Wednesday, September 28, 2005

கொழும்பில் மணிமேகலைப் பிரசுரப் புயல்

-மறவன்புலவு க. சச்சிதானந்தன்
கொழும்பில் வாழ்ந்த கைலாசபதி, சிவத்தம்பி, பிரேம்ஜி எனச் சிலர் சேர்ந்து இலட்சுமண ஐயர் தலைமையில் ஒரு குழுவாகி, சிறீமாவோ அரசு 1971இல் ஆட்சியில், தமிழுக்கும் தமிழருக்கும் நன்மை செய்தே தீருவோம் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு செய்த பல பணிகளுள் ஒன்று, தமிழ் நாட்டுக் குப்பைகள் இலங்கைக்குள் வருவதை வெகுவாகக் குறைத்தமை.
இக்குழுவுடன் இணைந்த பலருள் மருத்துவர் இந்திரகுமாரும் ஒருவர். இந்தக் கருத்தோட்டத்துக்குத் தலைமை தாங்கிய பெருமை அக்கால அமைச்சர் குமாரசூரியரைச் சாரும்.
யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தடை செய்வதில் முனைப்பாயிருந்தவருள் இவர்களுட் சிலரும் அடங்குவர்.
கைலாசபதி, சிவத்தம்பி, செ. கணேசலிங்கன், போன்றோரின் நூல் களை அக்காலத்தில் சென்னையில் பல பதிப்பகங்கள் வெளியிட்டு வந்தன. தமிழகத்தில் தமக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிய இவர்கள், தமிழக எழுத்தாளருக்கு இலங்கையில் வாசகர் வட்டம் உருவாகக் கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.
அது மட்டுமல்ல தம்மைத் தவிரப் பிற இலங்கை எழுத்தாளர்களுக்குத் தமிழகம் வாசிப்புக் களமாக அமைந்துவிடக் கூடாதென்பதில் மிகக் கவனமாக இருந்தனர். இலங்கை எழுத்தாளர் யாராவது இவர்களிடம் உதவி கேட்டு, தமிழகத்தில் வெளியிட வாய்ப்புக் கேட்கப் போனால் உமக்கென்ன எழுதத் தெரியும் எனக் கேலி செய்து, அவ்வெழுத்தாளரைத் திருப்பி அனுப்பிய செய்திகளையும் சிலோன் விஜயேந்திரன் என்னிடம் அடிக்கடி சொல்வார்.
தன்னலம் நிறைந்த இவர்களின் போக்கை இலங்கைத் தமிழர் ஏற்கவில்லை. 1971இல் இலங்கைத் தமிழ் இளைஞர் பலர் இக்கருத்தோட்டத் துக்கு எதிராகத் திரண்டனர். இக் கருத்தோட் டத்தின் தலைவர், அமைச்சர் குமாரசூரியரைக் கொலை செய்யவும் முயன்றனர். இந்தக் குழுவினர் ஆலவட்டம் பிடித்த சிறீமாவோ அரசின் தமிழர் எதிர்ப்புக் கொள்கையே தமிழ்-சிங்கள உறவு மிகவும் மோசமடையக் காரணமாக இருந்தது.
இந்தப் பின்னணியில் கொழும்பில் 2005 மார்ச்சு 3ஆம் நாள் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு விழாவை நோக்க வேண்டும்.
தமிழகப் பதிப்பகங்களின் வெளியீடுகளைக் குப்பை எனப் பொத்தாம் பொதுவாகக் கூறியவர் பலர், அவை இலங்கைக்குள் வராமலிருக்க முயன்ரோர் பலர் இன்று உயிருடன் இல்லை. சிலர் இன்றும் வாழ்கின்றனர். சிவத்தம்பி கொழும்பில் இருக்கிறார்.
அப்பொழுது அவர்களின் கருத்துக்கு எதிராக இயக்கம் நடத்திய பலருள் நானும் ஒருவன்; சாவகச்சேரியில் வாழ்ந்த அ. பொ. செல்லையாவும் ஒருவர். எங்களது கருத்துகள் அறிவின் வெளிப்பாடாக அமைந்தன. ஈழத் தமிழர் உணர்வைப் பிரதிபலிப் பதாக அமைந்தன.
கைலாசபதி - சிவத்தம்பி - குமாரசூரியர் குழுவினரின் ஆட்சி அதிகாரத்தனத்தை மீறி யாழ்ப்பாணத்தில் 1974இல் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்திய குழுவில் நானும் ஒருவன். அ. பொ. செல்லையா போன்ற ஏராளமான தமிழ் உணர்வாளர் எமக்குப் பின் நின்றனர்.
கைலாசபதி - சிவத்தம்பி குழுவினர் அறியாமையிலும் தன்னல வேட்கையிலும் திளைத்தனர் என அன்று கூறினோம்; இன்றும் அதையே கூறுவோம். இந்தக் குழுவின் எச்ச சொச்சங்கள் இன்று தன்னல நோக்குடன் தமிழ்த் தேசியம் பேசுவது வியப்புக்கு உரியதல்ல.
2005 மார்ச்சு 6ஆம் நாள், கொழும்புத் தமிழ்ச் சங்கப் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி, எம் நிலைப்பாட்டின் உறுதியின் விளைவு; கைலாசபதி - சிவத்தம்பி குழுவினரின் குறுகிய, தன்னலச் சிந்தனைக்கான சாவுமணி ஒலிகளுள் ஒன்று.
கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக மணிமேகலைப் பிரசுரம் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைத் தமிழக வாசகர் களத்துக்கு அறிமுகம் செய்து வருகிறது.
சிங்கள அரசின் அச்சுறுத்தலால் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்த ஏராளமான ஈழப் படைப்பாளிகள், தத்தம் படைப்புகளை வெளிக்கொணரத் தமிழகத்தை நாடினர். தமிழகத்திலும் வாழ்ந்த ஈழப் படைப்பாளிகளுக்குப் பதிப்பாளர் பலர் களம் அமைத்துக் கொடுத்து உதவினர்.
ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளின் மூவாயிரம் தலைப்புகள் வரை கடந்த இருபது ஆண்டுகளில் தமிழகத்திலும் புதுவையிலும் வெளியாகி இருக்கலாம். மூத்த பதிப்பகங்கள் பல ஈழப் படைப்பாளிகளுக்கு ஆதரவு கொடுத்தன.
தம் பதிப்புகளை இலங்கைக்குள் புகவிடாது தடுத்தவர் பலரை அடையாளம் கண்ட பின்பும் அதை உளத்திருத்தாது, நல்ல உள்ளத்துடன் வரவேற்று உமக்கென்ன எழுதத் தெரியும் என ஒரு முறையேனும் வினவாமல், ஈழத் தமிழ் நூல்களை வெளிக்கொணர்ந்த தமிழகப் பதிப்பாளரைப் பாராட்டுவது ஈழத்தவர் கடமை.
கடந்த மார்ச்சு 6ஆம் நாள் கொழும்பில், தமிழ்ச் சங்க மண்டபத்தில் மணிமேகலைப் பிரசுரத்தாரின் 26 தலைப்புகள் வெளியாயின. மணிமேகலைப் பிரசுரத்தாரின் அயரா முயற் சியின் விளைவாக இது வரை இருநூற்றிருபத்தைந்துக்கும் கூடுதலான ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்கள் வெளியாகி உள்ளன.
ஈழத்துப் படைப்பாளிகளுக்குச் சுன்னாகம் தனலக்குமி புத்தகசாலை, கொழும்பு வீரகேசரி நிறுவனம், யாழ்ப்பாணம் வரதர் வெளியீடு போன்று வலுவான ஆதரவு கொடுப்பவர் மணிமேகலைப் பிரசுரத்தினர்.
யாழ்ப்பாணத்துப் பதிப்பு முயற்சிகளை அணுக்கத்தில் இருந்து பார்த்தவன். வரதர் பட்ட துன்பங்ளை நேரில் பார்த்தேன். வீரகேசரி பாலச்சந்திரனின் அயரா உழைப்பைப் பார்த்தேன். சுன்னாகம் தனலக்குமியார் கட்டுக் கட்டாக யாழ்ப்பாணச் சந்தைக்குத் தம் வெளியீடுகளைக் கொண்டு வந்து திரும்பிப் போனதைப் பார்த் தேன்.
தமிழகப் பதிப்பு முயற்சிகளையும் அணுக்கத்தில் இருந்து பார்க்கிறேன். இரு பதிப்புலகங்களின் ஏற்ற இறக்கங்களையும் அறிவேன்.
தமிழகப் பதிப்பாளர் ஈழத்துப் படைப்பாளிகளுக்குத் தரும் ஆதரவுக்குத் தலை தாழ்த்தி நன்றி கூறுவேன். தமிழகப் புத்தக விற்பனையாளர் ஈழத்தவர் நூல்களை வாங்கி விற்பதில் ஆர்வம் காட்டுவதற்கு, தமிழகத்தில் உள்ள வாசகர் வட்டமே காரணம். வழமைக்கு மாறான உரைநடை என்றாலும் பரவாயில்லை, நல்லனவற்றுக்கு ஆதரவு தருவோம் என்கின்றனர் வாசகர்.
தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு ஈழத்துப் படைப் புகள் சென்றடைகின்றன. சுன்னாகம் தனலக்குமியாரும் வரதரும் வீரகேசரியும் செய்ய முடியாததை நியு செஞ்சுரி, பாரி, வானதி, கழகம், கலைஞன், நர்மதா, தமிழோசை, கண்ணதாசன், காந்தளகம், குமரன், மித்ர செய்து வருகின்றனர்; இப்பணியைக் கடந்த சில ஆண்டுகளாக மணிமேகலைப் பிரசுரம் வெகு வேகமாகச் செய்து வருகிறது.
மணிமேகலைப் பிரசுரத்தாரின் அணுகுமுறைகள், வணிக உத்திகள் பற்றிய மாற்றுக் கருத்துகளைக் கேட்டிருக்கிறேன். தரமற்ற படைப்புகளுக்கு ஆதரவு தருகின்றனர் என்ற கருத்தும் உண்டு.
மட்டக்களப்பின் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் கவிதை களை முதன்முறையாகத் தமிழ்நாடு கூர்ந்து படிக்கவுள்ளது.
சாவகச்சேரி அ. பொ. செல்லையாவின் வெண்கலக் குரலைக் கேட்டோர், அவரது எழுத்தைத் தெரிந்து கொள்ளவுள்ளனர்.
திருகோணமலையில் காந்தி மாஸ்ரர் செய்த பணிகளைத் தமிழகம் நிமிர்ந்து பார்க்கப் போகிறது.
இணுவில் அநவரத விநாயக மூர்த்தியார் ஈழத்தவருக்குச் சொன்ன செய்திகள் இன்று தமிழகத்தில் கேட்கின்றன.
தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையே இந்த இலக்கிய உறவு ஈழத்துப் பூதந்தேவனாருக்கு முன் பிருந்தே தொடர்வதல்லவா?
ஆறுமுக நாவலர் சென்னையில் அச்சகம் நடத்திப் பதிப்பித்தமையும், புதுக்கோட்டை, கரூர் போன்ற பல இடங்களில் ஈழத்தவர் பதிப்பகங்கள் நடத்திய வரலாறும் உண்டல்லவா?
முத்துத்தம்பிப்பிள்ளை சென்னை பந்தர் தெருவில் அச்சகம் நடத்திப் பதிப்பித்ததும் அகராதி அச்சிட்டதும், அந்த அகராதியே இன்று ஆசிரியர் பெயரில்லாமல் தமிழ் உலகெங்கும் அமோகமாக விற்கும் பெரிய அகராதி எனவும் அன்பர் இமானுவேல் பிள்ளை கூறக் கேட்டேன்.
ஈழத்தவர் படைப்புகள் அங்கேயே முடங்காமல் பரந்த சந்தைக் குள் புகுந்து, பரந்த வாசகர் வட்டத்தைப் பெற்றுப் பயன்பெற வேண்டியே சென்னையில் காந்தளகம் தொடங்கினேன். 1980 தொடங்கி இன்று வரை 25 ஆண்டுகள் தளராமல் பணி புரிகிறேன்.
எனக்குப் பின், குமரன் செ. கணேசலிங்கன், பார்க்கர் வே. கரு ணாநிதி, மித்ர எஸ்.பொ., என்னிடம் பயின்ற மாசறு ஜெயராசசிங்கம் ஆகிய ஈழத்தவர் பதிப்பகங்களைத் தொடங்கி நடத்துகின்றனர்; முயன்று பணி புரிகின்றனர்.
புத்தகச் சந்தையின் சுளிவு நெளிவுகளைத் தெரிந்த மணிமேகலைப் பிரசுரம் போல, ஆண்டுக்கு நூறு என ஈழத்துத் தலைப்புகளைத் தமிழகத்தில் உள்ள ஈழத்தவரின் பதிப்பகங் களால் வெளிக்கொணர முடியவில்லை.
ஏனைய தமிழகப் பதிப்பகத்தார் எவரும் மணிமேகலையார் காட் டும் அதே அளவு ஆர்வத்தை ஈழத்துப் படைப்பாளிகள் மீது காட்டுவதில்லை.
மணிமேகலைப் பிரசுரத்தார் முன்பு 22 தலைப்புகளை வெளிட்டனர். சில திங்களுள் மீண்டும் கொழும்பு சென்று 26 தலைப்புகளை வெளியிட்டுளர். இவை வரலாற்றுப் பதிவுகள். ஏனெனில் இதுவரை எந்தத் தமிழகப் பதிப்பாளரும் இப்படியான விழாக்களை இலங்கையில் நிகழ்த்தவில்லை.
2005 மே 15ஆம் நாள் இதையொத்த வெளியீட்டு விழாவை மணிமேகலைப் பிரசுரத்தார் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடத்த உள்ளனர் என்பது ஈழத்துப் படைப்புலகத்துதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.
கவிதைத் துறையில் காசி ஆனந்தன் போல, திரைத்துறையில் பாலு மகேந்திரா, வி. சி. குகநாதன், சிலோன் விஜயேந்திரன், இன்றைய ஜெய் ஆகாஷ் போல, சிறுகதை, நாவல் எழுத்துகளில், கட்டுரை இலக்கியத்தில் ஈழத்தவர் மிளிரும் காலம் வரவேண்டும்; தமிழகப் பதிப்பாளரின் ஆதரவின்றி இந்தச் சாதனை நிகழக் கூடியதல்ல.
சிலோன் விஜயேந்திரன் நடிப்புத் தொழிலை விட்டு எழுத்துத் துறைக்கு முழுமூச்சாக வந்தார். மூத்த பதிப்பகங்கள் ஆதரவு கொடுத்தன. கழகம், பாரி, மணிவாசகர், அல்லயன்ஸ், கண்ணதாசன், கலைஞன் என அவருக்குப் பலர் ஆதரவு கொடுத்தனர்.
விபத்தில் தீக்காயங்களுடன் இறந்த செய்தி கேட்டதும் இப்பதிப் பகத்தார் ஒவ்வொருவரும் வந்து அவரது உடலுக்கு மரியாதை செய்தனர்; ஈமச் சடங்குச் செலவுகளை ஏற்றனர்; நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஈழத்தவர் என்றாலே காமாலைக் கண்ணுடன் பார்க்கக் கூடிய தமிழகச் சூழ்நிலையிலும் (இராஜீவ் கொலை விசாரணை தொடர்பாகச் சைதாப்பேட்டைச் சிறையில் ஓராண்டைக் கழித்தவர் சிலோன் விஜயேந்திரன்) தரமான எழுத்துக்கும் படைப் புக்கும் அணுகு முறைக்கும் தமிழகப் பதிப்பாளர் தரும் ஆதரவு போற்றுதற்குரியது.
மணிமேகலைப் பிரசுரத்தார் ஈழத்தவர் படைப்புகளை வெளிக் கொணரும் வேகத்தைப் பாராட்டுகிறேன். அவற்றைத் தமிழக, புது வைச் சந்தையில் பரப்பும் உத்தியைப் போற்றுகிறேன். உலகெங்கும் 15 நாடுகளுக்குச் சென்று ஈழத்துப் படைப்பாளிகளின் புத்தகக் காட்சி களை நடத்தும் பணியை வேறு எந்தப் பதிப்பகத்தாரும் செய்வதில்லை.
மணிமேகலைப் பிரசுரம் கொழும்பில் நடத்திய 26 நூல்களின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டோர் கூறிய கருத்துரைகளையும் மாற்றுக் கருத்துக் கூறுவோரின் உளப்பாங்கையும் ரவி தமிழ்வாணன் கருத்தில் கொள்வார்; தரமான, தவறுகள் குறைவான ஈழத்துப் படைப்புகளை வெளியிடுவார்.
ஈழத்துப் படைப்பாளிகள் தமிழகத்தில் பல பரிசுகளைப் பெறுவதற்கு மணிமேகலைப் பிரசுரமும் பிற பதிப்பாளரும் காரணமாக இருந்துளர். இப் பதிப்பாளர் மூலம் உலகப் பரிசுகள் பெறும் காலம் ஈழத்துப் படைப்பாளிகளுக்கு நிச்சயம் வரும்.

0 Comments:

Post a Comment

<< Home