Tuesday, October 25, 2005

ஆ. இரா. வெங்கடாசலபதி - நவீனத் தமிழ்ப் பதிப்புலகம்.

22.1.2003
ஆசிரியர்,
காலச்சுவடு,
அன்புடையீர்,
காலச்சுவடு 45 ஜன-பிப் 2003
கட்டுரை: ஆ. இரா. வெங்கடாசலபதி - நவீனத் தமிழ்ப் பதிப்புலகம். பக் 17 முதல் பந்தி:
வணக்கம்.
புகலிடத் தமிழர்களை நம்பிப் புத்ததகத் தொழில் நடாத்தப்படுகிறது என்று சொல்வது மிகை என்ற கருத்தை முதலில் எடுத்துக்கொள்கிறேன்.
இப்படியான கருத்தைத் தொழிலை அறிந்தவர் எவரும் சொல்வதில்லை. போகடி போக்கில் எவரோ சொல்வதை ஊன்றிய கருத்தாதக் கொள்வது முறையல்ல. இந்தியத் தமிழர் தொகைக்கும் புகலிடத் தமிழர் (ஈழத்தமிழர் உள்ளிட்டோர்) தொகைக்கும் உள்ள தகவுப் பொருத்தமும் இவ்விருஇடங்களிலும் புத்தகங்கள் வாங்குவோர் தொகைகளுக்கிடையேயான தகவுப் பொருத்தமும் நேரடித்தொடர்புடையனவல்ல. தமிழ்ப்புத்தகங்களை வாங்கும் மக்கள்தொகையில் பெருவிழுக்காடு புகலிடத் தமிழரிடை உண்டு. எழுத்தறிவு விழுக்காடு 80க்கு அதிகமாகவே கடந்த 50 ஆண்டுகளாகப் புகலிடத் தமிழரிடம் இருந்து வருகிறது. இந்தியத் தமிழரின் எழுத்தறிவு, 1951இல் 14ஆக இருநத்தது, 2001இல் 73ஆக மட்டுமே உயர்ந்துளது. மக்கள் தொகையில் தகவுப்பொருத்தக் குறைவினரான புலம்பெயர்ந்தவர், புத்தகம் வாங்குவதில் அதிகமானவராவே உளர். 1950களுக்குப் பின்னர் தமிழ்ப் புத்தக உற்பத்தியில் ஏறத்தாழ 30% உற்பத்தியைப் புகலிடத் தமிழரே விலைகொடுத்து வாங்கி வருகின்றனர். தமிழ்ப்புத்தக உற்பத்தியைத் தாங்குபவர்களுள் புகலிடத் தமிழர் முக்கியமானவர்கள்.
இ-காமார்ஸ் முறையில் தமிழ்நூல் விற்பனை கிட்டத்தட்ட இல்லை என்பது இதற்கொரு சான்று என்ற கருத்தை அடுத்து எடுத்துக்கொள்கிறேன்.
1999 முதலாகத் தமிழ்நூல்காம் என்ற இணைய தளத்தை நடத்தி வருகிறோம். முன்னாள் காவல்துறைத் தலைவர் திரு. ராஜ்மோகன் 1998 ஆனி முதல் தமிழ்நூல் விற்பனைக்காக இணைய தளத்தை நடத்தி வருகிறார். இன்தாம் இணையதளத்தில் தமிழ்நூல் விற்பனைக்கு வசதி உண்டு. இவைதவிர, கண்ணதாசண், மணிமேகலை, மீனாட்சி, காலச்சுவடு போன்ற பதிப்பகங்கள் மின்னஞ்சலில் தம் பதிப்புகளை விற்பனை செய்கின்றனர். 2002ஆம் ஆண்டில் ஒரு மாதத்துக்குச் சராசரியாக ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான தமிழ்ப்புத்தகங்களை எங்கள் புகலிட வாடிக்கையாளர்களுக்காகத் தமிழ்ப்பதிப்பாளரிடமிருந்து கொள்வனவு செய்தோம் என்பதைக் கட்டுரை ஆசிரியர் அறியாமலிருக்கிறார் போலும்.
இச்செய்திகளைக் கட்டுரை ஆசிரியருடனும் காலச்சுவடு வாசகர்களுடனும் பகிர்ந்துகொள்வீர்களாக.
நன்றி
அன்புடன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

0 Comments:

Post a Comment

<< Home