Thursday, August 03, 2006

தமிழக அரசு நாட்டுடைமையாக்கிய

நூலாசிரியர் பெயர் வழங்கப்பட்டதொகை ரூ. ஆண்டு
1. சுப்பிரமணிய பாரதியார் எதுவும் இல்லை
2. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் 1 இலட்சம் 1984
3. பாவேந்தர் பாரதிதாசன் 10 இலட்சம் 1990
4. பேரறிஞர் அண்ணா 75 இலட்சம் 1995
5. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் 10 இலட்சம் 1995
6. தேவநேயப் பாவாணர் 20 இலட்சம் 1996
7. மறைமலையடிகள் 30 இலட்சம் 1997
8. திரு.வி.க. 20 இலட்சம் 1998
9. கல்கி 20 இலட்சம் 1998
10. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 5 இலட்சம் 1998
11. ப.ஜீவானந்தம் 5 இலட்சம் 1998
12. நாமக்கல்கவிஞர்.
வெ.இராமலிங்கம்பிள்ளை 5 இலட்சம் 1998
13. வ.உ.சிதம்பரனார் 5 இலட்சம் 1998
14. ஏ.எஸ்.கே.அய்யங்கார் எதுவும் இல்லை 1998
15. வ.ரா.(வ.ராமசாமி அய்யங்கார்) எதுவும் இல்லை 1998
16. நாவலர் சோமசுந்தர பாரதியார் 5 இலட்சம் 1998
17. கவிஞர் கா.மு.ஷெரீப் 5 இலட்சம் 1998
18. பரலி.சு.நெல்லையப்பர் 5 இலட்சம் 1998
19. வ.வே.சு. ஐயர் 5 இலட்சம் 1998
20. காரைக்குடி சா.கணேசன் 5 இலட்சம் 1998
21. திரு.ச.து.சு.யோகி 5 இலட்சம் 1998
22. வெ.சாமிநாத சர்மா 5 இலட்சம் 2000
23. கவிஞர்.முடியரசன் 10 இலட்சம் 2000
24. மயிலை சீனி வேங்கடசாமி 10 இலட்சம் 2000
25. சாமி சிதம்பரனார் 10 இலட்சம் 2000
26. பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் 10 இலட்சம் 2001
27. புதுமைப்பித்தன் 5 இலட்சம் 2002
28. கு.ப.சேது அம்மாள் 5 இலட்சம் 2002
29. நாவலர் பண்டித
ந.மு.வேங்கடசாமி நாட்டார் 5 இலட்சம் 2004
30. க.நா.சுப்பிரமணியம் 5 இலட்சம் 2004
31. ந.பிச்சமூர்த்தி 5 இலட்சம் 2004
32. தெ.பொ.மீனாட்சி சுந்தரம் 5 இலட்சம் 2005
33. த.நா.குமாரசாமி 5 இலட்சம் 2005
34. மாயூரம் வேதநாயகம் பிள்ளை 5 இலட்சம் 2005
35. சக்தி வை.கோவிந்தன் 5 இலட்சம் 2005
36. புலவர் குழந்தை 10 இலட்சம் 2006

எழுத்துத் திருட்டு - நிகழ்வுகள், நடவடிக்கைகள்

என் நண்பரின் தந்தையாருக்குப் பவள விழா. நினைவாகப் பத்திப் பாடல்களின் திரட்டு ஒன்றை வெளியிட விழைந்தார். என் உதவியை நாடினார். துளாவித் தேடித் தொகுத்து வெளியிட்டோம். நல்ல வரவேற்பு.
தொடர்ந்து நான்கைந்து பதிப்புகள் வெளிவந்தன. இருப்புத் தீர்ந்த நிலையில் திருமகள் நிலையத்தினர் 250 படிகள் ஏற்றுமதிக்காகக் கேட்டனர். நீங்களே அச்சிட்டு வெளியிடுங்கள் என எதிரங்களை அனுப்பினேன். நல்ல பதிப்பாக வெளியிட்டனர். அவர்களாகவே எனக்கு 200 படிகளை அனுப்பினர்.
அடுத்தும் ஒரு பதிப்பு, அதே 200 படிகள். சில மாதங்களுக்கு முன் மீண்டும் ஒரு பதிப்பு வெளியிட என்னிடம் கேட்டனர். எனக்கு எதுவும் தரவேண்டாம் என்னிடம் கேட்கவும் வேண்டாம். தொடர்ந்து வெளியிடுங்கள் எனக் கூறிவிட்டேன்.
நூலின் உள்ளடக்கதின் பாடல்கள் யாவும் யாரோ எப்பவோ எழுதியன. தொகுத்ததை மட்டுமே என் நண்பர் ஈஸ்வரனும் நானும் செய்திருந்தோம். இதில் எமக்கு உரிமம் ஏது?
என் தந்தையார் யாழ்ப்பாணத்தில் அறுபதுகளில் வெளியிட்ட இத்தகைய பிறிதொரு தொகுப்புப் பதிப்புகள் பல கண்டது. மணிமேகலைப் பிரசுரத்தார் தேவாரத் தொகுப்பு ஒன்றை வெளியிட விரும்பி என்னை அணுகினர். அந்தப் பதிப்பை அப்படியே மீளப் பக்கமாக்கி, அட்டையும் தயாரித்து மணிமேகலைப் பிரசுரத்தாரிடம் கொடுத்தேன். அப்பதிப்பில் 200 படிகளைத் தந்த மணிமேகலைப் பிரசுரத்தாரிடம் இனிமேல் எனக்கு எதுவும் தரவேண்டாம் எனக் கூறிவிட்டேன்.
அட்லஸ் என்ற ஆங்கில ஓலியாக்க வழக்கிற்கு மாற்றாக நிலவரை என்ற தமிழ்ச் சொல்லை அறிமுகம் செய்து அத்தலைப்பில் சில நூல்களை வெளியிட்டு வந்தேன்.
ஓரியன்ற் லோங்மன்ஸ் கம்பனியார் தமிழில் அட்ல்ஸ் என்ற பெயரில் நூல்களை வெளியிட்டு வந்தனர். அங்கிருந்து ஒரு மூத்த அதிகாரி என்னிடம் வந்தார். தாம் வெளியிடவுள்ள புதிய தமிழ் அட்லஸுக்கு நிலவரை என்ற பெயரைப் பயன் படுத்த அநுமதி கேட்டார். தமிழ் புத்தகங்கலுக்குத் தமிழ்த் தலைப்புப் பெயரை வெளியிடுதல் பொருத்தம். நன்றாகப் பயன் படுத்துங்கள் என்றேன். நிலவரை என்ற பெயருடன் வெளிவந்த அவர்களது வெளியீட்டைச் சில வாரங்களின் பின்னர் என்க்கு மாதிரியாகத் கொணர்ந்து தந்தார்.
தேசப் படப் புத்தகம் என்ற பெயரில் யாழ்ப்பாணம் ஷ்ரீலங்கா புத்தகசாலையார் கடந்த 30 ஆண்டுகளாக க. குணராசா தயாரித்த நூலை வெளியிட்டு வந்தனர். 1995 முதலாக இலங்கை நிலவரை என்ற எம் பதிப்பு விற்பனைக்கு வந்ததும், லேக் அவுஸ், அர்ச்சனா, குணராசா ஆகியோரின் தேசப் படப் புத்தகங்களின் விற்பனையைப் பின்னுக்குத் தள்ளியதால், குணராசா தன் புத்தகத்துக்குப் புதிய நிலவரை எனப் பெயரிட்டே சந்தையில் நிலைகொள்ள முயல்கிறார்.
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 1-10 அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஒரு தொகுதி. கண்ணதாசன் பதிப்பகத்தாரின் ஒப்புதலின்றி வெளிநாட்டில் ஒருவர் வெளியிடக் காந்தி கண்ணதாசன் சட்ட பூர்வமாகத் தலையிட வேண்டி வந்தது.
நீண்ட காலமாக அச்சில் வராத நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இயற்றிய நூலைச் சென்னையில் ஒரு பதிப்பகத்தார் வெளியிட, சோமசுந்தரப் புலவரின் பெயரனார் அப்பதிப்பகத்தாருக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.
பேரா. அ. ச. ஞானசம்பந்தனின் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்ற நூலைப் பாரதிதாசன் எழுதியதாக வெளியிட்டமை தொடர்பாக, அ. ச, ஞா. குடும்பத்தினர் வழக்குத் தொடுத்துளர்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகள் சிலவற்றை கழகத்தைக் கேட்கமலே அப்படியே வெளிநாட்டில் ஒருவர் மறுபதிப்பித்து விற்பனை செய்கிறார்.
ஒரு பதிப்பகத்தார் ஒரு தலைப்பில் வெளியிடும் நூலின் சுருக்கத்தை அதே தலைப்பில் மலிவு விலையில் வெளியிட்டு நேரடியாக விற்பனையில் போட்டியிடுவதும் தமிழகம் காணாததல்ல.
ஒரு பக்கம் செய்யுள், எதிர்ப்பக்கத்தில் அச்செய்யுளுக்குப் பொருள். திருக்குறள் மு. வ. உரைப் பதிப்பில் இந்த உத்தியைக் காட்டியவர் கழகம், தாமரைச் செல்வர் சுப்பையா. இதே உத்தியைக் கையாண்டு நூல்களை வெளியிடுவதைப் பதிப்பகங்கள் பல தமதாக்கின. வர்த்தமானன் பதிப்பகத்தாரின் வெற்றிப் பதிப்புகளுக்கு இந்த உத்தியே கை கொடுத்தது.
ஆங்கிலத்தில் வெளியாகும் மருத்துவ பொறியியல் நூல்களின் இந்தியப் பதிப்புகளின் விலைகள், அவற்றை நகலெடுத்துக் கட்டிப் புத்தகமாக்கும் செலவைப் போலப் பன்மடங்கு. மாணவர் ஒருவர் ஒரு படியை வாங்கி, நகல்களாகப் பல மாணவர் பயன்படுத்துவதால் பதிப்பாளரும் விற்பனையாளரும் பாதிப்படைவதைத் தெபுவிபச கூட்டங்களில் பேசித் தடுக்கும் நடவடிக்கையை நோக்கிக் குழுக்களும் அமைந்தன.
காவியா விசுவநாதனின் நாவலும் தான் பிறவுணின் டாவின்சி கோடும் இந்தியாவெங்கும் நடைபாதைக் கடைகளில் அமோக விற்பனையாகின்றன. அவை பதிப்பாளர் வெளியிட்ட மூலப் பதிப்புகள் அல்ல. பதிப்புத் திருட்டு நகல்கள். அவை மட்டுமல்ல, ஆரி பொட்டர் நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் என விற்கக் கூடிய ஆங்கிலத் தலைப்புகளை அப்படியே இந்தியாவில் அச்சிட்டு நடைபாதைக் கடைகளிலும் சிறு புத்தகக் கடைகளிலும் விற்பனை செய்கின்றனர்.
கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் என் இல்லம் வந்திருந்தபோது நான் தயாரித்த திருநெல்வேலி மாவட்ட நிலவரைப் படங்களைப் பார்த்தார். கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் அத்தகைய படத்தைத் தயாரிக்க வேண்டினார். அவருடன் கன்னியாகுமரி பயணித்தேன். நண்பர்களை அறிமுகம் செய்தார்.
இந்திய நிலஅலவையாளர் துறைக்கு எழுதி அநுமதி பெற்றேன். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் பேசி, வட்டாட்சியர் மற்றும் பல்துறை அலுவலர்களின் உதவியை நாடினேன். களப்பணி செய்தேன். பொறிஞர், முனைவர் ப. கோமதிநாயகம் எனக்கு உதவினார். நாகர்கோயில் காந்தளகம் ஆ. குமரேசன் அயராது உழைத்தார். நானும் கடுமையாக உழைத்தேன். 800 ஊர்ப் பெயர்கள், அதற்கான சுட்டி யாவும் கொண்ட சுவர்ப் படம் ஒன்றைக் கணிப் பொறியில் தயாரித்தேன்.
நாகர் கோயில் யுனைடெட் பதிப்பகத்தார் 1,000 படிகள் அச்சிட்டுத் தருமாறு கேட்டனர். முதற் பதிப்பின் விற்பனை உரிமையை அவர்களுக்குக் கொடுத்தேன். விற்கும் விலை ரூ. 70/-
இரண்டாம் பதிப்பின் 10,000 படிகளுக்கான விற்பனை உரிமையை வேறொரு விற்பனையாளருக்குக் கொடுத்தேன். இரண்டு பதிப்புகளும் விற்றுத் தீர்ந்தன. 2ஆம் பதிப்பின் விற்கும் விலை ரூ. 10/-
கன்னியாகுமரி மீனவர் சங்கத்திலிருந்து ஒருவர் காந்தளகம் வந்தார். தேர்தல் தொகுதி வரைவுக்கு இப்படம் மிக உதவியதாகவும் மாவட்டத்தில் 44 மீனவ ஊர்கள் இருப்பதைப் படம் மூலம் அறிந்ததாகவும் கூறினார்.
வள்ளுவன் பொட்டை என்ற மலை இருப்பதையும் திருவள்ளுவர் ஆண்ட பகுதி அஃதென்பதையும் இப்படத்தை வைத்தே கண்டறிந்த, கன்னியாகுமரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினர், சிறப்பாக முனைவர் பத்மநாதன், நேரில் அப்பகுதிக்குச் சென்று, கள ஆய்வு செய்தனர். பல ஏடுகளில் கட்டுரையாக எழுதினர். எமக்கும் நன்றி தெரிவித்தனர்.
இவ்வாறாக அந்தப் படம் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்குப் பயன்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்குமுன் நாகர்கோயில் காந்தளகத்தார் அதிர்ச்சி தரும் செய்தியைக் கூறினார். யுனைடெட் பதிப்பகத்தார் அதே படத்தை, ஒரே ஒரு திருத்தத்துடன், அச்சிட்டு ரூ. 100/- விலையிட்டு விற்று வருவதாகக் கூறினார். எந்த ஒரு இடத்திலும் அப்படத் தயாரிப்புக்கான எம் பங்களிப்பை அவ்வெளியீட்டில் யுனைடெட் பதிப்பகத்தார் குறிப்பிடவில்லை.
யுனைடெட் பதிப்பகத்தாரிடம் தொடர்பு கொண்டு அவ்வாறு செய்வது தவறு என எச்சரித்தேன். அப்படித் தாம்செய்யவில்லை என்றும் செய்யப் போவதில்லை என்றும் கூறினர்.
விற்பனைக்கான சான்றைப் பெற்றேன். சட்ட நடவடிக்கையில் இறங்கினேன். காவல்துறைக்கு எழுதினேன். குற்றவியல் சட்டத்துக்குள் பதிப்புரிமை மீறல் வராதெனக் காவல்துறையினர் கூறினராயினும், ஏமாற்று, நம்பிக்கைத் துரோகம், எழுத்துத் திருட்டுக் குற்றங்களுங்காக யுனைடெட் பதிப்பகத்தாரை அழைத்து விசாரித்து, அச்சிட்ட படிகள், அச்சுமுன் தயாரிப்புகள் யாவற்றையும் கைப்பற்றினர். அதுவரை விற்ற படிகளுக்கான தொகையை எனக்குச் செலுத்துமாறு கேட்டனர்.
யுனைடெட் பதிப்பகத்தார் என்னிடம் எழுத்து மூலம் மன்னிப்புக் கோரினர். இழப்பீடு தரவதாக உறுதி கூறினர். சினமுற்றிருந்த குமரேசனும் தணிந்தார். காவல் துறையினரைப் பாராட்டவேண்டும்.
மூன்று முறை கன்னியாகுமரி மாவட்டம் சென்றேன். தன் மாவட்டம் வளர வேண்டுமென்பதில் குமரேசனுக்கு உள்ள ஆர்வத்தால் மாவட்டம் முழுவதும் பயணித்துத் தகவல் திரட்டினார்.
இந்த உழைப்பையும் நேரத்தையும் கவனத்தில் கொள்ளாது என் எச்சரிக்கையையும் மீறி யுனைடெட் பதிப்பகத்தார் நடந்து கொண்டமை அவர்களின் வணிக நற்பெயருக்கே களங்கமாயது.
என்னுடனும் குமரேசனுடனும் பேசி, ஓர் உடன்பாட்டை எட்டி, பதிப்பிருந்தால் நானும் குமரேசனும் பரிவுடன் நடந்திருப்போம். வருவாயையவிட வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டோமாயினும் அப்பட்டமாகத் தெரிந்து கொண்டே நடந்த எழுத்துத் திருட்டுக்கு உடந்தையாகோம்.
திரைத் திருட்டுக்குக் குண்டர் சட்டம் பாய்கிறது. எழுத்துத் திருட்டுக்குக் குடியியல் சட்டங்களே துணை. பேரா. அ. ச. ஞா. குடும்பத்தினர் தொடுத்த வழக்கு நெடுங்காலமாக நிலுவையில் உள்ளது.
புலமைச் சொத்துரிமைச் சட்டங்கள் ஏடடுச் சுரைக்காய் என எழுத்துத் திருட்டிலும் பதிப்புத் திருட்டிலும் ஈடுபடுவோர் நன்றாகத் தெளிந்துளர். வலுவில்லாத சட்டங்களை நடைமுறைப்படுத்த நீதிமன்றத்துக்குப் போய் சட்ட வாதங்களின் ஓட்டைகளுள் வழுக்குவதை விட, எழுத்து மற்றும் பதிப்புத் திருட்டுகளைக் கண்டும் காணாதது போல விட்டுவிடுவது மேல் எனப் புலமையாளரும் பதிப்பாளரும் கருதுவது வியப்பல்ல.