Tuesday, May 02, 2006

யாழ்ப்பாண அகராதியின் மீள்கண்டுபிடிப்பு

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
2,500 ஆண்டுகளின் முன்னர் உரிச்சொற் பனுவல் (தொல்காப்பியம்), 1200 ஆண்டுகளின் முன்னர் திவாகரம், 1000 ஆண்டுகளின் முன்னர் பிங்கல முனிவரின் பிங்கலம், பின்னர் மண்டல புருடரின் சூடாமணி நிகண்டு, கி.பி. 1594இல் இராவணாத்திரியரின் அகராதி நிகண்டு யாவும் நூற்பாவில் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழில் பொருள் சொல்லித் தொகுத்துத் தரும் முயற்சியில் நாம் அறியக் கூடியதாக உள்ள நூல்கள். இவை தவிரப் பல நூல்கள் நிகண்டு என்ற பெயரில் (உரிச்சொல் நிகண்டு, கயாதரம், பாரதி தீபம், ஆசிரிய நிகண்டு, கைலாச நிகண்டு, பல்பொருட் சூடாமணி, தமிழ் உரிச்சொற் பனுவல், அகராதி நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, நாநார்த்த தீபிகை) நம்மிடையே உள்ளன; மேலும் பல இருந்திருக்க வேண்டும், தேடவேண்டும். தமிழில் அகராதி தோன்றி வளர்ந்த விரிவான வரலாற்றை, எஸ். வையாபுரிப்பிள்ளை மற்றும் மு. சண்முகம்பிள்ளை ஆகியோர் எழுதியுள்ளனர். தொடர்ந்தும் பல ஆராய்ச்சியாளரின் தேடலில் இத்தேடல் பணி விரிவடைந்து வருகிறது.
அகர வரிசையில், உரைநடையில் கி.பி. 1732இல் வீரமாமுனிவர், சதுரகராதியை இயற்றினாராயினும் முழுமையாய் அச்சில் வந்தது கி. பி. 1824இலாம்.
பெயரகராதி எனப் பெயரிட்டு, உடுவில் சந்திரசேகர பண்டிதரும் சரவணமுத்துப்பிள்ளையும் கி. பி. 1842இல் யாழ்ப்பாணத்து மானிப்பாய் அமெரிக்க மிசன் அச்சகத்தில் அச்சிட்டு வெளிவந்த அகராதியே மிகப் பெரிய அகராதி. 58,500 சொற்கள் இந்த அகராதியில் உள. இருபாலை சேனாதிராச முதலியார் உள்ளிட்ட அக்காலத்து யாழ்ப்பாணத்துத் தமிழறிஞர் பலரின் ஆலோசனையைப் பெற்றே இந்த அகராதியை உருவாக்கினர். இந்த அகராதித் தயாரிப்புக்கான முழு முயற்சியையும் அமெரிக்க மிசனறியினரே மேற்கொண்டனர்.
சில ஆண்டுகளின் பின்னர் தமிழ்நாட்டில், களத்தூர் வேதகிரி முதலியார் 6,500 சொற்களைப் பின்னிணைப்பாகத் தொகுத்து இந்த அகராதியை வெளியிட்டார். காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு (கி. பி. 1893), மேலைப்புலோலி நா. கதிரவேற்பிள்ளை (கி.பி. 1901) ஆகியோர் பின்னர் இந்த அகராதியை விரித்துப் பேரகராதிகள் செய்து வெளியிட்டனர். இன்று வரை வெளியாகும் தமிழ் - தமிழ் அகராதிகளுக்கு, உடுவில் சந்திரசேகர பண்டிதரும் சரவணமுத்துப்பிள்ளையும் கி. பி. 1842இல் வெளியிட்ட, மானிப்பாய் அகராதி என்றும் யாழ்ப்பாண அகராதி என்றும் பின்னர் அழைக்கப்பெற்ற அகராதியே அடித்தளம்.
கி. பி. 1842இல் முதல் பதிப்புக் கண்ட, மானிப்பாய் அகராதி என்றும் யாழ்ப்பாண அகராதி என்றும் அழைக்கப்பெற்ற இந்த அகராதியைத் தமிழ் மண் பதிப்பகத்தினர், யாழ்ப்பாண அகராதி என்ற பெயரில், கி. பி. 2006இல் சென்னையில் வெளியிட்டுள்ளனர்.
19ஆம் நூற்றாண்டு வரை, தமிழ் மண்ணில் நிலவிய வட மொழி வல்லாண்மையை இந்த அகராதி சுட்டும். யாழ்ப்பாணத்துச் சொற்கள் மட்டும் கொண்ட அகராதி எனக் கொள்ளற்க. எனினும் ஈழத்து வட்டார வழக்குகளைத் தேடுவோருக்கு இந்த அகராதி சுரங்கம்.
பழைய பதிப்பின் பக்கங்களை நகலெடுத்து வெளியிடும் பிறரின் வழமையைத் தமிழ் மண் பதிப்பகத்தார் பின்பற்றாது, புதிதாக அச்சுக்கோப்புச் செய்து, பிழையறப் பதிப்பித்துள்ளனர். தமிழக, ஈழ நிலவரைப் படங்களை அட்டையில் அமைத்து, நல்ல தாளில், பெரிய எழுத்துகளில், தடித்த மட்டையுடனும், உறுதியான கட்டுடனும் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். கவிஞர் காசி ஆனந்தன், பேரா. ப. இரா. சுப்பிரமணியன், பேரா. இரா. இளங்குமரனார், தமிழ் ஆர்வலர் பூ. பத்மசீலன், பேரா. கா. சிவத்தம்பி, பேரா. எஸ். ஜெபநேசன், பேரா. எஸ். சிவலிங்கராஜா ஆகியோர் அணிந்துரை வழங்கியுளர்.
இந்தப் பதிப்பில் 500 படிகளைத் தன் முயற்சியால் இலங்கை முழுவதும் சந்தைப்படுத்தும் பாரிய பொறுப்பைக் கொழும்பு, சேமமடு பொத்தகசாலையினர் ஏற்றுக்கொண்டமை, சென்னைத் தமிழ் மண் பதிப்பகத்தாருக்கு மாபெரும் உந்துதலாகும். முதற்பதிப்பின் பழைய படிகளைத் தேடிக் கண்டுபிடித்து, பிழையற அச்சேற்றித் தரமான பதிப்பாகக் கொணர்ந்த பதிப்புச் செம்மல் கோ. இளவழகன், அதைவிடக் கடுமையான பணியான விற்பனையைத் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்ட தமிழ் ஆர்வலர் பூ. பத்மசீலன் ஆகியோருக்குத் தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெறும் வெளியீட்டு விழாவிலேயே 500 படிகளையும் விற்பனையாக்கி அக்கடமைப்பாட்டை வெளிக்காட்டத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு நல்வாய்ப்பு இவ்வெளியீட்டுவிழா.

0 Comments:

Post a Comment

<< Home