Wednesday, September 28, 2005

எழுத்தாளர் - பதிப்பாளர் உடன்பாடு

இருசாரார் உரிமைகளைக் காக்கும்
எழுத்தாளர் - பதிப்பாளர் உடன்பாடு
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மொழி பெயர்ப்பாளர் சங்கத்தின் கூட்டம். வந்திருந்தவர் அத்தனை பேரும் தரமிக்க படைப்பாளிகள். காலை வந்தவர்கள், நிகழ்ச்சிகள் மாலையில் முடியும் வரை தங்கி, முழுமையாகத் தம்மை வெளிக்காட்டிச் சென்றார்கள்.
பற்பல பொருள்களில் கலந்துரையாடல்கள் நிகழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் அவர்களுட் பலரும் பதிப்பாளர் தரவேண்டிய உரிமை ஊதியம் பற்றியே பேசினர். பதிப்பாளர் உரிய முறையில் படைப்பாளிகளுக்கு உரியதைச் செய்வதில்லை என்ற கருத்து மேலோங்கி நின்றது.
பதிப்பாளருடன் ஒப்பந்தம் எழுதுவதில்லையா? என வினவினேன். இல்லை என்ற கருத்தே மேலோங்கி நின்றது. தெரிந்தவர்கள், நம்பிக்கையாகவும் நாணயமாகவும் நடப்பார்கள், எனவே ஒப்பந்தம் உடன்பாடு என்று போவதில்லை, தருவதை வாங்கிக் கொள்கிறோம், தராவிட்டாலும் கேட்பதில்லை, பதிப்பாளராக உணர்ந்து தரவேண்டும் அல்லது மொழிபெயர்ப்பாளர் சங்கம் ஆவன செய்யவேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருந்தது.
21ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம். புலமைச் சொத்துரிமை பற்றிய சட்டங்கள் மலிந்த காலம். உலகம் முழுவதும் மஞ்சள் தொடக்கம் திரைப்படத் திருட்டு வரை பதிப்புரிமை பற்றிப் பேசியும் எழுதியும் நீதிமன்றங்கள் வரையும் செல்லும் காலத்தில், தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் தமிழ்ப் பதிப்பாளருக்கும் இடையே நல்லுறவு குறைவாக இருப்பது வியப்பாக இருந்தது.
பதிப்புத் தொழில் உலகம் ஆனி இதழில், பதிப்பாளர் விற்பனையாளர் உடன்பாடு பற்றிய என் குறிப்புகள் வெளியானதும் பலர் பாராட்டினர். காலத்தின் தேவை என்றனர். முதல் பாராட்டைத் தெரிவித்தவர் இக்கின்பாதம்ஸ் நிறுவனத்தில் உள்ளவர்கள். வளர்தொழில் இதழில் அப்படியே அந்தக் கட்டுரையை மறுபிரசுரம் செய்தனர். அமுதசுரபி போன்ற சில நிறுவனங்கள் அந்த உடன்பாட்டு வரிகளை எடுத்து, தமது விற்பனையாளருடன் உடன்பாட்டைச் செய்துகொண்டன.
கிழக்குப் பதிப்பகத்தார் ஆங்கிலத்தில் உள்ள எழுத்தாளர் - பதிப்பாளர் படி ஒன்றை எனக்கு அனுப்பி, தமிழிலும் அத்தகைய உடன்பாட்டு வரிகளின் அவசியத்தை உணர்த்தியவர் கவிஞர் அண்ணா கண்ணன். மொழிபெயர்ப் பாளர் சங்கக் கூட்டத்தில் இத்தகைய உடன்பாட்டு மாதிரி ஒன்றன் தேவையை முழுமையாக உணர்ந்தேன்.
எழுத்தாளர் - பதிப்பாளர் உடன்பாடு இன்றி, காலம் காலமாகத் தமிழ்ப் பதிப்புலகம் வாழ்ந்து வருகிறதே, உடன்பாட்டின் அவசியம் ஏன் எனப் பதிப்பாளர் பலர் வினவுவர்.
தனது படைப்பு அச்சுவாகனம் ஏறினால் போதுமென்று தவிக்கும் எழுத்தாளரையும், பதிப்பித்த நூல்கள் விற்காத தேக்கத்தின் ஏக்கத்தில் வாடும் பதிப்பாளரையும் சட்டபூர்வமாக இணைக்காமலே ஆண்டுக்கு தோராயமாக 5,000 தமிழ்த் தலைப்புகள் வரை வெளிவருகின்றன.
அடுத்துவரும் மாதிரி உடன்பாடு முன்னோட்டப் படிவமே. இதில் உள்ள வரிகளைத் தேவைக்கேற்றவாறும், சூழ்நிலைக்கேற்றவாறும் மாற்றலாம், திருத்தலாம், புதியதைச் சேர்க்கலாம். ஆனாலும் சட்டத்தின் வட்டத்தை விட்டு வெளியேறாது பார்க்க.
இந்த உடன்பாட்டு வரிகள் வெளியானபின் அதைத் துணைக் கொள்வோர் நம்பகத்தன்மை வட்டத்தை விட்டு வெளி வந்தவரல்ல. நம்பகத் தன்மை சட்டங்களுக்கு அப்பாற்பட்டது. சட்டங்கள் செய்யமுடியாததை நம்பகத்தன்மை நிலைநாட்டிவிடும்.
ரூ. 20 உக்குரிய முத்திரைத் தாள். அதில் தெளிவான தவறற்ற சொற்களின் தொகுப்பான உடன்பாட்டு வரிகள். எழுத்தாளரும் பதிப்பாளரும் சாட்சிகளுடன் இடும் கையொப்பம். அந்தக் கையொப்பங்களை உறுதிசெய்யும் நொத்தாரிசுகளின் கையொப்பம். உடன்படுக, வளர்க.
உடன்பாடு
சென்னை, கார்வண்ணப்பேட்டை (அஞ்சல்குறி: 600000), திருநகர்ச் சாலை, 15ஆம் எண்ணில் உள்ள சிங்கப்பூர்ப் பதிப்பக உரிமையாளர் சிற்றம்பலம் மகன் முருகன் முதற்பகுதியாராகவும்
தென்னன்குடி மாவட்டம், பூநகர் (அஞ்சல்குறி: 688888), ஆற்றுச் சாலை, 25ஆம் எண்ணில் வசிக்கும் எழுத்தாளர் பறம்புமலையான் மகன் கபிலர் இரண்டாம் பகுதியாரகாவும் செய்து கொள்ளும்
உடன்பாடு / ஒப்பந்தமாவது:
அறிவுப் பரம்பலுக்கு வித்தாகும் தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் ஆர்வத்தினால், தரம் வாய்ந்த தமிழ்நூல்களைப் பதிப்பிப்பதைத் தொழிலாகக் கொண்ட முதற்பகுதியார், எழுத்தாளர் படைப்பாளிகளிடமிருந்து படைப்புகளைப் பெற்றும், தாம் பணி கொள்ளும் எழுத்தாளர்களிடமிருந்து படைப்பு களைப் பெற்றும் பதிப்பாசிரியர் மூலம் அப்படைப்புகளைத் தம் பதிப்பகக் கொள்கைக் கேற்ப ஒழுங்கு செய்து, அச்சிடுவித்து, பதிப்பித்து, தம் வெளியீடுகளை விற்பனைக்கு வைக்கும் சேவையைச் செய்து வருகிறார். இனிமேல் இந்த ஆவணத்தில் முதலாம் பகுதியாரது பணி சேவை எனப்படும்.
அறிவுப் பரம்பலுக்கு வித்தாகும் எழுத்து களையும் படைப்புகளையும் எழுதி வரும் இரண்டாம் பகுதியார் தன் படைப்பு களுக்குரிய சட்டபூர்வமான உரிமதாரர் ஆவர். இரண்டாம் பகுதியார் தன் படைப்புகளைத் தனக்கு உகந்த பதிப்பாளர் ஒருவரிடம் கொடுக்கும் உரித்துடையவர். இனிமேல் இந்த ஆவணத்தில் இரண்டாம் பகுதியாரின் எழுத்துகள் படைப்பு எனப்படும்.
தரமான நல்ல நூல்களைப் படைத்து அறிவுப் பரம்பலைப் பெருக்கும் நோக்கம் கொண்ட இரண்டாம் பகுதியார், முதற்பகுதியாரின் பதிப்பு ஆர்வத்தை அறிந்துகொண்டு, முதற்பகுதியாரின் சேவையை நாடி, முதற் பகுதியாருக்குத் தன் விருப்பத்தைத் தெரிவித்ததாலும்,
இரண்டாம் பகுதியாரின் விருப்பத்தை ஏற்று, அவருக்குத் தன் சேவையை வழங்க முதற்பகுதியார் உடன்படுவதாலும்,
மேற்கண்ட இரு பகுதியாரும் கீழ்க்காணும் விதிகளுக்கமையச் செயற்பட உடன்படுகின் றனர்.
விதிகளாவன:
1. முதற்பகுதியாரின் உரிமைக ளும் கடமைகளும்.
1.1 தான் இவ்வுடன்பாட்டின் கீழ் கொடுக்கும் படைப்பில் எவ்வித வணிக இரகசியமோ, காப்புரிமையோ, பதிப்புரிமையோ, தனியுரிமையோ, வெளியீட் டுரிமையோ, நம்பிக்கையுரிமையோ, வேறு எவரது எவ்வித உரிமையையோ மீறவில்லை, பாதிக்கவில்லை என்ற உறுதிமொழியை இரண்டாம் பகுதியார் முதற்பகுதியாருக்குக் கொடுக்கிறார்.
1.2 இந்தப் படைப்புக்கு இந்த உடன் பாட்டுக் காலத்தில் தாள் மூலம் அல்லது மின்னியல் மூலம் அச்சிட்டு மின் தளத்திலிட்டு அல்லது குறுந்தகடாக்கி, மின் புத்தகமாக்கி, ஒலி/ஒளிப் பேழைகளாக்கி புதிதாக வரும் பிற தொழில்நுட்பங்கள் மூலம் வெளியிட்டு, பதிப்பித்து விற்பனை செய்யும் முழு உரிமையை முதற்பகுதியாருக்கு இரண்டாம் பகுதியார் வழங்குகிறார்.
1.3 இவ்வுடன்பாடு கையொப்பமிட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு எவ்விதத் தடையும் குந்தகமும் இன்றி இந்தப் படைப்பை அச்சிட்டு வெளியிடும் முழுமையான உரிமையை முதற்பகுதியாருக்கு இரண்டாம் பகுதியார் வழங்குகிறார். இரண்டாம் பகுதியார் கூறும் புதிய விதிகளை ஏற்று இவ்வைந்தாண்டு காலத்திற்குப் பின்னரும் இப்படைப்பை வெளியிடும் முன்னுரிமை முதற்பகுதியாருக்கே உண்டு. முதற்பகுதியார் வெளியிட மறுத்தாலோ புதிய விதிகளை ஏற்க மறுத்தாலோ இரண்டாம் பகுதியார் வேறொரு பதிப்பாளரை நாடும் உரித்துடையர்.
1.4 இப்படைப்பினைச் சுருக்கவும் திருத்தவும் மாற்றவும் பதிப்பொழுங்கு செய்யவும் மீள்ஒழுங்கு செய்யவும் முதற் பகுதியாருக்கு அனைத்து உரிமைகளையும் இரண்டாம் பகுதியார் வழங்குகிறார்.
1.5 கதை, நாவல் மற்றும் புதினமாக இருப்பின், இப்படைப்பு வேறு எந்தப் படைப்பிலிருந்தும் எடுத்துச் செருகப்பட வில்லை என்ற உறுதிமொழியை இரண்டாம் பகுதியார் முதற்பகுதியாருக்குக் கொடுக்கி றார். இந்தப் படைப்பு முற்றுமுழுதாக தனது என்றும் உறுதிமொழிகிறார். வேறு எந்தப் படைப்பிலிருந்தும் உருவிச் செருகப்பட்டதோ புகுத்தப்பட்டதோ என்ற கோரிக்கையை எவராவது இப்படைப்புத் தொடர்பாக வைத்தால், அக்கோரிக்கைக்குப் பதில் அளிக்கவும் பொறுப்பேற்கவும் இரண்டாம் பகுதியார் முழழுமையாக ஒப்புகிறார்; அக்கோரிக்கை தொடர்பாக முதற்பகுதி யாருக்கு எவ்வித இழப்பும் வராது, இரண்டாம் பகுதியார் பார்த்துக்கொள்வார் எனவும் உறுதி கூறுகிறார்.
1.6 கதை, நாவல் புதினம் தவிர்ந்த பிற படைப்புகளுக்கு வேறு நூல்களிலிருந்தோ ஆக்கங்களிலிருந்தோ மேற்கோள் காட்டும் பொழுது அம்மேற்கோள்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதை ஆங்காங்கேச் சுட்டிக் காட்டி நன்றி கூற இரண்டாம் பகுதியார் கடமைப்பட்டிருக்கிறார். பிற படைப்பு களிலிருந்து எடுத்தாள அப்பதிப்பாளர் மற்றும் படைப்பாளரிடமிருந்து உரிமத்தைப் பெற்றுக் கொள்வது இரண்டாம் பகுதியாரின் கடமை யாகும். இவ்வாறான உரிமைகளைப் பெறு வதில் முதற்பகுதியாரின் உதவியை இரண்டாம் பகுதியார் கோரலாம்.
1.7 நாளிதழ், வார இதழ், மாத இதழ் போன்ற இதழ்களில் தொடர்கதையாக அல்லது கட்டுரையாக வெளிவந்த படைப்பாக இப்படைப்பு இருப்பின் அந்த இதழின் பதிப்பாளரிடமிருந்து தடையில்லாச் சான்றி தழை இரண்டாம் பகுதியார் பெற்று அச்சான்றி தழின் நகல் ஒன்றை முதற்பகுதியாருக்குக் கொடுக்க உடன்படுகிறார்.
1.8 கையெழுத்துப் படியாகவோ, தட்டச்சுப் படியாகவோ, கணிப்பொறிக் கோப்பாகவோ இரு பகுதியாரும் ஒப்புக்கொள்ளும் எழுத்து களாக இப்படைப்பை முதற்பகுதியாருக்குக் கொடுக்கவும், அச்சுக்குப் போகும் முன் மெய்ப்புப் பார்த்து, குறிப்பிட்ட கால எல்லை க்குள் இறுதி வடிவத்தில் ஒப்பமிட்டுக் கொடுக்கவும், வெளியீட்டின் இறுதி வடிவம் சரியானதாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொடுக்கவும் அதற்காக ஒத்துழைக்கவும் இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
1.9 இப்படைப்பின் வெளியீடு மக்களுக்குச் சென்றடையும் முகமாகச் சந்தைப்படுத்தலு க்காக ஊடகங்களுக்குத் தகவல் கொடுக்கவும், தனது படங்களைக் கொடுக்கவும், புத்தகக் காட்சிகளில் வந்து வாசகருக்கு ஒப்பமிட்டுக் கொடுக்கவும். பிற வகைகளில் முதற் பகுதியாருக்கு விளம்பரங்களில் உதவவும், இரண்டாம் பகுதியார் உடன்படுவதுடன் தனது முழுமையான வாழ்க்கை வரலாற்றுக் குறிப் பைக் கொடுக்கவும் இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
2. உரிமை ஊதியம்
2.1 இப்படைப்பை வெளியிட்டு விற்பதால் வரும் அனைத்து வருவாயிலும் 10% தொகையை இரண்டாம் பகுதியாருக்கு உரிமை ஊதியமாகக் கொடுக்க முதற்பகுதியார் உடன்படுகிறார். வெளியீட்டின் ஒன்றன் விலையே உரிமை ஊதியத்தைக் கணக்கிடும் தரவு ஆகும்.
2.2 முதல் பதிப்பில் அச்சிடும் படிகளின் எண்ணிக்கைக்குரிய விலைத் தொகையின் 10% தொகையை உரிமை ஊதிய முற்பணமாக இரண்டாம் பகுதியாருக்குக் கொடுக்க முதற் பகுதியார் உடன்படுகிறார். அதற்கு அடுத்த பதிப்புகளுக்கு, முதற்பகுதியாரின் நிதியாண்டு இறுதியில் அந்த ஆண்டில் விற்ற தொகையில் 10% தொகையைக் கணக்கிட்டு இரண்டாம் பகுதியாருக்குக் கொடுக்க முதற்பகுதியார் உடன்படுகிறார்.
2.3 இரண்டாம் பகுதியார் தரும் படைப்பின் கையெழுத்துப் படியையோ பிற எழுத்து வடிவத்தையோ பெற்றுக்கொண்டதாகக் கடிதம் கொடுக்கும்பொழுதே உரிமை ஊதிய முற்பணத்தையும் இரண்டாம் பகுதியாருக்குக் கொடுக்க முதற்பகுதியார் உடன்படுகிறார். கொடுப்பனவைகளில் கழிக்கும் வருமான வரி விதிகளைக் கடைப்பிடிக்க இருபகுதியாரும் உடன்படுகின்றனர்.
2.3 தமிழக அரசு மற்றும் அரசுகள் அல்லது நிறுவனங்கள் கொள்வனவு விலையை நிர்ணயித்தால் அந்த விலையே அக்கொள்வனவுப் படிகளுக்குரிய விலைத் தொகையாகும். அதற்கமைய இரண்டாம் பகுதியார் பெற்ற முற்பணத்தொகையில் முதற்பகுதியாருக்கு மீளளிக்கவேண்டும்.
3. பதிப்பாளரின் உரிமைகளும் கடமை களும்.
3.1 இவ்வுடன்பாட்டிற்கமைய இரண்டாம் பகுதியாரின் படைப்பைத் தன் சேவைக்காகப் பெறும் முதற்பகுதியார், பெற்றதற்கான கடிதத் தை இரண்டாம் பகுதியாருக்குக் கொடுப்ப துடன் இந்த உடன்பாட்டு ஆவணத்தின் இணைப்பாக அக்கடிதத்தின் ஒரு படியைச் சேர்க்க வேண்டும்.
3.2 இப்படைப்பைப் பதிப்பிக்கும் ஒழுங்கு, அமைப்பு, வடிவம் போன்றவை பதிப்பாளரின் முயற்சியால் வருவதால் அதற்குரிய பதிப்பு ரிமை முதற்பகுதியாருக்கு உரியதாகும்.
3.3 வெளியிடும் காலம் இடம் முதலிய வற்றை முதற்பகுதியார் தீர்மானிப்பர்.
3.4 இப்படைப்பைத் தரமுள்ள தாள், அச்சு, கட்டு போன்றவற்றால் உயர்த்தி, சந்தைப் படுத்தும் வாய்ப்பைப் பெருக்கும் கடமை முதற்பகுதியாருக்கு உரியது. சந்தைப்படுத்தும் செலவுகளையும் முதற்பகுதியாரே ஏற்றுக் கொள்வர்.
3.5 எந்தெந்தத் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்திப் பதிப்பித்தாலோ வெளியிட்டாலோ, இப்படைப்பு மக்களைச் சென்றடையும் என்ற கருத்தை மனதில் கொண்டு ஒன்றுக்கும் மேற் பட்ட வழிமுறைகளைக் கையாண்டு இப் படைப்பு அறிவுப் பரம்பலுக்கு உற்ற துணை யாக அமையுமாறு முதற்பகுதியார் பார்த்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளார்.
3.6 முதல் பதிப்பாகிலென், அதற்கு அடுத்த பதிப்புகளாயிலென், ஒவ்வொரு பதிப்பிலும் எத்தனை படிகளை அச்சிட்டுள்ளார் என்பதை முதற்பகுதியார், இரண்டாம் பகுதியாருக்கு அவை அச்சிட்டு வெளிவரும் காலத்தில் எழுத்து மூலம் அறிவிக்கக் கடமைப் பட்டுள்ளார். முதற்பதிப்பில் 1,200 படிகள் அச்சிட்டால் உரிமை ஊதியத்துக்காக 1,000 படிகளே கணக்கிடப்படும். எஞ்சிய 200 படிகள் சந்தைப்படுத்தல், விளம்பரம், அறிமுகம் போன்றவற்றிற்காகப் பயன்படும்.
3.7 ஒவ்வொரு பதிப்பிலும் 10 படிகளை இரண்டாம் பகுதியாருக்கு முதற்பகுதியார் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார். அவ்வாறு பெற்ற படிகளை விற்பனைக்கு அனுப்பாமல் பார்த்துக்கொள்வது இரண்டாம் பகுதியாரின் கடமையாகும்.
3.8 புத்தக விமர்சனத்துக்காக எவ்வெவ் ஊடகங்களுக்கு அனுப்ப வேண்டுமென இரண்டாம் பகுதியார் விதந்துரைத்தாலும் எவரெவருக்கு, எவ்வெப்பொழுது அனுப்ப வேண்டும் என்பதை இறுதியாக முடிவெடுப் பவர் முதலாம் பகுதியாரே.
3.9 வெளியீட்டின் தரம், தாள், அட்டை, மேலுறை, படிகளின் எண்ணிக்கை, அணிந் துரை எழுதுபவர் புகைப்படங்களை உள்ளடக் குதல், இணைப்புகளைச் சேர்த்தல் போன்ற வற்றைத் தீர்மானிப்பவர் முதற் பகுதியாரே. அத்துடன் நூலது விற்கும் விலையைத் தீர் மானிப்பவரும், விற்பனைக் கழிவுகளைத் தீர்மானிப்பவரும் முதற்பகுதியாரே. விளம்பர உத்திகள், விளம்பர ஊக்குபொருள்கள், ஊட கங்கள் போன்றவற்றை தெரிவு செய்து தீர் மானிப்பவரும் முதற்பகுதியாரே.
4. உடன்பாடு
4.1 இரண்டாம் பகுதியாருக்கு எழுத்து மூலம் ஒரு மாதத் தவணையைக் கொடுப்பதன் மூலம், காரணம் எதுவும் காட்டாமல் இரண்டாம் பகுதியாருக்கு இழப்பு ஏற்படாத வகையில் இந்த உடன்பாட்டிலிருந்து முதற்பகுதியார் விலகிக் கொள்ளலாம்.
4.2 இந்தப் படைப்புக்கு மட்டுமே இந்த உடன்பாடு பொருந்தும். இந்தப் படைப்புத் தொடர்பாக இரண்டாம் பகுதியார் வேறொரு வருடரேனும் செய்துகொண்ட உடன்பாட்டி னால் இந்த ஒப்பந்தம் - உடன்பாடு பாதிப் புறாது, வலுவுள்ளதாகவே இருக்கும்.
4.3 இந்த உடன்பாட்டில் இரு பகுதியாரும் பெறும் உரிமைகளையும், கடமைகளையும் இவ்வுடன்பாட்டுக் காலத்தில் வேறெவருக்கும் சார்புபடுத்த முடியாது.
இவ்வுடன்பாடும் ஒப்பந்தமும் இருபகுதி யாராலும் ஏற்படும் நோக்கம் உலகெங்கும் தமிழ்நூல் விற்பனையைப் பெருக்குவதும் அதன் மூலம் கல்வியும் அறிவும் பெருகுவது மேயாகும் என இரு பகுதியாரும் உடன் படுகின்றனர்.
எனவே இவ்வுடன்பாட்டுக் காலத்தில், இப்படைப்பின் விற்பனையைப் பெருக்கப் போதுமான முயற்சிகளை முதற்பகுதியார் செய்து வருகிறார் என்பதற்கான சான்றுகளை இரண்டாம் பகுதியாருக்கு ஆண்டு தோறும் முதற்பகுதியார் அனுப்ப ஒப்புக் கொள்கிறார்.
இவ்வுடன்பாடு / ஒப்பந்தத்தை மீறி இரண் டாம் பகுதியார் நடந்து கொள்வதால் / கொண் டதால் முதற் பகுதியாருக்கு ஏற்படும் இழப்பு களையும் செலவுகளையும் விரயங்களையும் முதற் பகுதியாருக்குக் கொடுக்க இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
இவ்வுடன்பாடு தொடர்பான வழக்குகள் சென்னை (அல்லது பதிப்பாளரின் ஊரின்) மாநகர நீதிமன்ற வரையறைகளுக்குள் மட்டுமே பொருந்தும்.
மேற்காணும் பந்திகளில் கூறியவற்றை நன்றாக வாசித்துப் புரிந்து கொண்டபின் இன்று திருவள்ளுவராண்டு 2036 புரட்டாதி 15ஆம் நாள் சனிக்கிழமை (01.10.2005), சென்னையில் முதற் பகுதியாரும் பின்னர் பூநகரில் இரண் டாம் பகுதியாரும் மனமொப்பி இவ்வுடன் பாட்டின் இருபடிகளில் நொத்தாரிசுகள் முன்னிலையில் கீழே ஒப்பமிட்டு உடன்பாட் டுப் படிகளை பரிமாறிக் கொள்கின்றனர்.
கையொப்பங்கள், சாட்சிகள்.

0 Comments:

Post a Comment

<< Home