Wednesday, September 28, 2005

வாசகரைத் தேடி வரும் தமிழ்நூல் பதிப்பாளர்

சமைப்பதற்கு மண்சட்டியே போதும் என்ற காலம் மாறிவிட்டது. அமெரிக்காவிலிருந்து வரும் உலோகச்சட்டியில் சமைக்கும் காலம் வந்துவிட்டது. அமெரிக்கச் சட்டி ஒன்றின் விலை 12,000 ரூபாய். இந்தச் சட்டியை வீடுவீடாகக் கொண்டுச் சென்று விற்பனை செய்கிறார்கள். இருபத்தைந்து ரூபாய் பெறுமதியான மண் சட்டியில் சமைத்தவர்கள் பன்னீராயிரம் ரூபாய் பெறுமதியான அமெரிக்க உலோகச் சட்டியில் சமைக்கத் தொடங்கியுள்ளனர்.நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. மண்சட்டிகள் சந்தைக்குத்தான் வரும். பல் அடுக்குச் சந்தைப்படுத்தல் பணியில் தமிழ்நாட்டில் பணிபுரியும் இலட்சக்கணக்கானோர் அமெரிக்க உலோகச் சட்டிகளை வீட்டுள் கொணர்ந்து விற்கின்றனர். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உற்பத்தியாகி, அங்கு விற்பனை ஆகாமல் தேங்கியுள்ள ஏராளமான நுகர்ச்சிப் பொருள்களைப் பல் அடுக்குச் சந்தையாளர் நுகர்வோர் வீட்டுக்குள் எடுத்துச் செல்கின்றனர். சமைத்துக் காட்டி விற்பனை செய்கின்றனர்.உற்பத்தியான பொருளைக் காட்சிக் கூடத்தில் விற்பனை செய்த காலம் மலையேறிவிட்டது. சந்தைப்படுத்தல் தனிக்கலையாக வளர்கிறது. உலக மயமாக்கல் என்ற போர்வையில் ஐரோப்பிய, அமெரிக்க நுகர்ச்சிப் பொருள்கள் தமிழர்களின் வீடுகளுள் புகுந்துள்ளன.உலகமயமாக்கல் அமெரிக்க உற்பத்திகளைத் தமிழ் நாட்டுக்குள் நுழைக்கின்றன. ஆனால் தமிழ் மொழியில் வெளியாகும் நூல்கள் பல தமிழகமயமாக்கப் படாமலே இருக்கின்றன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான தமிழ் நூல்கள் தமிழ்ப் பதிப்பாளரிடம் தேங்கியுள.இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் புத்தகங்களை விற்பதற்கான புது முயற்சிகள் பற்றி, 25 விற்பனையாளரின் வலைப்பின்னல் கொண்ட காந்தளகம் பதிப்பக உரிமையாளர் மறவன்புலவு க. சச்சிதானந்தனிடம் கேட்டோம். அவர் கூறியதாவது:எழுத்தறிவும், படிப்பறிவும், புலமையும் பெற்ற தமிழரின் எண்ணிக்கை மலை போல் உயர்ந்தாலும் தமிழ் நூல்கள் அவர்களை அவர்களைச் சென்றடைவதே இல்லை.தமிழ் வாசகர்களைத் தேடி அவர்கள் இருக்குமிடத்திற்கே தமிழ் நூல்களைக் கொண்டு சென்று காட்சியில் வைத்து விற்பனைச் செய்த முன்னோடி நிறுவனம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஒன்றுதான்.அதற்கு முன் வீடுவீடாகப் புத்தகங்களை எடுத்துச் சென்று வாசிக்கும் பழக்கத்தையும், தமிழ்ப் புத்தக அடுக்கு வீட்டில் வைத்திருக்கும் பழக்கத்தையும் புழங்கவிட்டவர் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத் தாமரைச் செல்வர் சுப்பையா.கால ஓட்டத்தில் தமிழ்ப் பதிப்பகங்கள் தமிழக அரசின் நூலக இயக்கத்தை மட்டும் நம்பியே நூல்களை பதிப்பிக்கத் தொடங்கின. இதனால் வாசகருக்கும் பதிப்பகத்தாருக்கும் இருந்த இடைவெளி விரிந்தது. புத்தகக் காட்சிகள் சென்னையிலும் தொடர்ந்து பிற நகரங்களிலும் நடந்து வருகின்றன. ஒவ்வொரு காட்சியைப் பற்றிக் கேள்விப்படும் புத்தக ஆர்வலர் அக்காட்சிக்குப் போகவேண்டுமே, புத்தகங்களைப் பார்க்க வேண்டுமே என்ற ஆர்வத்தால் துடிப்பர். அவரிடத்திலிருந்து காட்சி நடக்கும் தூரம் நெடுந்தொலைவு. அதனால் புத்தக ஆர்வலர் பலர் காட்சிகளுக்குச் செல்ல முடியாமல் உள்ளனர்.தமிழ்நாட்டில் மூலைமுடுக்குகளிலெல்லாம் புத்தகக்காட்சியை நடத்தி விடவேண்டுமென்ற எண்ணம் அண்மைக் காலங்களாக சில தமிழ் பதிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகெங்கும் சென்று தமிழ் நூலைப் பரப்ப வேண்டும் என்று நினைக்கும் தமிழ் பதிப்பாளரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், அரபு நாடுகளிலும், மொரீசியசு, மலைஷியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளிலும் ஊரூராகச் சென்று புத்தகக் காட்சி நடத்தி வருபவர் மணிமேகலைப் பிரசுரத்தின் ரவி தமிழ்வாணன். தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் இவர் புத்தகக் காட்சிகளை நடத்தி வருகிறார்.கலைஞன் பதிப்பகத்தார் மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் சென்று பல ஊர்களில் புத்தகக் காட்சிகளை நடத்தினர்.கண்ணதாசன் பதிப்பகத்தாரும் கொழும்பில் புத்தகக்காட்சியை நடத்தினர். தமிழ்நாட்டின் ஊர்களிலும் நடத்தினர்.கோவை விஜயா பதிப்பகத்தாரின் புத்தக விற்பனை முயற்சிகள் புதுமையானவை. கொங்கு நாட்டில் ஊர்கள் தோறும் தமிழ்நூல்களை விற்பனை செய்வதில் விஜயா பதிப்பகம் சிறந்த முயற்சிகளை மேற்கொள்கிறது.தமிழ்நாட்டில் தமிழ்நூல் விற்பனையாளரின் மிகப் பெரிய வலைப்பின்னலைக் கொண்ட ஒரே நிறுவனம் காந்தளகம். ஏறத்தாழ 25 விற்பனையாளர்களை உருவாக்கி, ஆதரவு கொடுத்து வளர்த்து வருகிறது. இந்த விற்பனையாளர் தங்கள் காலிலேயே புத்தக விற்பனைத் தொழிலை நம்பி வாழவேண்டுமென்ற இலக்கோடு முயற்சிக்கிறார்கள். இவர்களுள் பலர் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.காந்தளகம் இதுவரை மூன்று பயிற்சி வகுப்புகளைத் தமிழ் நூல் விற்பனையாளர்களுக்காக நடத்தியுள்ளது. தமிழ்நாட்டின் மூத்த பதிப்பாளர்களை இவ்விற்பனையாளர் வலைப்பின்னல் ஈர்க்கிறது. வாசகர்களுக்கு அனைத்துப் பதிப்பகங்களின் தமிழ் நூல்களும் கிடைக்க வேண்டுமென்பதில் காந்தளகம் முனைப்பாக உள்ளது.காந்தளகத்தின் இந்த விற்பனை வலைப்பின்னலைப் பயன்படுத்த கலைஞன்/அநுராகம் பதிப்பகத்தார் விரும்பினர். காந்தளகத்தின் விற்பனையாளர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்தனர். சமகாலத்தில் 25 நகரங்களில் கலைஞன்/அநுராகம் பதிப்பகத்தின் நூல்களைக் காட்சியில் வைத்து விற்கும் திட்டத்தை கலைஞன்/அநுராகம் நந்தா காந்தளக விற்பனையாளருக்கு விளக்கினார். சிறிய அளவில் புத்தகக்காட்சியை நடத்துவதைப் பற்றி நான் விளக்கினேன்.ஒவ்வோர் இடத்திலும், ஒவ்வொரு சூழலிலும் ஏற்படும் சிக்கல்களை எடுத்து நோக்கினோம். வணிகத்தின் வெற்றிக்குரிய தூண்களான கடுமையான உழைப்பு, நம்பிக்கை, நாணயம், வாடிக்கையாளர் மனநிறைவு என்பன பற்றி ஆராய்ந்தோம்.காந்தளக வணிக உரிமதாரர் ஒவ்வொருவரும் தத்தம் நிலையை எடுத்துக் கூறினர். இடம், காலம், ஆட்சி, விளம்பரம், போக்குவரவு, மாலை நிகழ்ச்சிகள், தொடக்கவிழா, செய்தி, பள்ளிகளின் பங்களிப்பு, நாளாந்த வரவு செலவுக் கணக்கு, விற்பனைக் கழிவு போன்ற அனைத்தையும் அலசி ஆராய்ந்தோம். தமிழகமெங்கும் சமகாலத்தில் 25 புத்தகக் காட்சிகளை நடத்த முடியுமென்ற நம்பிக்கையை எமக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் தந்தது.நல்ல அடித்தளத்தை அமைத்து, மனிதவளத்தைப் பயன்படுத்தித் தமிழ்நூல் விற்பனைப் பெருக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் விற்பனையாளர் வலைப்பின்னலுக்கு வலிமையூட்ட வியூகம் வகுத்தோம்.எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் குழுமத்தைக் கலைஞன்/அநுராகம் நந்தா அணுகினார். அவர்களின் வெளியீடான தினமணியை இந்த முயற்சியில் இணையுமாறு கேட்டார். இசைவைப் பெற்றார்.இந்த வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது தமிழ்நாட்டில் 27 நகரங்களில் தினமணி காந்தளகம் அநுராகம் இணைந்த தமிழ்நூல் கண்காட்சிகள் நடந்துக் கொண்டிருக்கும். தமிழ்நூல் பதிப்பு விற்பனை வரலாற்றில் இதுவே முதல் முயற்சி.தாமரைச் செல்வர் திரு. சுப்பையா வீடுவீடாகச் சென்று தமிழ்நூல் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டியதை அவர் வழிவந்த முத்துக்குமார சுவாமி தம்பதியர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தெருவோரங்கலில் பந்தலிட்டும், பள்ளிகளுக்குள் சென்றும். பேருந்தில் அனுப்பியும் தமிழ்நாடெங்கும் தமிழ்நூல் விற்பனையைப் பெருக்கியதைக் கண்ணால் பார்த்திருக்கிறேன்.ஒரேகாலத்தில் தமிழ்நாட்டின் சிறிய நகரங்களில், அதுவும் இதுவரை புத்தகக் காட்சி நடைபெறாத பல நகரங்களில் பத்து நாள்களுக்குத் தொடர்ந்து புத்தகக் காட்சியை நடத்துவது தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.காந்தளகமும், தினமணியும், அநுராகமும் கைகோர்த்து இம்முயற்சியில் இணைந்திருக்கின்றன. இந்த முயற்சி வெற்றி பெற்றால் அடுத்துத் தமிழ்நாட்டில் 100 நகரங்களில் சமகாலத்தில் புத்தகக் காட்சியை நடத்தக் காந்தளகம் முன்வரும். இணைந்து நடத்த மூத்த தமிழ்ப் பதிப்பகங்கள் பல காத்திருக்கின்றன. காந்தளகத்துடன் இணைந்து அனைத்துத் தமிழ்ப் புத்தகங்களையும் உங்கள் ஊரிலேயே விற்பனை செய்யவும், புத்தகக் காட்சிகள் நடத்தவும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: காந்தளகம், 68, அண்ணாசாலை, சென்னை 600 002.இவ்வாறு மறவன்புலவு க. சச்சிதானந்தன் கூறினார்.

0 Comments:

Post a Comment

<< Home