அல்லது நான்கு மடங்காகப் பெருகினால் அடுத்த 20 - 50 ஆண்டுகளின் தமிழ்நூல் பதிப்புத் தேவைகளை நிறைவு செய்யலாம்.
40க்கும் அகிகமான நாடுகளில் 11 கோடித் தமிழர் வாழப் போகும் எதிர்காலத்துக்கு விற்பனையாளர் தொகை மிகக் குறைவே. மின்னம்பலம் வழி விற்பனை செய்யும் வாய்ப்புகள் அதிகரித்தாலும், புத்தக் கடையில் நேரில் ஒரு நூலைப் பார்த்து வாங்கும் மன நிறைவு வாசகரின் இயல்பு.
பூமியின் ஒவ்வவொரு கண்டத்திலும் எத்தனை நாடுகளில் இருந்து காந்தளக மின்னம்பலத் தளமான தமிழ்நூல்.கொம் தளத்துக்குள் வாடிக்கையாளர் வருகின்றனர் என்பதைக் கீழுள்ள முதலாவது வரைபடத்தில் காணலாம். எந்த நாடுகளில் தமிழ்நூல்.கொம் உள்ளவர் எவ்வெவ்ளவு கொள்வனவு செய்கின்றனர் என்பதைக் கீழுள்ள இரண்டாவது வரை படத்தில் காணலாம்.
தமிழ்நூல் வாசகரின் பரப்பளவு எதிர்காலத்தில் பரந்தளவினதாக இருக்கும் என்பதற்கு இந்தத் தகவல் (தொகுப்பு: ந. சசிரேகா) எடுத்துக் காட்டு.
இத்துணை எண்ணிக்கையுள்ள நாடுகள், இத்துணை எண்ணிக்கையுள்ள நுகர்ச்சிப் பரப்பு - இதுதான் தமிழ்ப்பதிப்புதச் துறைக்குரிய வளமான எதிர்காலம். இத்தனை வாடிக்கையாளரையும் சென்றடையக் கூடியதாக, விற்பனை வலைப்பின்னல் (இதழியழ் வெளியீட்டாளர் தமிழகமெங்கும் உருவாக்கியது போல்) ஒன்றை உருவாக்காவிடின் தமிழ்ப் பதிப்புத் துறைக்கு எதிர்காலம் என்று ஒன்றைக் கனவு காணலாமா?
மின்வணிகம் தமிழ்நூல் விற்பனையைப் பெருக்கும். அமெரிக்காவின் புத்தக மின்வணிக முன்னோடியான அமேசன்.கொம் தளத்தினர் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை இழப்பிலேயே இயங்கி வருகின்றனர். இதனால் புத்தகம் தவிர்ந்த வேறு பொருள்களையும் தம் தளத்துக்குள் சேர்த்துள்ளனர்.
தமிழ் நூல்களை மின்வணிகத்தில் விற்பனை செய்யச் சில தளங்களே உள. 31,700 தலைப்புகளை 40 பாட வகைகளாக்கி, 1999ஆம் ஆண்டு முதலாக மின்னம்பலத் தளத்தின் மூலம் காந்தளகத்தின் விற்பனை செய்தது வருகின்ரனர். இன்தாம், தம்பிபுக்ஸ், தமிழ்புக்ஸ் எனப் பிற மின்னம்பலத் தளங்களும் உள. ஒவ்வொரு பதிப்பாளரும் தத்தம் வெளியீடுகளை மின்னம்பலத் தளத்தில் உள்ளடக்குவது விற்பனையை நோக்கியேயாம்.
சந்தை என்றால், தமிழக அரசின் நூலகத் துறை என்ற மனப்பாங்குடன் செயல்படும் பதிப்பாளர், பதிப்பத் தொழிலுக்கே மூடுவிழா நடத்திவிடுவர் என்ற கருத்தை 1966இல் வலியுறுத்தியவர் கண. முத்தையா. அதுமட்டுமல்ல தொழிலின் எதிர்கால வளர்ச்சிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதை விரிவாக எழுதியுள்ள அவரின் பல கருத்துகள் (பதிப்பும் படிப்பும் 2002, பக்.53,54)இன்றும் பொருந்துவன.
தமிழ் நூலின் விற்பனை விலை குறைவாக இருக்கவேண்டுமென்பது எதிர்காலத்துக்குப் பொருந்தாது. அடக்க விலைப் பதிப்புகளும் மலிவுப் பதிப்புகளும் பொருண்மிய வளர்ச்சியற்ற சூழ்நிலைக்குரியவை. 2020ஆம் ஆண்டில் தமிழர் யாவரும் வருவாயாப் பெருக்கம் உள்ள சூழலில் வாழ்வர் என்பதை உளத்திருத்தி, விலை ஏற்றத்தையும் தர ஏற்றத்தையும் தவிர்க்க முடியாத நடவடிக்கையாகப் பதிப்பாளர் / விற்பனையாளர் கருதவேண்டும்.
விற்பனையாளர் வலைப்பின்னல் பெருக, அவர்களும் விலையின் ஒரு பங்கைப் பெறவேண்டியவராவர். மொத்தவிற்பனைக் கழிவு ஒரு நூலின் 80% வரை இருக்கும் (கடந்த வாரம் ஆங்கில நூல் ஒன்றுக்குச் சென்னையில் விற்பனைக் கழிவாக 80% பெற்ற சான்று பார்க்க) காலம் தமிழ் நூலுக்கு வந்தால், விற்பனை அளவும் பல்கிப் பெருகும். அபரிதமாக விற்பனையாகும் பிற மொழி நூல்களுக்கு மொத்த விற்பனைக் கழிவுகள் விலையின் பாதிக்கு மேல் இருப்பது வழமை. விலையை அதிகரித்தலே ஒரே வழி. வாங்கும் சக்தி பெருகி வருவதால் விலை அதிகரிப்பை நுகர்வோர் தாங்கிக்கொளிவர்.
நூலகங்களே தமிழ் பதிப்புத் துறையின் ஆவணக் காப்பகங்கள். வாசகர்களைச் சென்றடையாவிடினும் நூல்கள் பல, நூலகங்களைச் சென்றடைகின்றன. அங்கே பாதுகாப்பாக இருக்கின்றன.
தமிழில் வெளியாகும் ஒவ்வொருநூலும் தமிழ்நாட்டில் கன்னிமாரா நூலகத்துக்கு மட்டுமே சென்றடைகின்றது. இந்தியாவில் வேறு நான்கு நூலகங்களுக்குச் செல்கின்றது. இது போதுமானதல்ல. தமிழ்நாட்டில் ஆகக் குறைந்தது பத்து நூலகங்களை அவை கட்டாயமாகச் சென்றடைவதுடன், மலேசியா, சிங்கப்பூர், ஈழம் ஆகிய நாடுகளின் தலை நூலகம் ஒன்றுக்கும் அனுப்புவது கட்டாயமாகவேண்டும். ஆவணப் பாதுகாப்புக் கண்ணோட்டம் மட்டுமல்ல, விற்பனைப் பெருக்கத்துக்கும் மாதிரி நூல்களாக இவை அமையும்.
மின் வணிகம், குறுந்தட்டு என தொழில் நுட்ப முன்னேற்றங்கள் நுழைந்தாலும் அச்சிட்ட நூல்களுக்கு அடுத்த 20 -50 ஆண்டுகளுக்கு வளமான சந்தை உண்டு. இருப்பில் வைத்திராமல், தேவைக்கு மட்டும் அவ்வப்பொழுதே நூல்களை அச்சிடும் முறை விரைவில் தமிழ்நூல் பதிப்பாளரை ஆட்கொள்ளும். இத் தொழில் நுட்பம் பதிப்பாளர், விற்பனையாளர் இருவருக்கும் அருந் துணையாகும்.
எழுத்தாளர் பங்களிப்பு, பதிப்பாளர் பங்களிப்பு, விற்பனை வலைப்பின்னல் உருவாக்கம், நூலகர் பங்களிப்பு யாவும் சேர்ந்தால்தான், விலைகொடுத்து வாங்கும் வாசகரைத் தமிழ் நூல்கள் சென்றடையும். தமிழ்ப் பதிப்புத் தறையின் எதிர்காலம் இவர்களின் இணைந்த முயற்சியில் தங்கியுள்ளது.

2 Comments:

Blogger NambikkaiRAMA said...

//விலைகொடுத்து வாங்கும் வாசகரைத் தமிழ் நூல்கள் சென்றடையும்//
புத்தக வாசிப்பு என்பது தமிழரிடையே மிக குறைவாகத்தான் உள்ளது. தொலைக்காட்சிப் பெட்டியில் பெரும்பாலானோர் தம்மைத் தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள். வாசிக்கும் பழக்கத்தை அதிகரிப்பது மிக அவசியம்.

பதிப்பகத்தை பற்றிய உங்கள் பதிவுக்கு நன்றி!

5:24 AM  
Blogger மாமூலன் said...

உங்களிடம் பல வரலாற்று உண்மைகள் புதைந்து கிடக்கின்றன.
சிவத்தம்பி, பிரேம்ஜி மற்றும் கைலாச பதிகளின் உண்மை நிலையை முன்னைய கட்டுரையில் எழுதியிருந்தீர்கள்.
ஏன் நீங்கள் தொடர்ந்து எழுதுவதில்லை?

9:27 PM  

Post a Comment

<< Home