Tuesday, October 25, 2005

ஈழத்துப் புலமை தமிழ் உலகில் புகழ்பூக்க......

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்நாட்டுக்கு வந்து, தன் கவிதைகளை அரங்கேற்றினார். சங்கப் பாடல்களுள் ஏழு (அக.-3 குறு.-3நற்.-1) இடங்களில் அவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவர் காலத்திலும் பின்பும் வாழ்ந்து மறைந்த பல நூற்றுக்கணக்கான ஈழத்துப் படைப்பாளிகளின் சிறந்த ஆக்கங்கள் தமிழ் உலகுக்குத் தெரியுமாறு வெளி வரவில்லை.
யாழ்ப்பாண அரசன் அரசகேசரியின் மொழிபெயர்ப்பு நூல் இரகுவ மிசம். யாழ்ப்பாணம் சின்னத்தம்பிப் புலவர் திருமறைக் காட்டின் அருள்மிகு வேதாரணிய ஈஸ்வரர் கோயிலைப் பாடிய மறைசை அந்தாதி சிறந்த பிரபந்த இலக்கியம். எனினும் தமிழ் உலகில் இதுபோன்ற இலக்கியங்கள் பற்றி அறிந்தவர்களும், பேசுபவர்களும் ஈழத் தமிழர்களாகவே இருப்பர்.
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் தமிழ் நாட்டில் பதிப்பு முயற்சிகளை மேற்கொண்டார். முப்பதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களை வெளியிட்டார். சென்னையை நடுவணாகக் கொண்டு இவரது பதிப்பு முயற்சிகள் அமைந்ததால், தமிழ் நாடு, மலேசியா, சிங்கப்பூர், பிஜி, மொரிசியசு, தென்ஆபிரிக்க அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். நாவலரின் நாவன்மையையும், உரைநடை வளத்தையும், பதிப்பு வன்மையையும் போற்றாத உலகத் தமிழர்கள் குறைவு.
இவரையொட்டியே சி. வை. தாமோதரம்பிள்ளையும் சென்னையைப் பதிப்புக் களமாகக் கொண்டார்.
வைமன் கதிரவேற்பிள்ளையின் அகாராதிகளை மதுரைச் தமிழ்ச் சங்கம் வெளியிட்டதால் தமிழ் உலகம் அவரைத் தெரிந்துக் கொண்டது.
காசிவாசி செந்திநாத ஐயர், தென்புலோலியூர் கதிரவேற்பிள்ளை போன்றோர்கள் தமிழகத்தில் தம் பதிப்புகளை வெளியிட்டதால் நன்றாக அறியப்பட்டனர்.
சுவாமி ஞானப்பிரகாசரையோ, கல்லடி வேலுப்பிள்ளையையோ, மட்டுவில் ம. க. வேற்பிள்ளையையோ, ம. வே. திருஞானசம்பந்தரையோ, வித்துவான் கணேசையரையோ, பண்டிதமணி கணபதிப்பிள்ளையையோ, சு. சிவபாதசுந்தரனாரையோ தமிழ்உலகு முழுமையாக அறியவில்லை. புலமையிலும், திறமையிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லா இவர்களைப் போன்ற பலரைத் தமிழ் உலகு அறியாததற்குக் காரணம் இவர்களின் பதிப்புகள் ஈழத்துக்குள் முடங்கியதுதான்.
சுவாமி விபுலானந்தரின் தமிழக வாழ்வும், பதிப்பு முயற்சியும், தஞ்சாவூரில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் யாழ் நூல் அரங்கேற்றமும் தமிழுலகின் மிகச் சிறந்த புலமையாளருள் ஒருவராக அவரைக் கணிக்க உதவின. தனிநாயாக அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைச் சென்னையில் நடத்த முன்பே, தமிழக அறிஞர்களுக்குப் புலப்பட்டவர். தமிழ் உலகின் கணிப்பைப் பெற்றவர். அதற்குக் காரணம் தூத்துக்குடி மறை மாவட்டத்தின் பங்குத் தந்தைகளுள் ஒருவராக அவர் இருந்து தமிழ் நாட்டில் தன் புலமையை வெளிக்காட்டியதுதான். அதனால் உலகம் போற்றுமளவு உயர்ந்தார்.
ஈழத்துப் பூதந்தேவனார் முதலாகத் தனிநாயக அடிகள் ஈறாக, ஈழம் உற்பவித்த சிறந்த சிந்தனையாளர்கள், புலமைப் பெட்டகங்கள், திறமைக் கொழுந்துகள் பற்பலருள் மிகச் சிலரையே தமிழுலகு அறிந்தமைக்குக் காரணம், இச்சிலர் தமிழ் நாட்டின் புலமைக் களத்துள் புகுந்து புலப்பட மிதந்தமையே.
தமிழ் நாட்டில் வெளியான நூல்கள் ஈழத்துக்கு வந்து சேரும் அளவுக்கும், விகிதாசாரத்திற்கும் ஏற்ப ஈழத்து வெளியீடுகள் தமிழ் நாட்டிற்குள் வராததும் இதற்குரிய அடிப்படைக் காரணங்களுள் ஒன்று.
தமது தரமான வெளியீடுகளைத் தமிழ் நாட்டுக்கு அனுப்ப முடியவில்லையே! தமிழ் நாட்டுப் புத்தகச் சந்தைக்குள் புக முடியவில்லையே! என்ற ஆதங்கம் ஈழத் தமிழ்ப் புலமையாளர்களுக்கு நெடுங் காலமாகவே உண்டு. இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடாக 1971-1977 கால ஆட்சியில் கி. லட்சுமண ஐயர் தலைமையில் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, பிரேம்ஜி உள்ளிட்ட முற்போக்கு எழுத்தாளர் அமைப்பு, தமிழ் நாட்டில் வெளியாகும் `குப்பை - கூளங்கள்' ஈழத்திற்குள் வருவதற்குத் தடைகளும் கட்டுப்பாடுகளும் அமைக்க விதந்துரைத்தது. அவர்களின் விதந்துரையைக் கொழும்பு அரசு ஏற்று 1971-1977 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தியது.
இதன் பெறுபேறாக ஈழத்துப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் ஈழத்திலே பெரும் எண்ணிக்கையில் வெளிவந்தன. வீரகேசரியின் மாதமொரு நாவல் திட்டத்தின் கீழும், பிற பதிப்பாளர்களின் திட்டங்களின் கீழும் பல நூல்களை ஈழத்துப் படைப்பாளிகள் இக்காலத்தில் வெளிக் கொணர்ந்தனர். குடத்தில் இட்ட விளக்காகவே இவ்வெளியீடுகள் ஈழத்துள் முடங்கின. எதிர்ப்புச் சிந்தனையின் செயல்வடிவமாகவே இஃது அமைந்தது.
க. கைலாசபதியும், கா. சிவத்தம்பியும், கி. இலட்சுமண ஐயரும், செ. கணேசலிங்கனும் தமிழ் நாட்டில் பதிப்பகங்களை அணூகித் தமது நூல்களை வெளியிட்டு வந்தனர். தமது ஈழத்துச் சக படைப்பாளிகளுக்குத் தமிழ் நாட்டில் பதிப்புக் களம் அமைத்துக் கொடுத்தார்களா என்ற வினா இப்பொழுதும் கேட்கப்படுகிறது. அக்காலத்தில் சென்னை பாரி நிலையம் செல்லப்பன் ஈழத்துப் படைப்பாளிகளை ஊக்குவித்தார். நியுசெஞ்சுரிபுக்ஹவுஸ் முற்போக்கு எழுத்தாளரை மட்டும் ஊக்குவித்தது.
1980இல் காந்தளகம் அமைந்ததும் ஈழத்துநூல்களை இந்தியாவுக்குள் முதல்முதலாக இறக்குமதி செய்தது. இன்றுவரை இறக்குமதி செய்துவருகிறது.1990க்குப் பின் குமரன் பதிப்பகம் (செ. கணேசலிங்கன்), மித்ரா பதிப்பகம் (எஸ். பொன்னுத்துரை) ஆகிய பதிப்பகங்களும் தமிழ் நாட்டில் ஈழப் புலமைப் படைப்பாளிகளுக்கு பதிப்பரங்குகளாகின. 1983க்குப் பின் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளுக்குத் தமிழகத்தின் புகழ் பெற்ற பதிப்பகங்களான நர்மதா, கலைஞன், திருமகள், சிஎல்எஸ், பாரி, கழகம், நியுசெஞ்சுரி, பொதியவெற்பன் போன்றவை ஆதரவு கொடுத்தன.
கடந்த சில ஆண்டுகளாக மணிமேகலை பிரசுரம் புலம் பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களது ஆக்கங்களை வெளியிடுவதற்கான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி ஆண்டொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டு வருகிறது. இத்தகைய முயற்சியை இதுவரை வேறெந்தத் தமிழகப் பதிப்பகமும் மேற் கொள்ளவில்லை.
எனினும் காந்தளகம் தவிர வேறெவரும் ஈழத்திலிருந்து தமிழ் நூல்களைத் தமிழகத்துக்கு இறக்குமதி செய்வதில்லை.
ஈழத்துப் படைப்பாளிகள் தத்தம் இடங்களிலேயே வெளியிடும் நூல்களை தமிழகச் சந்தைக்கும் அனுப்பக்கூடிய வாய்ப்பை 1977 முதல் இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறினோம். இலங்கை-இந்திய வணிகக் கொடுக்கல்-வாங்கல் இந்தியாவிற்குச் சாதகமாகவே எப்பொழுதும் இருக்கும். இந்திய ஏற்றுமதி அதிகமாகவும், இலங்கை ஏற்றுமதி குறைவாக இருக்கும்போது இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய்ககூடிய புதிய பொருட்கள் எவை என்ற வினா அப்பொழுது கொழும்பில் எழுந்தது?
நானும் தி. ச. வரதராசனும் க. கைலாசபதியும், க. ஜீவகதாசும் மற்றும் சில படைப்பாளர் நண்பர்களும் 1978இல் யாழ்பாணத்தில் ஒருநாள் கூடினோம். தமிழ் நூல்களையும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருளாகக் கருதுமாறு ஒரு தீர்மானம் இயற்றினோம். தமிழர் பொருளாதார இயக்கம் சார்பாக அத்தீர்மானத்தை அப்பொழுது வர்த்தக அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலிக்கு அனுப்பினோம். நாளிதழ்களில் செய்தியாகவும் இத்தீர்மானம் வெளிவந்தது. கொழும்பு அரசுக்கு அதில் ஆர்வம் இருக்கவில்லை.
தமிழ் நாட்டில் வெளியாகும் தமிழ் நூல்களை இலங்கையில் இப்பொழுது பெருந்தொகையாக வாங்கத் தொடங்கியுள்ளார்கள். உள்ளூராட்சி அமைப்புகள், மாகாண அவைகள், கொழும்பு அரசின் அமைச்சுகள் நூலகங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. உதவியாகவும் மறுசீரமைப்புத் திட்டங்களின் கீழும் இலங்கைக்கு வெளிநாடுகள் நிதி வழங்குகினறன. உலக வங்கியும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் நூலக வளர்ச்சிக்குக் கடன்கள் வழங்கி வருகின்றன.
இவ் ஒதுக்கீடுகளில் கணிசமான பகுதியை ஒவ்வொரு நிலையிலும் தமிழ் நூல்களைக் கொள்வனவு செய்யத் தருகிறார்கள். பல நூலகங்கள் முழுமையாக இவ் ஒதுக்கீடுகளைத் தமிழ் நூல்களுக்காகச் செலவு செய்வதில்லை. சில அலுவலகங்களில் ஏனோதானோவெனவும் திட்டமிடாமலும் தமிழ் நூல்களை வாங்குகிறார்கள். ஒரு தலைப்பையே ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து வாங்கும் நிலையும் உண்டு. நூலகங்களுக்கான தமிழ் நூல் கொள்வனவில் அரசு வழங்கும் நிதி ஒதுக்கீடுகள் ஒருங்கிணைந்த முறையில் பயன்படுவதில்லை.
அண்மையில் தமிழ் அமைச்சர் திரு சந்திரசேகரனைச் சந்தித்தேன். பல லட்ச ரூபாய்கள் பெறுமதிக்குத் தமிழ் நூல்கள் கொள்வனவு செய்யவேண்டுமெனவும் தமிழகப் பதிப்பாளர் ஒருவரை நாடலாமா என எண்ணிக்கொண்டிருப்பதாகவும் கூறினார். அவரிடம் பின் வரும் செயற் திட்டத்தை எழுதிக் கொடுத்தேன்.
1. கொழும்பு அரசின் பல்வேறு மட்டங்களில் உள்ள தமிழ் நூல் கொள்வனவுக்கான நிதி ஒதுக்கீடுகளைத் திரட்டி தமிழக அரசின் பொது நூலக இயக்குனரிடம் கொடுத்து ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படிகள் வேண்டும் எனக் கூறுதல்.
2. தமிழகத்தில் வெளியாகும் தமிழ் நூல்களை அந்நூல்களில் குறிப்பிட்டுள்ள விற்கும் விலைக்குக் கொளவனவு செய்யாமல், தமிழக அரசின் பொது நூலகத் துறை நிர்ணயித்த விலையான - பதினாறு பக்கப் படிவம் ஒன்றுக்குத் தலா ரூ.2.10பைசா அல்லது ரூ.2.60பைசா என்ற விலை அடிப்படையில் வாங்குதல்.
3. நூல்களைத் தெரிவுசெய்யும் தமிழக அரசின் குழுவில் கொழும்பு அரசின் பிரதிநிதிகள் இருத்தல்.
4. மாற்றாக இலங்கையில் வெளியாகும் ஈழத்தமிழ்ப் படைப்புகள் ஒவ்வொன்றிலும் 850 படிகளைத் தமிழக அரசின் நூலகத் துறை கொள்வனவு செய்தல். இலங்கை அரசு ஆண்டுதோறும் விளம்பரம் செய்து தமிழகத்தைப் போல இலங்கையிலும் விலை நிர்ணயம் செய்து, குழு அமைத்து, தெரிவு செய்து, வாங்கித் தமிழக அரசுக்கு அனுப்புதல்.
6. இந்த இரு தரப்புத் தமிழ் நூல் கொள்வனவு உடன்பாட்டை இலங்கை-இந்திய அரசுகளின் கூட்டுச் செயற்பாடாக உடன்பாடு எழுதுதல்.
7. இதன்காரணமாய் ஒவ்வொரு ஆண்டிலும் தமிழகத்தில் வெளியாகும் புதுப்பதிப்புகள் மட்டுமே நூலகங்களைச் சென்றடையும். குறைந்த விலையில் தமிழக நூல்கள் இலங்கை நூலகங்களுக்குக் கிடைக்கும். ஈழத்துப் படைப்பாளிகள் தமிழகப் பதிப்பகங்களை நம்பியிராமல் ஈழத்திலேயே வெளியிட அந்நூல்கள் தமிழக நூலகங்களையும் சென்றடையும். தமிழக நூலகங்களில் ஈழவெளியீடுகள் இருந்தால் அந்நூல்களுக்குத் தமிழகப் புத்தகச் சந்தையிலும் `கிராக்கி' ஏற்படும். தமிழகப் பதிப்பகங்கள் ஈழத்து வெளியீடுகளை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும். ஈழத்துப் பதிப்புத்துறை புதுமலர்ச்சியுடன் ஒரு தொழிலாகவே வளரும். மாதம் ஒரு நாவல், மாதம் ஒரு அறிவியல் நூல் என்ற திட்டங்கள் ஈழத்தில் மீண்டும் மலரும். தரமான பதிப்புகளை ஈழத்தவரால் தமிழுலகுக்குத் தரமுடியும் என்ற நிலை ஏற்படும்.
ஈழத் தமிழரின் புலமைத் திறமையும், அறிவு வளமும் தமிழ் உலகெங்கும் பயன்பட வேண்டுமெனிலோ அறியப்பட வேண்டுமெனிலோ தமிழக நூலகங்களிலும் புத்தகச் சந்தையிலும் ஈழத்தில் வெளி வரும் தமிழ் நூல்கள் இடம் பெற வேண்டும். இதற்கான முதற்படியாக இலங்கை-இந்தியத் தமிழ் நூல் கொள்வனவு உடன்பாடு அமையவேண்டும். ஈழத் தமிழ்ப் புலமைக் கொழுந்துகள் தமிழ் உலகெங்கும் அறியப்பட இது நேர்வழி.

0 Comments:

Post a Comment

<< Home