Wednesday, September 28, 2005

மின் தமிழ் நூல்கள்

இந்து வார இதழில்
சுபாசு செயன் எழுதிய கட்டுரையின் தமிழ்த் தழுவல்

மதுரைத் திட்டம் என ஒன்றைச் செவியுற்றிருக்கிறீர்களா?
தமிழ் நூல்கள் அனைத்தையும் மின்னம்பலத்தில் அமைத்து, உலகில் எங்கே தமிழர் வாழ்ந்தாலும், எந்த நூலைப் படிக்க விரும்பினாலும் மின்னம்பலத்தில் வைத்தே படிக்கவோ, இறக்கிக் கணிப்பொறியில் வைத்துப் படிக்கவோ, அச்செடுத்துப் படிக்கவோ வசதிசெய்யும் திட்டமே மதுரைத் திட்டம்.
சுவிற்சர்லாந்தில் லோசேனில் வேதியியலாளராகப் பணிபுரிபவர் கலியாணசுந்தரம். 1995ஆம் ஆண்டுவாக்கில், அவருக்குத் தமிழைக் கணிப்பொறிக்குள் அடக்குவதில் ஆர்வம் பிறந்தது.
முதலில் மயிலை எனப் பெயரிட்ட தமிழ் அச்சுமுகம் ஒன்றை உருவாக்கினார்.
அடுத்துத் திருக்குறள் முழுவதையும் தட்டச்சுச் செய்தார். எவரும் மின்னம்பலத்தில் வாசிக்குமாறு ஏற்றினார்.
ஒத்த கருத்துள்ள பலர் கூடினர். கலியாணசுந்தரத்தைத் திட்டத் தலைவராக்கினர். 1998இல் மதுரைத் திட்டம் பிறந்தது.
இன்று அத்திட்டத்தில் உலகம் முழுவதும் 100பேருக்கு மேல் தொண்டுள்ளத்துடன் பணிபுரிகின்றனர். 200 தமிழ்நூல்கள் மின்னம்பலத்தில் ஏறியுள்ளன.
பாரதியார், பாரதிதாசன், கல்கி, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் போன்ற பலரின் நூல்களை மின்னம்பலத்தில் பார்க்கலாம்.
வைரமுத்து, ஜெயகாந்தன் போன்றோர் தம் படைப்புகளை அம்மின்னம்பலத்தில் வெளியிட உரிமை கொடுத்துள்ளனர்.
ஈழம், மலேசியா, சிங்கப்பூர் எழுத்தாளரின் நூல்களும் இடம்பெற்றுள.
மின்னம்பல முகவரி: www.tamil.net/projectmadurai
மனிதப் புலமை அனைத்தும் மின்னம்பல தளத்துள் வந்துவிட வேண்டும், எவருடைய ஆக்கமும் எம்மொழியில் இருந்தாலும் அது எந்த மனிதருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பரந்த நோக்குடன் இது வரை ஏறத்தாழ 50,000 தலைப்புகளை மின்னம்பல தளத்துள் ஏற்றியுள்ளோர், பங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய எணினி நூலகத்தினர் (Digital Library of India).
பங்களூரில் சி.வி. இராமன் தொடங்கிய இந்திய அறிவியல் நிறுவனத்தின் 20 ஏக்கர் வளாகத்தில் அமைந்த இந்த நூலகம், இந்திய மொழிகளில் உள்ள 20,000க்கும் அதிகமான தலைப்புகளை மின்நூல்களாக்கியுள்ளது.
அமெரிக்காவின் கார்ணகே மெலோன் பல்கலைக்கழகத்துடன் இந்திய எணினி நூலகம் இணைந்து பணிபுரிகிறது. உலக எணினி நூலகத்தை உருவாக்கி, புலமையைப் பகிர்வதே இவர்களின் நோக்கமாகும்.
மின்னம்பல முகவரிகள்: www.dli.ernet.in, www.ulib.org
மின்நூல்கள் உருவான கதை சுவையானது.
அமெரிக்காவில் 1971இல் மயிக்கேல் ஆர்டு என்பவர் பெரிய கணிப்பொறி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
அக்காலத்தில் மேசைக் கணிப்பொறிகள் வரவில்லை.
ஓய்வு நேரத்திலும் கணிப்பொறி அருகே இருந்தார்.
அமெரிக்க விடுதலைப் பட்டயத்தைத் தட்டச்சுச் செய்தார். மின்னம்பலத்தில் ஏற்றினார்.
1991இல் குட்டன்பேர்க்கு புள்ளி அமைப்பு மின்னம்பலமாயது. இன்று அந்த மின்னம்பலத்தில் 13,000 நூல்களைப் பார்க்கலாம், படிக்கலாம், இறக்கலாம், அச்செடுக்கலாம்.
மின்னம்பல முகவரி: www.gutenburg.org
மேலே கொடுத்த மின்னம்பல முகவரிகளுள் தமிழ் நூல்களுக்கான மின்னம்பல முகவரி தவிர்ந்த ஏனைய யாவும் அரசின் அல்லது தனியாரின் நிதி பெற்றுச் செயற்படுவன.
தமிழ் நூலுக்கான முகவரிக்கு மட்டும் யாரும் எந்த நிதி உதவியும் அளிப்பதில்லை. எனினும் தன்னார்வத் தொண்டர் பலர் தம் உழைப்பை நல்கித் தமிழை வளர்க்கின்றனர்; தமிழ்ப் புலமையை உலகுக்கு ஈகின்றனர்.

0 Comments:

Post a Comment

<< Home