தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டிகள்
தமிழில் புத்தக வாசிப்புப் பழக்கம் பெருக
தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டிகள்
மொழி என்ற வண்டி இல்லாமல், எழுத்தாளர் இல்லை. மொழி அறிவு இருக்கும் சமூகமே நல்ல புத்தகங்களை உருவாக்க முடியும். மொழி அறிவுக்கு அடிப்படை சொல்லாட்சி. தனக்குள் இருக்கும் சொல் வங்கியுள் இருந்து தேவைக்கேற்பப் பொருத்தமான ஏற்ற, சரியான சொல்லை எடுத்தாளும் திறன் உடையோர் சிறந்த எழுத்தாளர்.
எழுத்துகளின் கூட்டே சொல். எழுத்து மாற, சொல் மாறும், சொல் மாறப் பொருள் மாறும். சரியான எழுத்துக்கூட்டல் தெரியாதவர் பேதையரே. எனவேதான் வளர்ச்சிக்கு உரிய சமூகம், தன் சிறார்களிடையே எழுத்துக்கூட்டல் பயிற்சியை வளர்க்கிறது.
அமெரிக்காவில் 1870ஆம் ஆண்டு தொடக்கம் சிறார்களுக்கு எழுத்துக்கூட்டல் போட்டி ஆண்டுதோறும் நடக்கிறது. எழுத்துக்கூட்டல் போட்டிகளின் விளைவாக ஆங்கில அகராதிக்குள் 12 இலட்சம் புதுச் சொற்கள் புகுந்துள. அண்மைக் காலங்களில் புலம்பெயர் இந்தியக் குழந்தைகள் இப்போட்டிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.
அசாம் மொழியில் எழுத்துக் கூட்டல் போட்டிகளை இந்திய தேசிய புத்தக அறநிலையும், அசாமில் குழந்தைகளுக்கான புகழ்பெற்ற இதழான முசாக்கும் இணைந்து நடத்தின.
2005 சூலை 2ஆம் நாள் இப்போட்டிகள் தொடங்கின. சோரிகத்து மாவட்டத்தில் தொடங்கிய இப்போட்டி, வேறு 9 மாவட்டங்களுக்கும் பரவ உள்ளது.
அசாமிய மொழி வழி கற்கும் குழந்தைகள் மட்டுமே இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
ஐந்தாம் வகுப்புத் தொடக்கம் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவர் மட்டுமே இப் போட் டியில் கலந்து கொள்ளலாம்.
அசாம் மொழியை வளர்க்கவும், வாசிப்புப் பழக்கத்தைப் பெருக்கவும் இந்தப் போட்டி மாணவருக்கு உதவும்.
எழுத்துக்கூட்டலைச் சரியாகக் கற்றுக் கொள்வதற்கு ஒரே வழி, வழுவற்ற படைப்புகளை வாசிப்பதே.
தமிழில் இரா. பி. சேதுப்பிள்ளை, மு.வரதராசனார், அ. ச. ஞானசம்பந்தன் போன்றோரின் படைப்புகளை மாணவர் வாசிக்க வேண்டும். கல்கியின் புதினங்களைப் படிக்க வேண்டும்.
இவ்வாறு வாசிக்கத் தொடங்கிய ஒருவர், சொற்களைத் தெரிந்து வாசிக்கப் பழகுகிறார். சொற்களும் அவற்றின் எழுத்துக் கூட்டலும் மாணவரின் நினைவில் ஆழமாகப் பதிகின்றன.
உச்சரிப்புக்கும் எழுத்துக்கூட்டலுக்கும் உள்ள தொடர்பு இறுக்கமடைகிறது. மாணவர் இவ்வாறு வாசித்து வரினும், பெற்றோரும் ஆசிரியரும் மேற்பார்வை செய்து வரவேண்டும். சரியான எழுத்துக்கூட்டல், சரியான உச்சரிப்பு இவற்றை மாணவருக்குப் பழக்கவேண்டும்.
மின்னணுக் கருவிகள் புழக்கத்துக்கு வந்தபின் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. எழுத்துக்கூட்டல் போட்டிகள் மாணவரை வாசிக்கத் தூண்டும். மொழி தொடர்பான அறிவைப் பெருக்கும். மொழி மீது காதலை வளர்க்கும்.
வட்டார வழக்குகளை வெளிக்கொணரும். அரிய பல சொற்கள் சிறு ஊர்களில் இருந்து வெளியே புழக்கத்துக்கு வரும். நாளும் பொழுதும் புதுப்புதுச் சொற்களுக்குத் தேவை இருக்கையில், ஏற்கனவே புழங்கிய நல்ல தமிழ்ச் சொற்களை மீண்டும் புழக்கத்தில் விட எழுத்துக் கூட்டல் போட்டிகள் உதவும்.
பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குகையில் எந்த ஒலிக்கு எந்தத் தமிழ் எழுத்து என்ற குழப்பம் வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடும். தமிழில் எழுத்துக் கூட்டல் போட்டிகள் நடத்தினால், இத்தகைய ஒலி மற்றும் மொழி மாற்றத்தில் சீர்மை வரும்.
அசாமில் நடத்திய முன் உதாரணம் இருப்பதால், தேசிய புத்தக அறநிலையை அழைத்தால் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து, இங்குள்ள அரசு சாரா அமைப்பு ஒன்றுடன் இணைந்து போட்டியை நடத்துவதில் உதவுவர்.
முதலில் குழந்தைகளிடையே வினாக்கொத்து ஒன்றை வழங்குவர். இந்த வினாக்கொத்தைத் தேசிய புத்தக அறநிலை தயாரித்து வைத்துள்ளது. குழந்தை ஒன்றின் வாசிப்புப் பழக்கம் எத்தகையது என்பதை அறிய இவ்வினாக்கொத்துக்கு அக்குழந்தைதருவிடைகள் தெரிவித்துவிடும்.
போட்டியை நடத்தும் முறைகள்:
மாணவர் அனைவரின் பெயர் களைப் பதிதல். ஒவ்வொருவருக்கும் ஒரு சீட்டு. குலுக்கல் முறையில் சீட்டுகளைத் தேர்வதால் ஒரே பள்ளியில் பயிலும் இரு மாணவர் ஒன்றாக இருப்பதைத் தவிர்த்தல்.
9 சுற்றுக்களாகப் போட்டி.
முதல் சுற்றில் பொதுச் சொற்கள் எதையாவது எழுதச் சொலல்.
இரண்டாவது சுற்றில் பாட்டுக்குரிய சொல் எழுதுதல். பரவலாகத் தெரிந்த ஒரு தமிழ்ப் பாட்டு. அப்பாட்டுக்கு ஏற்ற பரத நாட்டியம். முதலில் பாட்டையும் நாட்டியத்தையும் வழங்கல். பின்னர் அதே பாட்டும் நாட்டியமும்: ஆனால் பாட்டு வரிகளில் சொற்கள் இடையடை வரா. அபிநயத்தை வைத்துப் பாட்டில் விடுபட்ட சொல்லைக் கண்டுபிடித்தல். சரியான எழுத்துக் கூட்டலில் அச்சொல்லை எழுதுதல்.
மூன்றாவது சுற்றுக் கதை சொல்லல்: கடல் நீர் ஏன் உப்பானது போன்ற சுவையான தலைப்பில் கதை ஒன்றைச் சொலல். அந்தக் கதையில் உணவுப் பொருள்களின் பெயர்கள் வரும். கதையைக் கவனமாகக் கேட்டபின், உணவுப் பொருள்களின் பெயர்களை எழுதச் சொல்லல். கவனித்தலுக்கும் எழுத்துக் கூட்டலுக்கும் சிறந்த பயிற்சி.
நான்காவது சுற்று: கணினி மூலம் திரையில் வீட்டுப் பொருள்கள் சிலவற்றைக் காட்டுதல். அப்பொருள்களின் பெயர்களை எழுதச் சொலல்.
ஐந்தாவது சுற்று: கணினி மூலம் வரலாற்றுச் சின்னங்களைக் காட்டல். அவற்றின் பெயர்களை எழுதச் சொலல்.
ஆறாவது சுற்று: கணினி மூலம் பறவைகளின் படங்களைக் காட்டல். அவற்றின் பெயர்களை எழுதச் சொலல்.
ஏழாவது சுற்று: கணினி மூலம் விலங்குகளின் படங்களைக் காட்டல். அவற்றின் பெயர்களை எழுதச் சொலல்.
ஏழு சுற்றுகளுக்கான விடைகளையும் தேர்வாளர் பார்த்து, சிறந்த மாணவர் பத்துப் பேரை அடையாளம் காணல்.
இந்தப் பத்துப் பேருக்கும் மீண்டும் எழுத்துக் கூட்டல் போட்டி நடத்துதல். ஒளி ஊடு செல்லும் தாளில் எழுத அதை மேசைஒளியைத் திரையில் காட்டும் கருவி மூலம் நடுவர் உடனுக்குடன் பார்த்துப் புள்ளியிட்டு முதல் மூன்று மாணவரைத் தேர்வர்.
முதலில் வட்ட அளவில், பின் மாவட்ட அளவில், பின் மாநில அளவில் என இப்போட்டியை நடத்துவதன் மூலம், மாணவரிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கலாம்; மொழி அறிவை வளர்க்கலாம்; படைப்பாற்றலை வளர்க்கலாம்; தாய்மொழியிலேயே அனைத்தையும் செய்யலாம் என்ற தன்னம்பிக்கையை வளர்க்கலாம்.
அறிதல் - அரிதல்; மைலாப்பூர் - மயிலாப்பூர்; வழி - வளி - வலி; போன்ற நுணுக்கமான எழுத்துக் கூட்டல் பயிற்சி இளமையில் தமிழ் மாணவருக்கு வந்துவிட்டால், தமிழை விட்டு வேறெங்கும் அவர் போகார்.
தமிழ் நூல்களின் விற்பனை பெருகவேண்டுமானால், தமிழ் மாணவரின் வாசிப்புப் பழக்கம் பெருகவேண்டும். எழுத்துக்கூட்டல் போட்டிகள் இதற்கு உதவும்.
(தேசிய புத்தக அறநிலைச் செய்திக் கதிரின் 2005 ஆவணி இதழில் வெளிவந்த கட்டுரையைத் தழுவியது.)
0 Comments:
Post a Comment
<< Home