Tuesday, May 02, 2006

உலகப் புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்புலகம்

உலகப் புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்புலகம் ஏன் பங்குபற்ற வேண்டும்?
மறவன்புலவு க. சச்சிதானந்தன்


ஐரோப்பாவில் தமிழர் தொகை
(தோராயக் கணிப்பு)
நாடு மக்கள் தொகை தமிழர்
1 அண்டொரா 90,000 25
2 அயர்லாந்து 3,841,000 1,000
3 அல்பேனியா 3,145,000 100
4 ஆஸ்திரியா 8,075,000 500
5 இத்தாலி 57,503,000 5,000
6 உக்ரெயின் 49,112,000 1,000
7 எஸ்ரோனியா 1,377,000 500
8 ஐஸ்லாந்து 281,000 25
9 கிரேக்கம் 10,623,000 5,000
10 குரோசியா 4,655,000 100
11 சானல் தீவுகள் (பிரி.) 145,000 250
12 சான் மறினோ 27,000 25
13 சுலோவாக்கியா 5,403,000 100
14 சுலோவேனியா 1,985,000 100
15 சுவிற்சர்லாந்து 7,170,000 60,000
16 சுவீடன் 8,833,000 10,000
17 செக் 10,260,000 100
18 டென்மார்க் 5,333,000 15,000
19 நெதர்லாந்து 15,930,000 12,000
20 நோர்வே 4,488,000 10,000
21 பரோ தீவுகள் (டென்.) 47,000 .....
22 பல்கேரியா 7,867,000 200
23 பின்லாந்து 5,178,000 3,000
24 பிரான்ஸ் 59,453,000 200,000
25 பிரிட்டன் 59,542,000 250,000
26 பெலாருஸ் 10,147,000 25
27 பெல்ஜியம் 10,264,000 9,000
28 பொஸ்னியா
-ஹெர்சகோவினா 4,067,000 100
29 போர்த்துக்கல் 10,033,000 500
30 போலந்து 38,577,000 500
31 மசிடோனியா 2,044,000 100
32 மான் தீவு (பிரி.) 78,000 25
33 மால்ரா 392,000 500
34 மொனாகோ 34,000 25
35 மொல்டோவா 4,285,000 25
36 யூகோஸ்லாவியா 10,552,000 500
37 ரஷ்யா 114,664,000 10,000
38 ரோமானியா 22,388,000 200
39 லக்செம்போர்க் 442,000 1,000
40 லற்வியா 2,406,000 500
41 லிதுவானியா 3,689,000 200
42 லைச்ரென்ஸ்ரெயின் 33,000 100
43 வத்திக்கான் நகர் 1,000 25
44 ஸ்பெயின் 39,921,000 1,500
45 ஹங்கேரி 9,917,000 25
46 ஜிப்றால்ரர் (பிரி.) 27,000 100
47 ஜெர்மனி 82,007,000 30,000

மொத்தம் 696,331,000 628,975

முன்னிரவு, 9 மணி, வீட்டில் பணியில் இருக்கிறேன்.
வாயிற் கதவு மணி அடிக்கிறது. திறக்கிறேன். வியக்கிறேன். மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன்!
வாங்க, வாங்க, என்ன இந்த நேரத்தில், சொல்லாமல் கொள்ளாமல்? நான் கேட்டேன்.
குறையாக நினைக்கவேண்டாம். ஐரோப்பா போகிறேன், புத்தகக் காட்சி நடத்தப் போகிறேன். அதுதான் உங்களைப் பார்க்க வந்தேன். ரவியின் விடை இது.
நான் என்ன செய்யவேண்டும்?
உங்களுக்குத் தெரிந்தவர்களை அறிமுகம் செய்யவேண்டும்.
அவ்வளவுதானே? கட்டாயம் செய்கிறேன்.
யோசித்தேன். உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். விவரத்தை மறுமுனைக்குக் கூறினேன்.
அவரை அங்கேயே இருக்கச் சொல்லுங்கள் எனப் பாரிசில் இருந்து பதில் வந்தது.
ஐந்து மணித்துளிகளில் தொலைபேசி மணி அடித்தது; எடுத்தேன்.
ரவி தமிழ்வாணன் இருக்கிறாரா?
ரவியிடம் தொலைபேசியைக் கொடுத்தேன்.
ஏறத்தாழ அரை மணி நேரப் பேட்டி. ரவியின் பயணம் பற்றிய அத்தனை செய்திகளையும் ரவியிடம் கேட்டனர்.
அன்றிரவே ஐரோப்பா முழுவதும் ரவியின் பேட்டி ஒலிபரப்பாகியது. அடுத்தநாளும், மறுபடி பல முறையும், அப்பேட்டியை ஐரோப்பா முழுவதும் தமிழர் கேட்கக் கூடியதாக ஒலிபரப்பினர்.
தன் பயணத்துக்கு வானொலி மூலம் கட்டியம் கூறினார் ரவி.
நண்பர்கள் பலரின் முகவரிகளைக் கொடுத்தேன்.
தமிழ்ப் பதிப்பாளருக்குத் தலைமை நிலையில் இருப்பவர், கழகம் இரா. முத்துக்குமாரசாமி. மறுநாள் அவரிடம் பேசினேன். ரவியின் ஐரோப்பியப் பயணம் வெற்றிகரமாக அமையத் தமிழ்ப் பதிப்பாளர் வாழ்த்திப் பாராட்ட நிகழ்வு ஒன்றை நடத்தக் கேட்டேன். அவர் உடன்பட்டார்.
சென்னை காஸ்மோபாலிற்றன் கிளப்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. தமிழ்ப் பதிப்பாளர் பலர் கூடி வாழ்த்தி அனுப்பினோம். ரவியின் ஐரோப்பியப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.
கடந்த ஆறு ஆண்டுகளாக ரவி, ஐரோப்பாவில் நடத்திவரும் சாதனை யைத் தமிழ்ப் பதிப்புலகம் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை.
ரவி காட்சி நடத்தாத நாடுகள் ஐரோப்பாவில் இல்லை என்னும் அளவுக்கு, அங்குள்ள தமிழ் எழுத்தாள ரையும் தமிழ் வாசகரையும் ஒன்றிணைத்து ரவி செயற்படுகிறார்; தமிழ் நூல்களை ஐரோப்பியச் சந்தையில் நன்றாக விற்பனை செய்கிறார்.
மணிமேகலைப் பிரசுரத்தின் படையெடுப்புக்கு முன்னரே, ஐரோப்பியச் சந்தைக்குத் தமிழ் நூல்களைக் காந்தளகமும், திருமகள் நிலையமும், பிற சிறு ஏற்றுமதியாளரும் அனுப்பிக் கொண்டிருந்தனர். இலண்டனையும் பாரிசையும் மட்டுமே பெருமளவு நம்பியிருந்த இவ்வேற்றுமதியாளர் காணமுடியாத சந்தைகளை ரவி கண்டார்.
ஐரோப்பியக் கண்டத்தில் 47 நாடுகள் உள. (விவரம் படத்தில்) 70 கோடி மக்கள் வாழ்கின்றனர்.
ஒவ்வொரு 1,000 ஐரோப்பியருள்ளும் ஒருவர் தமிழர். 47 நாடுகளிலும் தோராயமாக ஏழு இலட்சம் தமிழர் வாழ்கின்றனர். (விவரம் அடுத்த பக்கப் பட்டியலில் காண்க)
தெற்காசியாவின் வேறு எந்த மொழி வழி இனமும் இத்தகைய மக்கள் தொகை அடர்த்தி விகிதாசாரத்தில் ஐரோப்பாவில் வாழ்வதில்லை என்பதை உளத்திருத்துக.
ஜெர்மனியில் 300 தமிழ்ப் பள்ளிகள், பிரான்சில் 130 தமிழ்ப் பள்ளிகள், பிரித்தானியாவில் 70 தமிழ்ப் பள்ளிகள், சுவிற்சர்லாந்தில் 50 தமிழ்ப் பள்ளிகள், யாவும் அவ்வவ் அரசுகள் அல்லது உள்ளூராட்சி அவைகளின் மானியத் தொகை பெற்று முறைப்படி நடைபெறுகின்றன.
சைவத் தமிழ்க் கோயில்கள் 100க்கு மேல் ஐரோப்பாவெங்கும் உள; கிறித்தவத் தமிழ்த் தேவாலயங்கள் 50க்கு மேல் உள.
தமிழ்ச் சங்கங்களும், தமிழர் கலாசார அமைப்புகளும் பெரு நகரங்கள் பலவற்றில் உள.
பாரிசில் இருந்து தமிழ் வார இதழ்கள் நான்கும், இலண்டனில் இருந்து இலவயத் தமிழ் வார இதழ்கள் ஆறும் வெளியாகின்றன.
மின்னிதழ்கள் பலவற்றையும், மின் உரையாடு தளங்கள் பலவற்றையும் தமிழ் ஆர்வலர்கள் நடத்திவருவதுடன், மின்னம்பலத் தமிழைப் பாரிய முறையில் வளர்த்தும் வருகிறார்கள். மின்புத்தகங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தோர் ஐரோப்பியத் தமிழரே.
பிரான்சிலும் பிரித்தானியாவிலுமாகத் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் ஆறும்,தமிழ் வானொலி பரப்புகள் 20க்கும் அதிகமானதாகவும், 24 மணிச் சேவையாக நடைபெறுகின்றன.
பாரிசில் முழுமையான தமிழ்ப் புத்தகக் கடைகள் இரண்டும், இலண்டனில் பகுதி நேரப் புத்தகக் கடைகள் நான்கும், சுவிற்சர்லாந்திலும் ஜெர்மனியிலும் ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் தமிழர் நடத்தும் தமிழிய மளிகைக் கடைகள் பலவற்றில் தமிழ்ப் புத்தகத் தட்டுகளும் இயங்குகின்றன.
பெருவணிகர்களாகத் தமிழர் பலர் ஐரோப்பாவெங்கணும் உளர். அங்குள்ள தமிழரின் பொருள் வாங்கும் பண வலு, தமிழ்ப் புத்தகங்களை வாங்குவதற்கு மிகையே.
இந்தத் தமிழ்ச் சூழ்நிலையே, மணிமேகலை ரவியின் ஐரோப்பியப் புத்தக விற்பனைப் படையெடுப்புக்கான அடித்தளம். அங்கே ரவி என்ன செய்கிறார் என்பதை விமர்சிக்கும் தமிழர் பலர், அங்கும் உளர், இங்கும் உளர்.
தமிழ் நூல்களுக்காக ஏங்கும் வாசகர், தமிழ் நூல்களைப் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர், இவர்களின் தமிழ்ப் புத்தக விடாயைத் தீர்க்க ரவி உதவுகிறார். வேறு யாரும் அந்த விடாய்க்கு உரிய முறையில் நீரூற்றவில்லை. அதனால் ரவி தளரா வெற்றியைக் கண்டுவருகிறார். வேறு யாராவது ரவியை விடச் சிறப்பாகச் செய்ய முடியுமானால், அத்தகையவரே வெற்றி பெறுவர்.
ரவியின் முயற்சிகள், தரமான எழுத்துகளா? தரமான பதிப்புகளா? இவை நல்ல வினாக்கள்.
தமிழ்ப் புத்தகச் சந்தை ஐரோப்பாவில் இருக்கிறது. இதை ரவியின் முயற்சிகள் உறுதி செய்துள. ரவியின் முன்னோடிப் பணியே, அந்தச் சந்தையின் அகல நீளங்களைப் புத்தக விற்பனையாளருக்கு உணர்த்தியுள்ளது.
அந்தச் சந்தை திறந்த சந்தை என்பதால், ரவியின் முயற்சிகள் மேலுள்ள நல்ல வினாக்களை எழுப்பி உள.
அச்சந்தை தரத்தைத் தேடுகிறது, புதிய முகங்களைத் தேடுகிறது.
இந்தச் சூழ்நிலையை உளத்திருத்தி, பிராங்பற்றில் அடுத்த ஆண்டு அக்டோபரில் நடக்கவுள்ள உலகப் புத்தகக் காட்சியை நோக்க வேண்டும்.
இந்திய அரசின் சிறப்பு அரங்கை, தேசியப் புத்தக அறநிலை, பிராங்பற்றில் அமைக்க உள்ளதால், அந்த அரங்கில் தமிழ்ப் பதிப்புலகம் முழுமையாகப் பங்கு பெற வேண்டும்.
இக்காட்சி பற்றிய அறிமுகக் கட்டுரையைக் கடந்த இதழில் பார்க்க.
ஐரோப்பாவின் இலையுதிர் காலத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்புலகம் கலந்து கொள்ளும் என்ற செய்தியை அங்குள்ள தமிழருக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டால் போதும், தேன் பொந்தை நாடுவோராக, ஐரோப்பாவிலுள்ள தமிழர் பலர், பிராங்பற்றிற்கு வருவர்.
புத்ததக் காட்சியில் கூடுவர், புத்தகங்களை வாங்குவர், புதிய அறிமுகங்களை மேற்கொள்வர்.
வாசகர் - எழுத்தாளர் சந்திப்புகள், எழுத்தாளர் - பதிப்பாளர் சந்திப்புகள், பதிப்பாளர் - விற்பனையாளர் சந்திப்புகள், எனத் தமிழ்ச் சூழல் களைகட்டும்.
தமிழ் எழுத்துகளை ஜெர்மன் மொழிக்குப் பெயர்க்க, பதிப்பிக்க, ஜெர்மனியில் உள்ள சிறு பதிப்பாளருக்கு, இக்காட்சியை ஒட்டி, இந்திய அரசு மானியம் கொடுக்க உள்ளது. தமிழக எழுத்தாளர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டாமா?
சிறு பதிப்பாளராகத் தமிழரும் ஜெர்மனியில் உள்ளதைப் புத்தக காட்சியில் கண்டு, சந்தித்து, தமிழ் எழுத்துகளை ஜெர்மன் மொழியில் வெளியிட முயலவேண்டாமா?
ஐரோப்பா எங்கணும் உள்ள தமிழ் ஊடகங்கள், பிராங்பற்றில் தமிழ்ப் புத்தகக் காட்சி நடக்குமெனின், முழுமையான ஆதரவைத் தந்து, ஐரோப்பியத் தமிழர் அனைவருக்கும் விவரங்களை முன்கூட்டியே தெரிவிப்பதுடன், காட்சி நாள்களில் நாள்தொறும் செய்திகள், நேர்முகப் பேட்டிகள், புத்தகங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடுவார்கள் அல்லவா?
மின்னஞ்சல்களும் மின் உரையாடல்களும் மேலதிக நேரமாகப் பணிபுரிந்து, தமிழருக்கு இந்தச் செய்திகளைப் பரிமாற மாட்டார்களா?
நல்ல தமிழ்த் தலைப்புகளை விற்பனைக்காகத் தேடி, தமிழகம் வர முடியாததால், புழங்கும் எழுத்தாளர்களையும் தலைப்புகளையுமே மீண்டும் மீண்டும் விற்கவேண்டியுளதே எனப் புழுங்கும் நூற்றுக்கணக்கான ஐரோப்பியத் தமிழிய மளிகைக் கடை வணிகருக்கு, பிராங்பற்றில் காட்சியாகும் பன்முகத் தமிழ்த் தலைப்புகள், வாழ்விக்க வரும் அரும் பொருளாகாதா?

0 Comments:

Post a Comment

<< Home