Tuesday, May 02, 2006

இடையீடற்ற வரலாறு ஈழத்தில் தமிழருக்கு உண்டு

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இசக்கியம்மன், இசக்கிமுத்து என்ற பெயர்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வழக்கில் உள. இயக்கியின் மரூஉ இசக்கி.
நாகராசா, நாகலிங்கம் என்ற பெயர்களுக்குத் தமிழரிடையே குறைவில்லை. நாகர்கோயில், நாகப்பட்டினம் யாவும் தமிழரூர்கள்.
இயக்கரும் நாகரும் முற்காலத்தில் தமிழகம், மற்றும் இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்தனர்.
இயக்கச்சி, இயக்கர்கல், இயக்கர்களப்பு, இயக்கரை, இயக்கரூர், இயக்கவாவி போன்ற ஊர்ப் பெயர்கள் பல, இலங்கை முழுவதும் இன்றும் வழக்கில் உள்ளன.
நாகதேவன்துறை, நாகபடுவான், நாகமடு, நாகமலை, நாகர்கோயில், நாகர்முனை, நாகன்தாழ்வு யாவும் இலங்கையின் ஊர்ப்பெயர்களுட் சில.
இயக்கர்கள் கூடி, முருகனுக்குரிய தைப்பூசத் திருவிழாவைக் கார்த்திகைக் கமத்தில் (கதிர்காமத்தில்) கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாளன்று, புத்தர் இலங்கைக்கு முதன் முதலில் வருகிறார். இயக்கரிடையே தமது கொள்கைகளைப் புத்தர் போதிக்கிறார். இயக்கருட் பலர் புத்தராகின்றனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில், நாக மன்னர்களின் ஆட்சிக் காலம். யாழ்ப்பாணக் குடாநாட்டில், மாமன் மகோதர மன்னனுக்கும் மருகன் குலோதர இளவரசனுக்கும் பகை வளர, இருவரும் போருக்குத் தயாராகின்றனர். அப்பொழுது இரண்டாவது முறையாக இலங்கைக்குப் புத்தர் வருகிறார். நாக அரச குடும்பத்திடையே போர் வராது காக்கிறார்; தன் கொள்கைகளைப் போதிக்கிறார். நாகர்களுட் பலர் புத்தராகின்றனர்.
அக்காலத்தில் தென்மேற்கே, கல்யாணியில் அரசமைத்து ஆட்சிசெய்த நாக அரசன் மணியக்கிகன்.
நாகர், இயக்கர் பற்றிய இச் செய்திகள் மகாவமிசத்தில் உள. யாழ்ப்பாணத்துக்குப் புத்தர் வந்த செய்தி மணிமேகலையிலும் உண்டு.
நாகர்களும் இயக்கர்களும் தமிழர். இலங்கையில் புத்த சமயிகளாக மாறியோர் முதலில் இயக்கர், பின்னர் நாகர். மகாவமிசம் கூறும் விசயனும் தோழர்களும் இலங்கைக்கு வரும்பொழுது அங்கே தமிழர் பரந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். சிவ, முருக வழிபாட்டினராயிருந்தனர். அரசு அமைத்து வாழ்ந்தனர். நாகரிகமடைந்த மக்களாயிருந்தனர்.
இலங்கையின் ஆதிகுடிகள் தமிழரே. எல்லாளன் போன்ற பல தமிழ் அரசர்கள் இலங்கை முழுவதையும் ஆட்சிசெய்த வரலாறுகள் உண்டு.
இலங்கையின் வன்னிப் பகுதியில், அடங்காப் பற்றில் ஆட்சிசெய்த தமிழ் அரசன் பண்டார வன்னியன், ஆங்கிலேயரிடம் 1811ஆம் ஆண்டு போரில் தோற்கும் வரை, தொடர்ச்சியாகத் தமிழ் அரசரின் ஆட்சி இலங்கையில் நடைபெற்று வந்தது.
அந்த நீண்ட வரலாற்றை அறிந்து கொள்ள விழைவோர் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையின் யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற இந்த நூலையும் கட்டாயம் படிக்க வேண்டும்.
இந்த நூலை எழுதிய காலத்தில் போதிய வரலாற்றுச் சான்றுகளோ அதை ஒட்டிய ஆய்வுகளோ இருக்கவில்லை; தொல்பொருள் சான்றுகளைப் பெறமுடியவில்லை. செவிவழிச் செய்திகள், பரம்பரைக் கதைகள், கைலாய மாலை போன்ற சில இலக்கியச் சான்றுகள் இந்த நூலாக்கத்துக்குத் துணைபுரிந்துள.
ஆதலாற்றான், கால ஒழுங்குகளை நூலாசிரியரால் துல்லியமாகக் கடைப்பிடிக்க முடியவில்லை. மகாவமிசத்துக்குத் தமிழ்மொழிபெயர்ப்பு இந்நூலாசிரியர் காலத்தில் இருந்திருப்பின் அதனுடன் ஒப்புநோக்கி அவர் பார்த்திருப்பர். சங்க இலக்கியங்களையும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளையும், பின்வந்த இலக்கியங்களையும் நூலாசிரியர் தெரிந்து வைத்திருக்கிறார்.
அதனால்போலும் பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியதாக இன்று கூறப்படும் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கூறியுள்ளார்.
வரலாற்றை எப்பொழுதும் எவரும் முழுமையாக எழுத முயலமுடியாது. காலத்துக்குக் காலம் கிடைக்கும் புதிய சான்றுகள், முன்னர் எழுதியவற்றை முழுமையாக மாற்றிவிடக்கூடியன. அதற்காக, வரலாற்றை எழுத முயலாமல் இருக்கவும் முடியாது. அந்தக் கண்ணோட்டமே, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையின் அரிய முயற்சி. தனக்குத் தெரிந்தவற்றைத் தான் செவியுற்றதை, தான் கண்டதை ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை நமக்காக விட்டுச் சென்றுள்ளார்.
இக்காலத்தில், போரசிரியர்கள் இந்திரபாலா, பத்மநாதன், சிற்றம்பலம் ஆகியோர் ஈழத் தமிழர் வரலாறு பற்றி எழுதிய நூல்கள், இக்காலம் வரை கிடைத்த சான்றுகளின் அடிப்படையிலானவை. அவர்களின் நூல்களில் கற்பனைச் செய்திகள் சான்றாகமாட்டா. ஆனால் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையோ கற்பனைச் செய்திகளைச் சான்றாக அள்ளித் தெளித்துள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை கூறிய பல செய்திகள் கற்பனைகளல்ல, நிகழ்ந்தவைகளே என வருங்கால ஆய்வாளர் நிறுவக் கூடும்.
ஆதிகுடிகளான இயக்கர், நாகர் முதலாக, கடந்த நூற்றாண்டின் பொன்னம்பலம் இராமநாதன் ஈறாக, ஈழத் தமிழருக்கு இடையீடற்ற தொடர்ச்சியான வரலாறு இருந்ததை ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை வலியுறுத்துகிறார். 1619இல் நல்லூரில் போர்த்துக்கேயரிடமும், 1811இல் வன்னியில் ஆங்கிலேயரிடமும் போரில் தமிழீழ அரசாட்சியை இழந்த நிகழ்ச்சிகளை விரிவாக விவரிப்பதன் மூலம், மீண்டும் தமிழீழ அரசை அமைக்குமாறு ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை தன் சந்ததியினருக்கு ஆணையிட்டுள்ள முயற்சியாகவே இந்த நூலைக் கருதலாம்.
அனைவரும் படிக்கவேண்டிய நூல்.
அறிவுக் களஞ்சியங்களாக, வரலாற்றுப் பெட்டகங்களாக, தமிழ்ப் பொழில்களாக விளங்கும் அரிய நூல்கள் பலவற்றைச் சிறப்பாக, தரமாகப் பதிப்பித்து வேகமாக விற்பனையாக்குவதில் பெரு வெற்றி கண்டுவரும் உரத்தநாடு இளவழகனார், தம் தமிழ்மண் பதிப்பகத்தின் மூலம் இந்த நூலைப் பதிப்பித்து ஈழத்தமிழருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
சென்னை, மார்கழி 2036.

0 Comments:

Post a Comment

<< Home