Tuesday, May 02, 2006

திருமுறைகளை அச்சிட்டுப் பதிப்பித்தல்

சிவத்திருத்தொண்டர், கயிலைமணி
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

திருமுறைகளை அச்சிட்டுப் பதிப்பித்தால் மக்களை அவை சென்றடையும். சைவ சமயத்தவர், சைவரல்லாதவர் யாவரும் மக்களே. யாவருக்கும் திருமுறைகள் கிடைக்கவேண்டும்.
திருமுறைகளை வழிபடுவோருக்கு மட்டுமே, அவை சென்றடைய வேண்டும் என்ற கருத்தைப் பழமைவாதிகள் முன்வைப்பர். முற்காலத்தில் அவை பொருத்தமாக இருந்திருக்கும். இக்காலத்துக்கு அக்கருத்து ஒவ்வாது.
திருமுறைகள் மனித சமுதாயத்தின் சொத்து. அவற்றை எவரும் படிக்கலாம், புரிந்துகொள்ளலாம், பின்பற்றலாம், பேறெய்தலாம்.
இந்தப் புதிய சூழ்நிலையில், திருமுறைகளை அச்சிட்டுப் பதிப்பிப்பவருக்குப் பாரிய பொறுப்பு உண்டு. எந்த எழுத்துக் கூட்டலில், எந்தப் பாவடிவில், எந்த ஒழுங்கில் அவற்றை ஆக்கியோர் நமக்கு விட்டுச் சென்றார்களோ அந்த எழுத்துக் கூட்டலில், பாவடிவில், ஒழுங்கில் அச்சிட்டுப் பதிப்பிக்கவேண்டிய பாரிய பொறுப்பு உண்டு.
இதில் கருத்து முரணுக்குகோ, விவாதத்துக்கோ இடமேயில்லை. எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற பழமொழியுடன் அச்சு வேலையா? நச்சு வேலையா என்ற புதுமொழியையும் இணைத்துப் பார்க்க.
திருமுறைகள் தமிழ் மொழியில் தோன்றின. தமிழோ என்றும் இளமை மாறாதுள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு மேலாக, தொல்காப்பியர் கூறிய அதே 30 எழுத்துகளுடன் இன்றும் தொடர்கின்ற செழுமை உடையது.
பன்னிரு திருமுறைகளும் இந்த 30 எழுத்துகளால் ஆனவைய திருமுறைகள் தோன்றிய காலத்துச் சொற்களுள் 95% இன்றும் அதே பொருளுடன் புழக்கத்திலுள்ளன.
எழுத்து, சொல், பொருள் யாவும் மாறாதிருக்கும் பொழுது, அச்சிடுவோருக்கும் பதிப்பிப்போருக்கும் அவற்றில் மாற்றங்கள் கொண்டுவர உரித்தில்லை.
ஆக்கியோருக்கும் படிப்போருக்கும் இடையே புகுந்து, பேதங்களை, திரிபுகளை, மாற்றங்களைக் கொண்டுவரக் கொஞ்சமேனும் எவருக்கும் உரித்தில்லை. அவ்வாறு மாற்றுவோர் தமிழுக்கு மாறானவராவர்.
சைவ சமயத்துக்குத் திருமுறைகள் அரிய செல்வக் களஞ்சியங்களாக உள்ளன. அதைவிட மேலாகத் தமிழ் மொழிக்கு அவை, சொற் பேழைகளாக, கருத்து வளமூட்டுவனவாக, வரலாற்றுப் பதிவுகளாக, பண்பாட்டுப் பின்புலங்களாக உள.
திருஞானசம்பந்தர் முதலாக, சேக்கிழார் ஈறாக அவற்றை ஆக்கியோர், தமிழுக்கும் சைவத்துக்கும் தந்தோர், அடியாருக்காக அருளியோர் எந்த நிலையில் தந்தனரோ அவையே பன்னிரு திருமுறைகள். சுந்தரர் வழிகாட்ட, நம்பியாண்டார் நம்பி தொகுக்க, சேக்கிழார் நிறைவு செய்து, ஏறத்தாழ 600 ஆண்டு கால அரும் பெரும் மனித முயற்சியே பன்னிரு திருமுறைகள்.
எந்த நிலையில், முறையில், ஒழுங்கில் இந்தத் தலைமுறையில் அவற்றைப் பெற்றோமோ, அவற்றை அப்படியே அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் செய்யவேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டு.
ஏடும் எழுத்தாணியும் அகல, மர அச்சு, ஈய அச்சு, தட்டச்சு, கணினி, எணினி எனத் தொழினுட்பம் வளர்வதால் அவ்வத் தொழினுட்பத்துக்கேற்ப அவற்றை உள்ளவாறே உள்ளிடுதலே பொருந்தும்.
கடந்த பல நூற்றாண்டுகளுக்கூடாக, எறத்தாழ 27 மொழிகளின் தாக்கத்தைத் தாங்கிய தமிழ், இன்றும் இளமை குன்றாதிருக்கின்றது, தனித்தன்மை மாறாதிருக்கின்றது. பன்னிருதிருமுறைளை யாத்தோர் காலத்திற்குப் பின் வடமொழி, அரபு, பாரசீகம், உருது, மராட்டியம், தெலுங்கு, கன்னடம், போர்த்துக்கீசம், ஒல்லாந்தம், பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழியாளரின் ஆதிக்கங்கள் வந்து போயின. பன்னிரு திருமுறைகள் அப்படியே இருக்கின்றன.
அவற்றை மந்திரங்கள் என்றும், வழிபாட்டுக்குரியன என்றும் நம்முன்னோர் போற்றிப் பாதுகாத்தமையின் காரணம், இந்தத் தாக்கங்களால் கேவலர் அவற்றைச் சிதைத்துவிடக் கூடாதென்பதற்காகவே.
ஆங்கிலேய மேலாதிக்கம் ஒழிந்த பின்பும் அடிமை மோகமும் ஆங்கில மாயையும் மயக்கமும் கொண்ட கேவலர் பலர் இருப்பதால், பன்னிரு திருமுறைகள் சிதைந்து வெளிவருகின்றன.
கம்பராமயைணம் போன்றன வெள்ளிப் பாடல்கள் நிரவி நிற்க, பன்னிரு திருமுறைகள் பாடபேதங்கள் பலவின்றியே பதிப்பாகி வருவது தமிழரும் சைவரும் பெற்ற பேறு.
இக்காலத்தில் பன்னிரு திருமுறைகளைப் பதிப்பிப்போர், அவை மக்களைச் சென்றடைய வேண்டுமென்ற காரணத்தை உளத்திருத்தி, பதம் பிரித்தும், நிறுத்தக் குறிகளை இடையிட்டும், பாவடிவைச் சிதைத்தும், அச்சளவுகளுக்கு ஏற்றவாறு ஒழுங்கமைத்தும், முதல் ஏழு திருமுறைகளையும் நம்பியாண்டார் நம்பியின் ஒழுங்கமைவுக்குப் புறம்பாகவும் பிற சிதைவுகளுடனும் வெளியிடுகின்றனர்.
அத்கையோரின் நோக்கங்கள் உயர்ந்தன. திருமுறைகள் பரவவேண்டும், மக்களின் வாழ்வுடன் கலந்து, வாழ்க்கை நிலை உயர்ந்து பிறவிப் பேறெய்த வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கு அவர்களுட் சிலருக்கு உண்டு. நம்முன்னோர் விட்டுச் சென்றதை நாமனைவரும் பகிர்ந்து பயனடைவோம் என இயந்திரகதியில் பதிப்பிப்போரே பலர். திருமுறைகளைப் பதிப்பித்து வெளியிட்டுப் பொருளீட்டமுயல்வோர் சிலர்.
பன்னிரு திருமுறைப் பாடல்களில் சிலவற்றைத் தேர்ந்து பெயர்த்து எடுத்து, திரட்டுகளாக, தொகுப்புகளாக, மாலைகளாக வெளியிடுவோரே எண்ணிக்கையில் அதிகமானோர். தமக்கு விருப்பமான, உகந்த, தெரிந்து பயின்று பழகிய பாடல்களை இவர்கள் அச்சிட்டுப் பதிப்பிக்கின்றனர்.
தமிழ் வரிவடிவங்களைக் கற்கமுடியாத, ஆனால் தமிழ்ப பனுவல்களையே வழிபாட்டுக்குரியதாதக்க விழையும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழரும், தமிழரல்லாதோரும், இத்தகையோருக்காகத் தமிழ் வழங்கும் நாடுகளில் உள்ளோரும் திருமுறைப் பாடல்களின் ஒலிபெயர்ப்புகளை அச்சிட்டு வெளியிட்டு வருகின்றனர். கன்னடம், தெலுங்கு, மலையாளம், சிங்களம், இந்தி, வடமொழி, ஆங்கில மொழிகளில் ஒலிபெயர்ப்புகள் வெளிவந்தவாறு இருக்கின்றன.
இவர்களைவரின் நோக்கங்களில் குறைகாண முடியாதெனினும், இவர்களின் பதிப்புகள் மூலங்களைச் சிதைத்து வருகின்றன. கால்ப்போக்கில் எது மூலம்? எது திரிபு? எனக் காணவியலாதவாறு மயக்கமேற்படுவது தவிர்க்கமுடியாது.
மூலங்களைச் சிதைக்காமலே, திருமுறைகளைப் பரப்பலாம், மக்களிடம் கொண்டு செல்லலாம் என்பதற்குப் பல எடுத்துக் காட்டுகள் உள. இரண்டை மட்டும் இங்கு தருகிறேன்.
திருப்பராய்த்துறை தபோவனம் சுவாமி சித்பவானந்தர் அச்சிட்டுப் பதிப்பித்த திருவாசகம் மூலமும் உரையும் நூலைப் பார்க்க. முதலில் மூலப் பாடல் உள்ளது உள்ளவாறே அச்சாகியுளது, பின்னர் அதே பாட்டைச் சுவாமி சிவானந்தர் புரிந்து கொண்டவாறு பதம் பிரித்து அச்சாகியுளது. அதையடுத்து அதற்கு அவர் எழுதிய உரை உள்ளது.
உள்ளம் கவர் கள்வன் எனத் தொடங்கி, கி. வா. ஜகந்நாதன் தொடராகப் பல நூல்களை எழுதினார். திருமுறைகளை மக்களுக்கு எடுத்துச் செல்வதே அவரின் நோக்கம். முதலில் உரைநடையில் விளகம் சொல்லி, இறுதியில் பாடல் இது எனக் காட்டுகையில் மூலம் சிதையாப் பாடல்கள் சிலவற்றைத் தந்து சென்றுள்ளார்.
நிறுத்தக் குறிகளை மூலத்துள் நுழைப்பது முறையல்ல. பதம்பிரிக்கையில் அடைப்புக் குறிக்குள் சந்திகளை நுழைப்பதும் முறையல்ல. சீர் ஒழுங்கைக் குலைத்து அச்சிடுவது, பாவடிவை மாற்றும்.
நம்பியாண்டார் நம்பி பண்முறையிலேயே தொகுத்தார். வேறு ஒழுங்கை அமைப்பவர் அப்பதிப்பைத் திருமுறைப் பதிப்பு என அழைப்பதும் முறையல்ல. திரு-முறை என முறை வகுத்த ஒன்றுக்கு வேறு முறை வகுக்கையில் வேறு தலைப்பிடுவதே பொருத்தம்.
திருமுறைகளை மேற்கோள் காட்டுகையில் மூலம் கெடாது, உரிய சுட்டலுடன் காட்டவேண்டிய பொறுப்புண்டு.
பன்னிரு திருமுறைகள் நம் கைகளில் தவழ்வதும், நம் நா ஒலிப்பதும், நாம் அச்சிட்டுப் பதிப்பிக்க வாய்ப்பாக இருப்பதும் நம் தவம். அவற்றைச் சிதைத்துப் படிப்பதோ, அச்சிட்டுப் பதிப்பிப்தோ நமக்கு அவம்.

2 Comments:

Blogger nayanan said...

அன்புடையீர்,

தங்கள் கட்டுரை படித்தேன். மனமார்ந்த பாராட்டுக்கள். தங்கள் கருத்துடன் எனக்கு முழு ஒப்புமை.

இந்தச் செல்வக் களஞ்சியங்களை யாரும்
எவ்விதமும் அரைகுறைச் சிந்தனையுடன்
குலைத்து விடக் கூடாது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

5:49 AM  
Blogger முனைவர் ஆ.மணி said...

திருமுறைகள் பாட, பதிப்பு வேறுபாடுகளுடன் செவ்விய உரைகளுடன் வெளிவருவது பெரிதும் பயன் நல்கும்.

1:52 AM  

Post a Comment

<< Home